Rajini told his god does not have any religion

‘என் கடவுளுக்கு மதம் இல்லை’ – 25 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொன்ன ரஜினிகாந்த்!


சென்னை: ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் பற்றி பலரும் பலவிதமாக கருத்து சொல்லி வருகிறார்கள். ஆன்மீகம் என்றால் இந்துத்துவா என்று திமுகவினர் புதிதாக ஒரு அர்த்தத்தை கற்பித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் நடிக்க வந்த தொடக்க காலத்திலிருந்தே ஆன்மீக வாதியாக அறியப்படுகிறார்.

சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஆன்மீகம் பற்றியும் விபூதி பூசுவது பற்றியும் ’பொம்மை’ இதழில் ரஜினிகாந்த் இப்படிக் கூறியுள்ளார்.

“ஆன்மீகவாதியாக இருக்கும் நீங்க ‘நான் வெஜிடேரியனா’ இருக்கலாமான்னு சிலர் கேக்குறாங்க. எம்மதமும் சம்மதம்னு சொல்றீங்க ஆனா இந்துமதப் பிரகாரம் விபூதி பூசுறீங்களேன்னு வேறெ சில பேர் கேக்குறாங்க.

ஆன்மீகவாதியாக இருந்தா நான் வெஜிடேரியன் சாப்பிடக்கூடாதுன்னு யார் சொன்னாங்க. ஒருத்தன் என்ன சாப்பிடுறான்னு முக்கியம் இல்லே. எப்படி வாழுறான்கிறது தான் முக்கியம்.

இவனால அடுத்தவங்களுக்கு உபகாரமா இருக்க முடியுதா? இல்லே உபத்திரமா இருக்கானா? அப்படீங்கிறதை வச்சுத்தான் அவன் ஆன்மீகவாதியா இல்லையான்னு முடிவு பண்ணனும். அன்பும் மனித நேயமும் மட்டுமே ஒருத்தனை ஆன்மீகவாதியாக நமக்கு அடையாளம் காட்டுது.

அடுத்த கேள்வி நான் விபூதி பூசுறது பத்தி.. சின்ன வயசிலேருந்தே எனக்கு ஏற்பட்ட பழக்கம் தான் விபூதி பூசறது. அதானல இன்னிக்கும் நான் விபூதி பூசிக்கிறேன். விபூதி பூசுறதை வச்சுகிட்டு நான் இந்து மதத்தைச் சார்ந்தவன்னு குற்றம் சொல்றதிலே அர்த்தம் இல்லே. ஏன்னா, என்னோட கடவுளுக்கு ‘மதம்’ கிடையாது

உலக அமைதிக்காகவும் மனித சமாதானத்திற்காகவும் நான் மத சமரசத்தை வரவேற்கிறேன். ஆனா, தனிப்பட்ட மதத்தின் மேலே வெறி கொள்றதை.. அந்த மதத்திற்காக சார்ந்து பேசுறத நான் என்னிக்குமே விரும்பினதில்லே”

இது ரஜினிகாந்த் எழுதிய தொடரில் 1992ம் ஆண்டு, பொம்மை ஜனவரி 1ம் தேதி இதழில் வெளியானதில் ஒரு பகுதி ஆகும். ஆன்மீகம் பற்றி வெளியே போய் தெரிஞ்சிக்க வேண்டியதில்லை. ரஜினியே அதைப் பத்தி தெளிவாகவே சொல்லி இருக்கிறார். குறிப்பாக என் கடவுளுக்கு மதம் இல்லை என்று 25 ஆண்டுகளுக்கு முன்னாடியே அவர் சொல்லியிருப்பதை கவனிக்க வேண்டும்.

– நன்றி : பொம்மை

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!