'மோடி கோட்டில்' இந்தியத் தன்மையா? இங்கு உடை கூட அரசியல் தானே! - VanakamIndia

‘மோடி கோட்டில்’ இந்தியத் தன்மையா? இங்கு உடை கூட அரசியல் தானே!

திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி, செந்தில் சட்டையில் ரோஜாப் பூ வைத்திருப்பார்.சட்டையில் என்ன? என்று கவுண்ட மணி கேட்பார் .செந்தில் ரோஜாப் பூ என்று பதில் சொல்வார். அதைக் கேட்டவுடன் கவுண்ட மணி பெரிய நேரு பரம்பரை, ரோஜாப் பூ வைக்காம வரமாட்டார் என்று சொல்லி அந்த பூவை கசக்கி ஏறிந்து விடுவார். காட்சியாக பார்த்தால் நகைச்சுவையாக இருக்கும். ரோஜப்பூவை யார் வேண்டுமானாலும் வாங்கி சட்டையில் வைக்கலாம். ஆனால் ரோஜாப் பூ வைப்பதற்கே நேரு போன்ற குடும்பத்தில் பிறக்கவேண்டும் என்று நம் மனதில் பதிந்தது எப்படி?

அம்பேத்கர் கோட் போட்டதிற்கும் , காந்தி சட்டையை கழட்டியதிற்கும் காரணம் அரசியல். இந்த தேசத்தில் இந்த உடைக்கு கூட வழி இல்லாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாகத்தான் வட்டமேஜை மாநாட்டிற்கு வந்துள்ளேன் என்பது தான் காந்தி சொல்ல விரும்பிய செய்தி.அம்பேத்கார் உடை மூலம் உணர்த்தியது? இத்தனை காலம் எங்களை தொட்டால் பாவம், நாங்கள் துண்டை இடுப்பில் கட்ட வேண்டும் ,மேல் சட்டை அணியக் கூடாது, படிக்க கூடாது என்று ஒதுக்கி வைத்திருந்தீர்கள். இன்று நான் படித்து பட்டம் பெற்று உங்களைப் போல் வந்து விட்டேன் . இங்கிலாந்து துரைமார்கள் அணிகின்ற உடையே அணிகிறேன் . என்னை பார்த்து எம்மக்கள் அணிவார்கள் . உடையில் என்ன உயர்வு தாழ்வு ? இங்கு எல்லோரும் சமம் உடை அணிவது உட்பட.

ஜீன்ஸ் பேண்ட், ஹூ, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு எங்கள் வீட்டுப் பெண்களை நாடகக் காதல் புரிந்து ஏமாற்றுகிறார்கள் என்ற அறிக்கையின் உட்பொருள். காதலை எதிர்ப்பதோடு நீங்கள் எல்லாம் நாகரிக உடை அணியலாமா ? நேற்று வரை எங்களைப் பார்த்தால் இடுப்பில் துண்டை கட்டியவர்கள், எங்களை பார்த்தால் பயந்தவர்கள். இன்று எங்களை போல் உடை அணிவதைக் கண்டு பொறுக்க முடியவில்லை என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு தான் . இப்போது அம்பேத்கரின் கோட் அணிதலை இதோடு பொருத்திப் பாருங்கள்.

உடைக்கு இவ்வளவு முக்கியத்துவமா? ஆமாம் . முக்கியத்துவம் தான்! இல்லை என்றால் ஒரே ஒரு நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து கோட் சூட் எடுப்போமா ? தமிழகம் போன்ற வெப்பமான பகுதிகளில் மற்ற நாட்களில் கோட்டுக்கு என்ன வேலை? இல்லை கட்டாயம் கோட் அணிந்து வேலைக்கு வரச்சொல்கிறார்களா?

நீயா , நானா விவாத நிகழ்ச்சியில் கோபிநாத் கோட் அணிவதன் உளவியல் காரணம் , கோட் மேலை நாட்டினரின் உடை . அவர்களைப் போல் உடை அணிந்தவர் சொன்னால் தீர்ப்பு சரியாக இருக்கும் என்று உடை மூலம் பதிய வைக்கும் உளவியல் உத்திதான் அது.

