7 வருடங்களுக்கு பிறகு தென் தமிழகத்தை குறி வைக்கும் வட கிழக்கு பருவமழை.. - VanakamIndia

7 வருடங்களுக்கு பிறகு தென் தமிழகத்தை குறி வைக்கும் வட கிழக்கு பருவமழை..

இன்று இரவு முதல் தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளதால் மிக கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறீத்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் இடப்பட்ட பதிவு இதுதான்.

“இன்று இரவு முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை கனமழை இருக்கும். இலங்கைக்கு அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தீவிரமடைந்து புயலாக மாறி (வாய்ப்புண்டு), கன்னியாகுமரி லட்சத்தீவு கடற்பகுதிக்கு செல்லும்.

தயவு செய்து இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை அறிவிப்புகளையும், அறிவுரைகளையும் கவனிக்கவும். இலங்கைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே கடற்கரைப்பகுதிக்கு நகர்ந்துவிட்டது. இதனால், இன்று மாலை முதல், நாளைவரை 30-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் மழை இருக்கும்?

இன்று இரவு முதல் தொடங்கும் கனமழை நாளை தீவிரமடைந்து, மிக கனமழையாக மாறும். கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை இருக்கும். இந்த மாவட்டங்களில் மட்டுமல்லாது, அருகே இருக்கும் விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர் உள்மாவட்டங்களான நாமக்கல், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும்.

நீலகிரி மாவட்டத்திலும் மழை இருக்கும், குறிப்பாக குன்னூர் பகுதியில் கிழக்குப்பகுதி பள்ளத்தாக்கு மிகப்பெரிதானது, இதனால், கன்னியாகுமரி கடல்பகுதியில் இருந்து அரேபியக் கடலுக்கு குறைந்த காற்றழுத்ததாழ்வுப்பகுதி நகரும்போது, ஈரப்பதம் காரணமாக கனமழை பெய்யக்கூடும்.

எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மலைப்பகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் இன்று இரவு முதல் மிக, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள கொடையாறு, பேச்சிப்பாறை, குலசேகரம், நெல்லை பகுதியில் உள்ள பாபநாசம், மாஞ்சோலை பகுதியில் நல்ல மழை இருக்கும்.

ஒட்டுமொத்தமாக, தென் தமிழகம் அதன் உள்மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பின் பரவலாக மழை பெய்யப்போகிறது.

மீனவர்களுக்காக.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மன்னார் வளைகுடா, கேரளாவின் தென்பகுதி கடற்கரை பகுதிகளில் கடலுக்குள் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக 30—ம் தேதி நாளை முதல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், ராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து, மிகப்பெரிய அலைகள் உருவாகும்.

2010ம் ஆண்டு டிசம்பர் போல இருக்கும்

2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் கன்னியாகுமரி பகுதியில் குறைந்தகாற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்ந்தபோது, இந்தப்பகுதிகளில் மிக, கனமழை பெய்தது. 2014ம் ஆண்டு மே மாதத்திலும், கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து, லட்சத்தீவு கடற்பகுதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரும்போது இதேபோன்ற மழை இருந்தது. கன்னியாகுமரி எனது சொந்த மாவட்டம் என்பதால், இந்த இரு சம்பவங்களையும் என்னால் மறக்க முடியாது.

2009ம் ஆண்டு உருவான பியான் புயல். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை கன்னியாகுமரி கடலுக்கு நகர்ந்து, அரேபியகடல் பகுதியில் செல்லும் போது புயலாக மாறியது. அப்போது 820 மி.மீ மழை பெய்ததும், நீலகிரி மாவட்டம் குன்னூர் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதையும் யாரும் மறக்கமுடியாது. இப்போதுவரை ஒரே நாளில் 820மி.மீ மழை பெய்ததுதான் சாதனையாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை 2010ம்ஆண்டு டிசம்பர் போல இருக்கும்.”

இவ்வாறு தமிழ்நாடு வெதர் மேன் பதிவு செய்துள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!