132 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி! - VanakamIndia

132 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி!

டெல்லி: 132 ஆண்டுகள் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் அதாவது சுமார் 19 ஆண்டுகள் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி.

கடந்த சில ஆண்டுகளாக சோனியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதன்பிறகு தீவிர கட்சிப் பணிகளிலும் அரசியலிலும் ஈடுபடவில்லை.

வீட்டில் இருந்தபடியே கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்துப் பேசி, ஆலோசனை நடத்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுத்து வந்தார். மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்த போது கூட அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் 2019-ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியாகாந்தி விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி கடந்த 11-ந்தேதி போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இன்று (சனிக்கிழமை) ராகுல்காந்தி முறைப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கான விழா இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

ராகுல் தலைவராக பொறுப்பு ஏற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக அதிகாலையில் இருந்தே காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்கள் சோனியா-ராகுலை வாழ்த்தி கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

சரியாக 11 மணிக்கு சோனியாவிடம் இருந்து தலைவர் பதவியை ராகுல் பெற்றார். இதையடுத்து ராகுலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு ராகுல் தலைவராக பொறுப்பேற்றதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!