கருணாநிதியுடன் சந்திப்பு: அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துப் பெற்றார் ரஜினி! - VanakamIndia

கருணாநிதியுடன் சந்திப்பு: அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துப் பெற்றார் ரஜினி!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் ரஜினிகாந்த்.

கடந்த 31-ம் தேதி அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த ரஜினிகாந்தின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழகத்தையே அதிர வைத்துக் கொண்டுள்ளன.

ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு ஆள்சேர்க்கை இணைய தளம், ஆன்ட்ராய் ஆப் என அறிவித்ததுடன், செய்தியாளர்களையும் சந்தித்தார்.

இன்று திமுக தலைவரும் தனது நண்பருமான கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மாலை 8 மணிக்கு இந்த சந்திப்பு நடந்தது. தகவல் முன்கூட்டியே பரவியதால் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு முன் ஏராளமான செய்தியாளர்களும் ரஜினி ரசிகர்களும் குவிந்தனர்.

ரஜினி கோபாலபுரம் வந்தபோது ரஜினியின் ‘காவலர்கள்’ முதல்வர் ரஜினி, நாளைய முதல்வர் ரஜினி வாழ்க என்றெல்லாம் வாழ்த்தொலி எழுப்பினர்.

கருணாநிதியைச் சந்தித்த பிறகு வெளியில் வந்த ரஜினி, “கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றேன். அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன்,” என்றார்.

இந்தச் சந்திப்பின்போது திமுக செயல் தலைவர் முக ஸ்டாலினும் உடனிருந்தார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!