பொருளாதாரப் புற்றுநோய்க்குப் புளுகுச் சான்றிதழா? கவிப்பேரரசுக்கு ஒரு கவிஞனின் கடிதம்..! - VanakamIndia

பொருளாதாரப் புற்றுநோய்க்குப் புளுகுச் சான்றிதழா? கவிப்பேரரசுக்கு ஒரு கவிஞனின் கடிதம்..!

அன்புள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு எளிய கவிஞனின் இதயம் திறந்த மடல்..

எனது இதயத்தில் எப்போதும் உங்கள் நிழற்படத்தை வைத்துக் கொண்டாடியது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்த ஏகலைவனுக்கு உங்கள் ‘திருத்தி எழுதிய தீர்ப்பு’ துரோணத் தமிழாய் இருந்தது. ஒரு முறுக்குத் தமிழை உங்கள் மொழியாளுமையில் கண்டு கிறுக்குப் பிடித்து அலைந்திருக்கிறேன்.

காஞ்சித் தலைவன் அண்ணாவுக்காக நீங்கள் எழுதிய “தெய்வங்கள் எல்லாம் தேரேறி வந்தன பொய்தான் தாமென்று புலம்பிப் போயின” என்ற வரிகளை கவிஞர் வெண்மணி ஒரு நள்ளிரவில் சொன்னபோதுதான் முதன் முதலாக உங்கள் சொற்களில் சொக்கிப்போனேன். ‘இது என்ன தம்பி, திருத்தி எழுதிய தீர்ப்புகள் படித்துப்பார்’ என்று அண்ணன் சோலை இளம்பரிதி சொன்னதும் சென்னைக்குப் பயணமாகிறேன். அப்படி என்ன அந்தத் தொகுப்புக்குள் இருக்கும் என்கிற தீராத தினவும் கனவுமாகப் பேருந்தில் திமிறிக்கொண்டிருக்கிறது எனது மனம்.

திருவல்லிக்கேணி விஜயா பதிப்பகத்தில் வாங்கிய அந்த மஞ்சளட்டையில் ஓவியர் உபால்டுவின் பேனா முள்ளின் அருகில் இரா. வைரமுத்து என்கிற பெயர். உங்கள் கையெழுத்திலேயே எழுதப்பட்ட சில பழைய தமிழ் வரிகளை பெருக்கல் குறியில் அடித்துவிட்டு மேலே திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்கிற தலைப்பு. காதலியைச் சந்திக்கப் போகும் ஒரு காதலனின் கிறங்கிய மனநிலையில் புத்தகத்தை மார்பில் அணைத்தபடி அருகில் அண்ணா சாலை முனையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்குள் நுழைகிறேன். ஒரு பெரிய காட்டு வாழைமரம் தனது ராட்சச நிழலை விரித்து வைத்திருந்தது. அந்தக் கறுப்புப் பாயின் மேல் அமர்ந்து வாசிக்க ஆரம்பிக்கிறேன். என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது எல்லாக் கவிதைகளையும் வாசித்த பிறகுதான் நான் விடுதிக்கு மீண்டும் திரும்பி வருகிறேன். விடுதியை விட்டு வெளியே வந்துவிட்டாலும் தொகுப்பிலிருந்து வெளிவரவே முடியவில்லை.

வாழ்க்கையின் தேடலில் பல இடங்களுக்கு பயில சென்றவன் மீண்டும் சென்னைக்குப் பல ஆண்டுகள் கழித்து வருகிறேன். ராணி வார இதழும் என்ஃபீல்டு நிறுவனமும் இணைந்து நடத்திய கவிதைப்போட்டியில் நீங்களும் உங்கள் துணைவியாரும் சேர்ந்து தேர்ந்தெடுத்ததில் முதற்பரிசு வென்று உங்கள் கைகளால் வாங்குகிறேன். வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கிறேன். எந்தக் கவிஞனை வேறு யாரைவிடவும் அதிகமாக உச்சிமோந்து உள்ளத்தில் சூடியிருந்தேனோ அவன் கையாலேயே பரிசா? நான் பத்திரமாய் வைத்திருந்த உங்கள் முதல் தொகுப்புடன் உங்களை வீட்டில் சந்திக்கிறேன். “முதல் பதிப்பினைப் பாதுகாக்கும் முதல் தரமான கவிஞன் குமரனுக்கு என் அன்பு – வைரமுத்து” என்று கையெழுத்திடுகிறீர்கள்.

