Rajinikanth officially announces his political stand today

அதிரடி அரசியல் அறிவிப்பு… ரஜினியின் அசர வைத்த பேச்சு!


சென்னை:
உலகமே பெரிதும் எதிர்ப்பார்த்த தனது அரசியல் அறிவிப்பை இன்று பெரும் ஆரவாரத்துக்கிடையே வெளியிட்டார் ரஜினி.

வரும் சட்டசபை தேர்தலில் அதிரடி அரசியலில் இறங்குவதாகவும், தனிக் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் ரசிகர்களிடையே அறிவித்தார் ரஜினி.

அவரது முழுப் பேச்சு:

ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. ரசிகர்கள் கட்டுப்பாடுடன், அமைதியாக போட்டோ எடுத்து சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கட்டுப்பாடு மட்டும் இருந்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நான் பில்டப் கொடுக்கவில்லை. தானாக பில்டப் கொடுக்கப்பட்டது. எனக்கு அரசியலுக்கு வருவது பற்றிய பயம் இல்லை. மீடியாக்களை பார்த்து தான் பயம். பெரிய பெரியா ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள். நான் ஒரு குழந்தை. எப்படி பயப்படாமல் இருக்க முடியும். நான் எதை பேசினாலும் அதை விவாதம் ஆக்கி விடுகிறார்கள். பத்திரிக்கையாளர் சோ இருந்திருந்தால் எனக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கும்.

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம்.

பேருக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. அதை நான் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு பல மடங்கு நீங்கள் ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டீர்கள். பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. அப்படி நான் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் 1996 லேயே அந்த நாற்காலி என்னைத் தேடி வந்தது. 46 வயதில் வராதா பதவி ஆசை, 68 வயதில் எனக்கு வருமா? அப்படி ஆசைப்பட்டால் நான் பைத்தியக்காரன். நான் ஆன்மிகவாதி என சொல்லிக் கொள்ள தகுதி இல்லாதவன்.

கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய். யுத்தத்தில் தோற்றால் இறப்பாய். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான் நிற்பேன். அதுக்கு முன்னாடி உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுக்கு நேரம் இல்லாததால போட்டியிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் முடிவெடுப்பேன்.

அரசியல் மிகவும் கெட்டு விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுபோய் உள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தலைகுனிய வைத்து விட்டது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். இப்போது நான் என்னை வாழ வைத்த தெய்வங்களான மக்களுக்க நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறேன். அப்போதும் நான் வரவில்லை என்றால் என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்ற குற்றஉணர்வு நான் சாகும் வரை எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

அனைத்தையும் மாற்ற வேண்டும், அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, வெளிப்படையான, நேர்மையான, ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். விருப்பம். தமிழக மக்கள் அனைவரும் அதற்கு என் கூட இருக்க வேண்டும். அரசியல் கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவது சாதாரண விஷயம் இல்லை. நடுக்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. கடவுள் அருள், மக்களின் நம்பிக்கை, அபிமானம், ஆதரவு, அன்பு இருந்தால் சாதிக்க முடியும். அது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அரசர்கள் அடுத்த நாட்டின் கஜானாவை கொள்ளை அடித்தார்கள். இப்போது ஜனநாயத்தின் பெயரால் ஆட்சிக்கு வருபவர்கள் சொந்த நாட்டையே கொள்ளையடிக்கிறார்கள். சிஸ்டத்தை மாற்றனும். அதற்கு எனக்கு தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்கள் உதவியோடு ஆட்சியமைத்தால், அரசிடமிருந்து உதவிகள் மக்களை சென்றடையும். யார் தப்பு செய்தாலும் தட்டி கேட்கும் காவலர்கள் வேண்டும். தகுந்த பதவிக்கு தகுந்த ஆளை நியமித்து வேலை பார்க்கிறார்களா என்பதை கண்காணிப்பதே எனது வேலை. பதிவு செய்யாத மன்றங்களையும் பதிவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும். இது சினிமா இல்லை, நாம் காவலர்களாய் மாறப்போகிறோம், நாம் மட்டும் போதாதது. பெண்கள், இளைஞர்கள் அனைவரையும் நமது மன்றத்திற்கு கொண்டு வர வேண்டும்.

இப்போதைக்கு விமர்சனங்கள் செய்யப்போவதில்லை. அறிக்கை விடவும், போராட்டம் பண்ணவும் நிறைய பேர் உள்ளனர். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெறுவோம். சட்டசபை எப்போது வருகிறதோ அதற்கு முன்பு உரிய நேரத்தில் கட்சி ஆரம்பிப்போம். நாங்கள் எதை எதை செய்யப்போகிறோம், செய்ய முடியாது என்பதை முதலிலேயே அறிவிப்போம். செய்ய முடியாவிட்டால் 3 வருடங்களில் ராஜினாமா செய்வோம் என வாக்குறுதி அளிப்போம். நமது தாரக மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. ஒவ்வொரு கிராமங்களிலும், தெருக்களிலும் மன்றங்களை வலுப்படுத்த வேண்டும்,” என்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!