மேலை நாட்டு பிளேசரை விட ”மோடி கோட்டில்” இந்தியத் தன்மை இருக்கிறது . அதனால் அணிகிறேன் என்கிறார் தந்தி டிவி ரங்கராஜ பாண்டே 16/ 06 / 2016 தேதி இட்ட ஆனந்த விகடன் பேட்டியில். சரி அதை தமிழகத்தில் அணிய வேண்டிய அவசியம் என்ன ? அந்த பேட்டியில்
அவரிடம் கேட்கப்பட்ட வேறு கேள்வி ஒன்றைத் தருகிறேன் . விடையை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளலாம். ”நீங்கள் ஆர்.எஸ்.எஸ். ஸில் உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள் என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும் . ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”.

கடவுள் மறுப்பு கொள்கையை பிரச்சாரப்படுத்தும் திராவிடக் கழக கட்சியினர் கருப்புச் சட்டை அணிவது வழக்கம்.ஒருமுறை திராவிடக் கழக கட்சியின் நிகழ்ச்சிக்கு நடிகர் கமலஹாசன் கருப்புச் சட்டை அணிந்துவந்தார். அது மட்டும் அல்லாது நானும் உங்களில் ஒருவன் தான் என்று விழா மேடையில் பேசினார். எந்த மத அடையாளமும் , கடவுள் வழிபாடுக் குறியீடும் வேண்டாம் என்பவர்களுக்கு கூட கருப்புச் சட்டை என்ற குறியீடு தேவைப்படுகிறது. அதுதான் கருப்புக்குள் காவியும் அடக்கம் என்ற சொல்லாக வெளிப்படுகிறது.

குண்டுமணி தங்கம் வாங்கவே வருடம் முழுவதும் உழைக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் பளபளக்கும் பட்டு ஆடை ,உடல் முழுவதும் நகையோடு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதலமைச்சர் தன் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு நடுச் சாலையில் பவனிவந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான்.

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழிதான் . தான் சொந்த வேலைக்காக நகரப்பேருந்தில் பயணிக்கும் காக்கி பேண்ட் , வெள்ளைச் சட்டைக் காவலர்கள் பெரும்பாலும் டிக்கெட் எடுப்பது இல்லை. காவலர்களுக்கு மப்டி உடை என்பதே காக்கிப் பேண்ட் , வெள்ளைச் சட்டை என்ற
சீருடை ஆகிவிட்டது. சீருடை அணியாத சமயத்தில் அதிகாரத்தை நிலை நாட்ட உதவும் குறியீடாக அது உதவுகிறது.

ரயிலில் முன்பதிவு பெட்டி ,குளிர்வசதிப் பெட்டி என சகல பெட்டிகளிலும் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் உரிமை யாருக்கு என்றால் ? மேல் சட்டை பாக்கெட்டுக்கு வெளியே தெரியும் படி ரயில்வே யூனியனின் உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர் தான். டி.டி.ஆர் அவரிடம் மறந்தும்
டிக்கெட் கேட்க மாட்டார் .

வேட்டி கட்டிய மத்திய நிதி அமைச்சர் பார்லிமெண்டில் பட்ஜெட் சமர்ப்பிக்கும் நாட்டில் தான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பாருக்கு செல்ல ஹூவும் ,பேண்ட்டும் அணியவேண்டும் என்ற தனியார் விதி உள்ளது.

ஆளும் கட்சியோ , எதிர்க்கட்சியோ, வட்டமோ , மாவட்டமோ பளிச்சன தெரியும் வெள்ளைச் சட்டை பாக்கெட்டில் தலைவன் / தலைவி படத்தை வைக்காவிட்டால் தமிழ் நாட்டில் நாம் அவரை அரசியல்வாதி என்றே ஒத்துக்கொள்ள மாட்டோம். இப்படி தனிமனித வழிபாடு கூடாது என கட்சித்
தலைமையும் சொல்லாது. எப்படி சொல்லும் ? வளர்ப்பதே அவர்கள் தானே.

ஏன் என்றால் இங்கு உடை என்பது உடையாக பார்க்கப் படுவதில்லை. இங்கு உடை கூட அரசியல் தான்!!

கொசுறு:- விடுமுறை நாளில் வேலை செய்ய அரை டவுசர் போட்டுக் கொண்டு வர சில அலுவலகங்கள் அனுமதி அளிக்கிறது. ஆனால் அங்கு கூட வேட்டி அணிய அனுமதி இல்லை. போகும் போது விட்டு போய் விடுவார்கள் என்ற முன் எச்சரிக்கையா ? இல்லை காத்தோட்டமா இருக்கட்டும் என்று கழட்டி வைத்துவிட்டு வேலை செய்வார்கள் என்ற பயமா ? தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

– காளிச்சரண் சுந்தரம்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!