இன்றுபோல் இருக்கிறது. ஆனால் இன்றுதான் அன்று போல் இல்லை. பிரதமர் மோடியின் கவிதையை வெளியிட்டு நீங்கள் ஆற்றியிருக்கும் உரை உண்மையிலேயே உங்கள் மனசிலிருந்து ஆற்றியதுதானா? என்ன சொன்னீர்கள்? எழுத்தின் கழுத்துக்குத் தாமரைத் தண்டு போலவா? தண்டில் எத்தனை தற்கொலைகளென்று தாங்கள் அறியாததா? தேயிலையில் வாழ்க்கை தொடங்கி அரசியலில் தேயா நிலை அடைந்த ஒரு பெரும் தலைவனா? அவருடைய பிம்ப வீழ்ச்சியை நீங்கள் நம்பவில்லையா?

‘‘என் மனப் பஞ்சத்தில் எனக்குக் கிடைத்த அட்சயப் பாத்திரம் மோடி’’ என்கிறீர்கள். எத்தனை பேரிடம் பிச்சைப் பாத்திரம்? உங்கள் கண்க ளுக்கு எதுவும் காட்சி தரவில்லையா? மனிதன் மதிக்கும் பணத்தை மதிப்பிழக்காமல் செய்த ஒரு இந்தியத் தந்தை, ஆயிரமும் ஐநூறும் தேயுற்றுக் கிடக்க, அதற்கு நீரூற்றி வேரிட்டு வேறிடம் போகச் செய்த ஒரு தேர் வடமென்று, எந்தச் செயல் இந்தியாவை மந்தமாக்கியதோ அதற்கு உங்களிடமிருந்து இந்தப் புகழாரமா? பொருளாதாரப் புற்றுநோய்க்குப் புளுகுச் சான்றிதழா?

இவரின் சிறந்த வரி என்பது ஜி எஸ் டி வரியா? பின்பு ஏன் இந்தியா முழுவதும் கொதித்தெழுந்தபோது அது குறைந்த வரியானது? ‘‘கிறுக்கர்களே, இவன் முன்பு செருக்கர்களெல்லாம் கருகப் போவது திண்ணம்.’’…இது உண்மையான உணர்ச்சியின் உக்கிரமா? நன்றாயிருக்கிறது கவிப்பேரரசே உங்கள் திராவிட எண்ணம். கில்லி அடிக்கக் கற்றுத் தந்த தமிழகத்தை விட்டு டில்லி அடிக்கப் புறப்படும் நாள் புலர்ந்தது உங்களுக்கு.

யாருக்குக் கப்பம் கட்டுவ தற்காக இந்தக் கவிதை வரிகள் கவிப்பேரரசு? உங்கள் கவிதையை இந்தியின் முந்திக்குள் முந்திக்கொண்டு செருக ஆசைப்படுகிறீர்கள். அதில் தவறில்லை. தமிழின் சேலைக்குள்ளும் வேட்டிக்குள்ளும் எதைச் செருக இந்த முயற்சி? இது ஞான பீட விருதுக்கான காக்கைக் குளியல் என்றும் அரசியல அணிச் சேர்க்கைக்கான பரிசோதனை அச்சாரம் என்றும் வெளியில் ஒரு பேச்சு அடிபடுகிறது. துயரங்களின் மடியில் மடிந்து கொண்டிருக்கிற மக்களுக்கு எதிராக இப்படியொரு நிலைபாடா? குரலற்ற மக்களுக்கு நாக்காக இருக்க வேண்டிய கவிஞன் வாலாகக் குழையும் வரலாறு என்ன? சுயநலத்தில் ஊற்றெடுக்கும் சொற்கள் நாக்கின் சுமைகள் அல்லவா? தலைவர்களின் உருவாக்கம் ஏதோ தகவல் பிழைகளால் ஆனதா என்ன? பொய்யுரைகளாலும் புனைந்துரைகளாலும் செதுக்கப்படுவதா சிம்மாசனங்கள்? மானுடத் தொழிற்சாலையில் இதயம் அக்கினியில் இடப்பட்ட ஓர் இரும்பைப்போல உருக்கி வார்க்கப்படுகிறது.

