‘ஆயிரம் கரங்கள் கூப்பி மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம்’ - வட அமெரிக்க ரஜினி பேரவை! - VanakamIndia

‘ஆயிரம் கரங்கள் கூப்பி மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம்’ – வட அமெரிக்க ரஜினி பேரவை!

வாஷிங்டன்: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை அவருடைய அமெரிக்க ரசிகர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்

இது குறித்து வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவையின் நிர்வாகிகள் டல்லாஸ் இர.தினகர், சிகாகோ ரஜினி ராஜா, ஃப்ரிஸ்கோ அன்புடன் ரவி, வாஷிங்டன் எஸ்.ஸ்ரீனிவாசன், டல்லாஸ் எம்.ஆனந்த், ஃப்ரிஸ்கோ என்.ராம்குமார், இர்விங் கே.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ‘அரசியல் வருகை’ பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.

ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம்.

இனி, தலைவர் ரஜினியின் ஆட்சியில் அறம் சார்ந்த ஆட்சி நடைபெறும். அரசியல் என்பது ஒரு தொழிலாகி மாறிவிட்ட அவலம் நீங்கும். தூய்மையான எண்ணத்துடன் மக்கள் பணியாற்றுபவர்களுக்கு, உரிய அங்கீகாரத்துடன், தொடர்ந்து பணியாற்ற அரசியல் பதவிகள் உறுதுணையாக அமையும்.

இந்தத் தமிழகம் இழந்து விட்ட பெருந்தலைவர் காமராஜர் காலத்து அரசியல் மாண்புகள் மீண்டும் திரும்பும். தமிழகத்தின் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உலகத் தரத்திற்கு மேம்படும்.

தலைவர் ரஜினியின் அரசியல் வழிகாட்டி சிங்கப்பூரின் சிற்பி ‘லீ க்வான் யூ ’ நவீன சிங்கப்பூரை உருவாக்கினார். அதைப் போல், தமிழக மக்களின் பேராதரவுடன், தமிழகத்தை உலகின் முன்மாதிரி மாநிலமாக தலைவர் ரஜினி மாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும் அமெரிக்கத் தமிழர்களின் உயிர்த்துடிப்பு தமிழகத்தில் தான். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழகம் என்பதையே உயிர்மூச்சாகக் கொண்டு இங்கே வாழ்கிறோம். தமிழகத்தில் ஒரு சிறு அதிர்வு என்றாலும் துடித்துப் போகிறோம். இதையெல்லாம் தலைவர் ரஜினி நன்றாகவே உணர்ந்துள்ளார் என்பதையும் அறிகிறோம்.

தலைவர் ரஜினி ஆட்சியில் தமிழ் மொழி, தமிழர்கள், தமிழகம் ஆகியவற்றின் நலன்கள் முன்னெப்போதையும் விட சிறந்து விளங்கவும், இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் தலைவர், நாளைய முதல்வர் ரஜினி அவர்கள் தக்க நடவடிக்கைகள் எடுப்பார் என நம்புகிறோம்.

தமிழகத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் காலத்து பொற்காலம் திரும்ப, தலைவர் ரஜினியின் ஆட்சி மலர அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருப்போம் என்று வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை சார்பில் உறுதி கூறுகிறோம்.

தலைவரின் கொள்கைகளான ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்பதே நமது தாரக மந்திரமாக ஏற்று செயல்படுவோம்.
வாழ்க தமிழ், வெல்க தமிழ்குடி, வருக தலைவர் ரஜினி ஆட்சி!!”

என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள அமைப்பாளர் இர.தினகரை தொடர்பு கொண்டு கேட்ட போது. அவர் கூறியதாவது,

‘சிஸ்டம் கெட்டுப் போயிருக்குன்னு நீண்ட நாளா சொல்லி வரும் தலைவர், அதை சீர் செய்ய முயற்சிகள் எடுத்தார். 96ல் மூப்பனாரை முதல்வராக்க காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முடியாத பட்சத்தில், கலைஞரை முதல்வராக்க முன்னின்றி செயல்பட்டார்.

அடுத்தடுத்த ஆட்சிகளிலும் அவர் நினைத்தது போல், சிஸ்டம் மாறவில்லை. இனி அடுத்தவர்களை நம்பி பலன் இல்லை என்பதால், மக்கள் ஆதரவுடன் அரசியலுக்கு வந்துள்ளார். இதை வட அமெரிக்க ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

தலைவர் ரஜினியை இந்துத்துவாவுடன் இணைத்து இடது சிந்தனையாளர்கள் தவறாக சித்தரித்து வருகிறார்கள். அனைவருக்கும் பொதுவான ஒருவர் தமிழகத்தில் முதல்வராக வர முடியாது என்ற தவறான கண்ணோட்டத்தில் அப்படிச் சொல்கிறார்கள்.

தலைவர் ரஜினி, தன்னை கடுமையாக எதிர்த்த சீமானிடம் கூட நல்ல திட்டங்களைக் கண்டார். தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும், மற்ற முதல்வர்களைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக நன்மை செய்வார் என்று உறுதியாக நம்பலாம். அவர் அனைவருக்கும் பொதுவான முதல்வராக இருப்பார். காமராஜரை பெரியார் ஆதரித்தது போல், இன்று ரஜினிக்கு எதிர்ப்பு தெரிப்பவர்கள் நாளை ஆதரவு தெரிவிக்கும் நிலை வரும்.

தலைவர் மீது அவதூறு பிரச்சாரம் செய்வதை விடுத்து, இணைந்து செயல்பட வாருங்கள், தமிழர் நலன் காப்போம் என்று அழைப்பு விடுக்கிறோம்” – இவ்வாறு தினகர் தெரிவித்தார்.

வட அமெரிக்காவில் ரஜினியின் திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள ரசிகர்கள், ரஜினியின் அரசியலுக்கும் வரவேற்பு அளிப்பது ஆச்சரியப்படுத்துகிறது.

North America Federation of Thalaivar Rajinikanth – Press Release 2

Author: admin
Tags

Comments (1)

  1. R.Simon says:

    Super boss

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!