Newyork Tamils donated 125 thousands dollars for Harvard Tamil Chair

ஹார்வர்ட் தமிழ் இருக்கை: நியூயார்க்கில் 1 லட்சத்து 25 ஆயிரம் டாலர்கள் நிதியளிப்பு விழா

நியூயார்க்: நியூயார்க் மற்றும் சுற்று வட்டாரங்களில் வாழும் தமிழர், தமிழ் பாரம்பரிய வேட்டி சட்டை, புடவையணிந்து ஒன்று கூடி உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் மொழிக்கான நிரந்தர இருக்கை அமைக்க நிதி திரட்டு விழா நடத்தினர். குளிர்காலம் உச்சத்தில் இருக்கும் வேளையில், கொட்டும் பனிக்குளிரிலும் பாரம்பரிய வேட்டி சட்டை புடவையில் வந்திருந்து கலந்து கொண்டது தமிழ் மீதும் தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும் உள்ள தீராப்பற்றை வெளிப்படுத்தியது.

இந்த விழா நியூயார்க்கில், கார்டன் சிட்டி எனும் இடத்தில், அக்பர் உணவகத்தில் நடைபெற்றது. நியூயார்க் தமிழ் சங்கம், நியூயார்க் தமிழ் அக்கடமி, தமிழ்நாடு அறக்கட்டளையின் நியூயார்க் சேப்டர், முத்தமிழ் முன்னேற்ற மன்றம் மேலும் பல தமிழ் ஆர்வலர்கள் இணைந்து நடத்தினர்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைய தலா அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி அளித்து வித்திட்ட காரணக் கர்த்தாக்கள் மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம் தங்கள் துணைவியாருடன் வருகை தந்து சிறப்பித்தனர். மேலும் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலிருந்து ஜானதன் ரிப்ளி, நியூயார்க் சிடோனிபுருக் கல்லூரியிலிருந்து டெக்ஸ்டர் பெயிலி, மற்றும் யுனிவர்சிட்டி ஆப் பென்சில்வேனியாவிலிருந்து முனைவர். வாசு ரங்கனாதன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நியூயார்க் தமிழ் அக்கடெமியின் முனைவர் பாலா சுவாமினாதன் மருத்துவர். ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம் மற்றும் முனைவர் வாசு ரங்கநாதனுடன் நடத்திய ஹார்வர்ட் தமிழ் இருக்கை குறித்த கலந்துரையாடல், தமிழ் இருக்கை குறித்த புரிதலை மக்களுக்கு அதிகரிக்க உதவியது. ஹார்வ்ர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை
ஏன் அமைக்க வேண்டும், இதனால் தமிழ் மொழிக்கு என்ன பயன், போன்ற கேள்விகளுக்கு விளக்கங்கள் தெளிவாகத் தரப்பட்டன.

ஜானதன் ரிப்ளி, தான் மதுரையில் வாழ்ந்த நாட்களில் கிடைத்த அனுபவங்களை உற்சாகமாக தமிழ் மொழியில் பகிர்ந்து கொண்டார். “ஓரம்போ, கண்ணே கலைமானே” போன்ற பல தமிழ் பாட்டு வரிகளை நினைவு கூர்ந்து அனைவர் மனதையும் களவாடினார். டெக்ஸ்டர் பெயிலி தமிழ்ச் சமூகம் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். முனைவர் பாலா சுவாமினாதனும், அவரது துணைவியார் பிரபா பாலாவும் நியூயார்க் சிடோனிபுருக் கல்லூரியில் தங்கள் பெற்றோர் பெயரில் அமைத்திருக்கும் தமிழ் இருக்கைக்கு நன்றி மற்றும் பாராட்டுகளையும் டெக்ஸ்டர் பெயிலி தெரிவித்தார்.

நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் ரங்கனாதன் புருஷோத்தமன், துணைத்தலைவர் விஜயக்குமார், நியூயார்க் தமிழ் அக்கடமியின் முனைவர் பாலா சுவாமினாதன், செல்வன், ஶ்ரீராம், தமிழ்நாடு அறக்கட்டளையின் நியூயார்க் சேப்டர் மருத்துவர் குப்தா, பிரகஷிதா குப்தா, முன்னாள் நியூயார்க் தமிழ்ச் சங்க தலைவி காஞ்சனா பூலா, மருத்துவர் கிருஷ்ணா இன்னும் தமிழை நேசிக்கும் பல தன்னார்வலர்கள் இணைந்து இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தினார்கள் மேலும் நிறைய நல்லுள்ளங்களின் நிதியும், உழைப்பும், நேரமும் இங்கே குறிப்பிடத்தக்கது .

விழாவை நியூ ஜெர்சியின் தமிழ் ஆர்வலர் புவனா கருணாகரன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். சிறுவர்கள் ஆதி, தருண், உதயா, உதய் அவர்களின் பறையடி அட்லாண்டிக் கரையிருந்து எட்டுத்திக்கும் ஒலித்தது. ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுக்கான நடனத்துடன் விழா சுமார் மதியம் 12 மணியளவில் துவங்கி மாலை 5 மணிக்கு “ஜெர்சி ரிதம்ஸ்” இன்னிசையுடன் இனிதே முடிந்தது.

பல்சுவையுணவு, பைந்தமிழ் மீதானப் பற்று, இதயம் தைத்த தமிழ் இன்னிசை, பறைஇசை, சிறுவர் சிறுமியர் ஆட்டம், பெரியவர் கூட்டம் என திருவிழாக் கோலம் பூண்ட இந்த நிகழ்வில் சுமார் 125,000 அமெரிக்க டாலர்கள் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு திரட்டப்பட்டது. இது தமிழரின் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது போல் தமிழர் அனைவரின் இந்த ஒற்றுமையின் வெளிப்பாடு பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

– புவனா கருணாகரன், நியூஜெர்சி

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!