சித்ரவதைகளால் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட ஒருத்திதான் சோனி சோரி. சத்தீஸ்கரில் பழங்குடி மக்களின் பாதுகாப்பு அரணாக மாறியதற்கு அவளது ஆறாத ரணங்கள். உறிஞ்சப்பட்ட ஒவ்வொரு ரத்தத்துளியிலிருந்தும் உருவெடுத்த காட்டுத்தாய். அவள்மீது ஏவப்பட்ட வன்முறையிலிருந்தே முளைத்தெழுந்த அகிம்சை மாமரம். ஓநாய்களின் மைதானத்தில் வாழ்க்கை விளையாட்டில் களமிறங்கும் சாத்வீக ஆடு. இந்திய தேசத்தில் இப்படித்தானே ஓர் அரசியல் தலைவி உருவாக வேண்டும். எப்போதோ தேநீர் விற்றதைப் பெருமையாகப் பேசுவதே ஒரு தலைவனுக்கான தகுதியாகிவிடுமா? தேச விற்பனையைத் தடுப்பவனாக மாறியாக வேண்டும் ஒவ்வொரு தேநீர் விற்பனையாளனும்…இல்லையா? ஓர் இந்தியன் வாழ்க்கையை எப்படி அணுகு கிறான் என்பதை எத்தனை பேர் அறிகிறார்கள்?

ஆயிரம் குறைபாடுகளுள்ள பார்வைகளால் நிறைந்திருக்கிறது இந்த தேசத்தின் கண்கள். இருட்டுக்குப் பழகிய கண்கள். இந்தியனின் கண்கள் இருட்டை ஆராதிக்கிறது, வெளிச்சத்தை வேவு பார்க்கிறது. ஒரு பிச்சைக்காரனை ஏலாதவனாகவே பார்க்கப் பழகி விட்ட கண்களுக்கு அவனது வரலாறு தெரிவதில்லை. வீட்டுக் கட்டுமான வேலையில் மிகப் பெரிய வாழ்க்கை நடத்திய திவாகர் சிங் தனது மகளின் கொடூர நுரையீரல் நோய்க்கான மருத்துவ செலவுக்காக எல்லா சொத்தையும் வருமானத்தையும் இழந்து தெருவுக்கு வந்தவர். அவருக்கு சமூகம் இட்ட பெயர் பிச்சைக்காரன். விவசாயி விஜய் பகதூர் சிங் தனது மகனை மாட்டுச்சந்தையில் தொலைத்துவிட, வீடில்லாத மனிதன் சலீம் எடுத்து வளர்க்கிறார். போலா என்கிற அந்த அனாதைப் பிள்ளைக்கு சமூகம் வைத்த பெயர் பிச்சைக்காரன்.

அரசாங்கத்தின் மெத்தனத்தையும் செயலற்ற அலட்சியத்தையும் விமர்சிப்பதோடு நிற்காமல் பிக்ஷாவிருத்தி முக்தி அந்தோலன் என்கிற சேவை நிறுவனம் நடத்தும் ஒரு சாதாரண மனிதனான சரத் பட்டேல் முக்கியமானவர் இல்லையா? இருட்டைச் சபித்துக்கொண்டே ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி வைக்கிறார். அவரது முயற்சியால்தான் போலா ரிக்ஷாக்காரராக மாறுகிறார். திவாகர் சிங் மீண்டும் வாழத் தொடங்குகிறார். பிச்சைக்காரர்கள்மீது மனிதர்களின் அணுகுமுறையை மாற்றி அமைக்கிற செயல் உன்னதமானதல்லவா?

