ஜியோவுக்கு சவால்... ஏர்செல்லுடன் இணைந்தது அனில் அம்பானியின் ரிலையன்ஸ்! - VanakamIndia

ஜியோவுக்கு சவால்… ஏர்செல்லுடன் இணைந்தது அனில் அம்பானியின் ரிலையன்ஸ்!

மும்பை: தொலைத் தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர்.காம்) நிறுவனமும், ஏர்செல் (மேக்சிஸ் கம்யூனிகேஷன் பெர்ஹாட்) நிறுவனமும் ஒன்றாக இணையவுள்ளன. அதன்படி, அந்த இரு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ரூ.65,000 கோடி மதிப்பீட்டில் புதிய நிறுவனம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.

தொழிலதிபர் அனில் அம்பானியின் ‘ஆர்.காம்’ நிறுவனமானது செல்லிடப்பேசி சேவை, பிராட்பேண்ட், தரவு (டேடா) மையங்கள், தொலைக்காட்சி அலைவரிசை, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு சேவைகளை தற்போது வழங்கி வருகிறது. அவற்றில் கம்பியில்லா தொலைத் தொடர்பு சேவைகளை (வை – ஃபை) மட்டும் ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இனி வரும் காலங்களில் செல்லிடப்பேசி சேவைகள், வை – ஃபை இணைய சேவைகள் உள்ளிட்டவற்றை ஆர்.காம் – ஏர்செல் ஆகியவற்றின் புதிய நிறுவனம் இணைந்து வழங்கும்.

இந்த இரு நிறுவனங்களும் ஒருங்கிணைவதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலும், வருவாயின் அடிப்படையிலும் நாட்டின் நான்காவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக அது உருவெடுக்க உள்ளது.

மேலும், அதிக அலைவரிசைகளைக் கொண்ட இரண்டாவது நிறுவனமாகவும் அது இருக்கப்போகிறது. இந்தப் புதிய நிறுவனத்தில் ஆர்.காம் மற்றும் ஏர்செல் நிறுவனங்களுக்கு சரிசமமாக பங்குகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது தலா 50 சதவீதப் பங்குகள் இரு நிறுவனங்களுக்கும் அதில் உள்ளது. நிர்வாகக் குழு மற்றும் வாரியம் ஆகியவற்றிலும் அதன் அடிப்படையிலேயே உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

இந்த இணைப்பு நடவடிக்கையின் வாயிலாக ஆர்.காம் நிறுவனத்துக்கு இருக்கும் கடன் தொகை ரூ.20,000 கோடி குறையும் என்று தெரிகிறது. அதேபோல், ஏர்செல் நிறுவனத்துக்கும் ரூ.4,000 கோடி மதிப்பிலான கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது.
ஆர்.காம் – ஏர்செல்லின் ஒருங்கிணைந்த புதிய நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.65,000 கோடியாகவும், நிகர மதிப்பு ரூ.35,000 கோடியாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வை – ஃபை சேவைகளைத் தவிர்த்து தரைவழி தொலைபேசி, பிராட்பேண்ட் இணையதளம், கண்ணாடி இழை (ஃபைபர் ஆப்டிக்) கேபிள்கள் வழியாக தரப்படும் டேட்டா சேவைகள் உள்ளிட்டவற்றை ஆர்.காம் நிறுவனம் தனியாக வழங்கும் என்றும், அவற்றுக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஜியோ என்ற பெயரில் தொலைத தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை உண்டாக்கியுள்ள நேரத்தில், அதற்கு சவாலை உருவாக்கும் வகையில் ஆர் காம் – ஏர்செல் கூட்டு அமைந்துள்ளது.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!