Oru Nalla Naal Paarthu Solren Review

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – விமர்சனம்

கதைக்களம் ஆரம்பிப்பது ஆந்திர மாநிலம் எமசிங்கபுரம் என்ற ஒரு மலை கிராமம். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் திருடுவது மட்டுமே குலத்தொழில். இந்த கூட்டத்திற்கு இளவரசனாக வருகிறார் விஜய் சேதுபதி. எமனையே முதற்கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர்.

தனது நண்பர்கள் இருவருடன் திருடுவதற்காக சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு நாயகி நிகாரிகாவை சந்திக்கிறார். அவரை கடத்திச் சென்று விட வேண்டும் என்று சில திட்டங்கள் போட்டு தோல்வியடைந்தாலும், இறுதியாக அவரை கடத்தி தனது கிராமத்திற்கு சென்று விடுகிறார் விஜய் சேதுபதி.

நிகாரிகாவை 15 நாட்கள் மட்டுமே சந்தித்து பேசி, பழகிய கெளதம் கார்த்திக், அவரைக் காப்பாற்ற அந்த எமசிங்கபுரத்திற்குள் நுழைகிறார். எதற்காக விஜய் சேதுபதி நிகாரிகாவை கடத்திச் செல்கிறார்..? காப்பாற்ற சென்ற கெளதம் கார்த்திக்கின் நிலை என்ன..? என்பதே படத்தின் மீதிக் கதை.

விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது கதாபாத்திரத்திற்கு தேவையானதை செம்மையாகவே பூர்த்தி செய்திருக்கிறார். அதே யதார்த்த நடிப்பு, டைமிங் என தனக்கேற்ற வேலையை நிறைவாகவே செய்து முடித்திருக்கிறார்.

கெளதம் கார்த்திக் சினிமா கேரியரில் நிச்சயம் இப்படம் அவருக்கு ஒரு மைல்கல் தான். துருதுருவென தனது கேரக்டருக்கு தேவையானதை கொடுத்திருக்கிறார்.

நாயகி நிகாரிகா தமிழ் சினிமாவில் ஒரு புதுவரவு. இன்னும் சில தமிழ் படங்கள் இவருக்காக காத்திருக்கின்றன. களையான முகம், நகைச்சுவை கலந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். காயத்ரி வழக்கம் போல தன் கண்களாலும், அசையாமல் பேசும் உதடுகளாலும் கவர்கிறார்.

காமெடி என்ற பெயரில் ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனி என மூவரும் கொஞ்சம் பொறுமையை அளவுக்கு அதிகமாகவே சோதிக்கிறார்கள். கெளதம் கார்த்திக் கொஞ்சம் ஓவர் டோஸ் அடித்திருக்கிறார். ஆறுதலாக விஜய் சேதுபதி வந்து சென்றாலும் கதை என்ற ஒன்றை படம் முழுக்க நாம் தேடிக் கொண்டுதான் இருக்க வேண்டிருக்கிறது. இறுதி வரை அது நமக்கு கிடைக்கவில்லை என்பது தான் சோதனை.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம், பின்னனி இசையில் ஏற்றம் இறக்கத்தை காண்பித்து மிரட்டியிருக்கிறார்.

ஸ்ரீ சரவணின் ஒளிப்பதிவில் காட்சிகளை ரசிக்கலாம்…

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – பாத்து போங்க மக்களே….!

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!