நீங்கள் வெளியிட்ட மோடியின் கவிதைத் தொகுதியில் இந்த முகத்தில் ஏதேனுமொன்றைப் பார்த்திருக்கிறீர்களா கவிப்பேரரசு? அந்தத் தொகுப்பு உண்மையின் ஒளியூற்றா? அகிம்சையின் ஆத்மாவா? மதங்களைத் தாண்டிய மானுட கீதமா? எதனைத் தரிசித்தீர்கள்? நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் இவர்களின் குருதிமணம் வீசுகிறதா? குதூகலமாக ஏறிக்கொள்ளுங்கள்,…உங்களுக்காக காத்திருக்கிறது கோத்ரா ரயில். உலவும் வதந்தி உண்மையெனில், ஞான பீடம் வாங்கிய கையோடு புல்லட் ரயிலில் போய் வாருங்கள்.

அப்படியே மறக்காமல், பத்மாவதி படத்தைப் பகிஷ்கரியுங்கள். இருபத்தியேழு குற்ற வழக்குகள் கொண்ட பிரமோத் முத்தாலிக் கும்பல் தீபிகா படுகோனே மூக்கை அரியத் துடிக்கிறது. இயக்குநர் சஞ்சய் பன்சாலியின் உயிருக்கு கோடியில் விலை குறிக்கிறது. இன்னும் நமது தேசத்தின் வீர விளையாட்டில் பெற்ற பதக்கங்களாக சல்மான் ருஷ்டியின் சாத்தானிக் வெர்சஸ், ஓவியர் எம் எஃப் உசேனின் சரஸ்வதி, தீபா மேத்தாவின் ஃபயர், தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா, பெருமாள் முருகனின் மாதொருபாகன், ஏ கே ராமானுஜத்தின் முந்நூறு ராமாயணங்கள்…இன்னும் …இன்னும்… பல குற்றவாளிகள் அமைச்சர்களாக ஆகிவிட்டதால், குற்றங்களின் அமைச்சகம் ஒன்றைத் திறந்துவிடலாம். உலக யோகா நாள் போல உலக குற்ற நாள் ஒன்றையும் அனுசரிக்கலாம்.

கவிஞனிலிருந்து கவிப்பேரரசு வரைக்குமான உங்கள் பயணத்தைப் பார்த்து வியந்த பாமரக் கவிஞன் நான். சமீபத்திய இந்த மோடி ஆராதனை என்னை ஆச்சரியப்படவைக்கிறது. உங்கள் திருத்தி எழுதிய தீர்ப்பைத் திரும்பப் படித்துப் பார்க்கிறேன். ”பொய்க்கு எப்போதும் முரசடித்தே பழக்கம். உண்மை எப்போதும் புல்லாங்குழல் வாசிப்பதே வழக்கம்” நீங்கள் சொன்னது பொய்யா ? மெய்யா?.

“இந்த நெருப்பு நிமிடங்களிலிருந்து நிகழ்காலத்தை மீட்டு, எதிர்காலத்தை எழுப்பப் போகும் இளம் உள்ளங்களில், ஒரு பிறழாத சமூகப் பிரக்ஞையை, இந்தத் திருத்தி எழுதிய தீர்ப்புகள் ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன்.”
இப்போதும் இந்த எண்ணம் உண்டா? இறுதியாய் அதிலெனக்குத் தட்டுப்பட்ட வரிகள் இவைதான்… “ நடத்துங்கள்……ஆனால்…நாளை… காலத்தின் விமர்சனம் உங்கள் பிணங்களைக்கூடத் தோண்டியெடுத்து வந்து தூக்கில் போடும் என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்”

உங்களுக்கு ஞாபகச் சக்தி அதிகம் என்பது எனக்குத் தெரியும் கவிப்பேரரசே..

– முனைவர் ம.குமரவேல்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!