நியூயார்க்கிலும் ஒரு தமிழ் இருக்கை.. 4 ஆண்டு கனவு நிறைவேறியது! EXCLUSIVE - VanakamIndia

நியூயார்க்கிலும் ஒரு தமிழ் இருக்கை.. 4 ஆண்டு கனவு நிறைவேறியது! EXCLUSIVE


நியூயார்க்: தமிழக அரசு நிதியுதவியுடனும், டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்மந்தன் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் பங்களிப்புடனும் ஹார்வர்ட் தமிழ் இருக்கை கனவு நனவாகும் வேளை நெருங்கியுள்ளது.

இந்த தருணத்தில், தமிழ் சமுதாயத்திற்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி. நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்க அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இது நியூயார்க் மாநில அரசுப் பல்கலைக் கழகமாகும்.

நியூயார்க் நகரில் வசித்து வரும் முனைவர். பாலா சுவாமிநாதன், அவருடைய மனைவி பிரபா பாலா இருவரும் இணைந்து இந்த தமிழ் இருக்கைக்கு தேவைப்பட்ட தொகையை, நன்கொடையாக வழங்க உள்ளார்கள். இது குறித்து பாலா பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

2014ம் ஆண்டு தொடக்கத்திலேயே, ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தையை தொடங்கியதாகவும், பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு “இந்தியக் கல்வியியல்” துறைக்குக் கீழே இந்த இருக்கைக்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறினார்.

ஆனால் பாலாவுக்கு “இந்தியக் கல்வியியல்” துறையில் “தமிழ் இருக்கை” அமைவதில் உடன்பாடு இல்லை. அந்தத் துறையில் அமைந்தால் தமிழின் எல்லையை இந்திய வரலாறு என்ற ரீதியில் சுருக்கிவிடக் கூடும். கலை, வரலாறு, கட்டிடக் கலை, மொழி வளம் என பன்முகம் கொண்ட தமிழுக்கு
“கலை மற்றும் அறிவியல்” துறையில் இருக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பல ஆய்வுக்குறிப்புகள், விளங்கங்கள், ஆராய்ச்சி முடிவுகள் என பல்கலைக் கழகத்திற்கு சமர்ப்பித்துள்ளார். அரசுப் பல்கலைக் கழகம் என்பதால், உரிய விதிமுறைகள் படி பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதிகமான கால அவகாசமும் தேவைப் பட்டுள்ளது.

இறுதியில் பல்கலைக்கழக கலை அறிவியல் துறை டீன் சாஷா கோப்பு (Sacha Kopp) , தமிழ் இருக்கைக்கு ஒப்புதல் அளித்து, அந்த துறையின் கீழேயே தமிழ் இருக்கை அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர் வரலாறு, கலைகள், கட்டிடக்கலை, மொழி ஆகியவற்றில் மாணவர்களுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களை பல்கலைக் கழகத்தின் இணையப் பக்கத்தில் பார்க்கலாம்

நியூயார்க் ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்தாலும், ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டுவதிற்கும், நியூயார்க் நகரில் ஜனவரி 7ம் தேதி விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ”நியூயார்க் தமிழ் அகடமி” சார்பில் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

2011ம் ஆண்டு, பாலா ‘நியூயார்க் தமிழ் அகடமி’ யை நிறுவினார். அங்கு 4 நிலைகள் வரை குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரப் படுகிறது. மாணவர்களுக்கு, மொழி மதிப்பீட்டுக்கான அரசு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

பாலாவின் பூர்வீகம் ஆண்டிப்பட்டி அருகே தி. சுப்லாபுரம் என்ற கிராமமாகும். பாலாவின் தந்தை, அந்தக் கிராமத்தில் படித்த முதல் பட்டதாரி மற்றும் மருத்துவராவார் . ஏராளமான அறப்பணிகள் செய்து வருகிறார் . தனது சிலம்பொலி அறக்கட்டளை (www.Silamboli.Org) மூலமாக 80 மாணவர்களுக்கும் மேலாக கல்லூரிப் படிப்புக்கு நிதி உதவி செய்துள்ளார்.

தந்தை டாக்டர் சுவாமிநாதன் வழி காட்டுதலில் தனயன் முனைவர்.பாலாவும் அதைத் தொடர்கிறார். பாலாவின் மனைவி ராஜபாளையம் அருகே சத்திரப் பட்டி ஊரைச் சார்ந்தவர். கணவரின் கனவுகளுக்கு உயிரூட்டி, தோளோடு தோளாக இருந்து நிறைவேற்றி வருகிறார்.

தனது தந்தை டாக்டர்.ஜி.சுவாமிநாதன் மற்றும் தாயார் ஆனந்தவள்ளி ஆகியோரின் பெயரில் இந்த தமிழ் இருக்கைக்கான நிதியுதவியை முனைவர் பாலா செய்துள்ளார் . எவ்வளவு தொகை என்று தெரியப்படுத்த வேண்டாமே என்றும் கேட்டுக் கொண்டார். ஹார்வர்ட் மற்றும் அமெரிக்கா முழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்று தனது விருப்பத்தையும் தெரிவித்தார் பாலா.

அமெரிக்காவில் தமிழர்கள் முன்னெடுத்து வரும் இத்தகைய முயற்சிகளால் தமிழ் மொழி மற்றும் , தமிழர் வரலாறு சார்ந்த ஆராய்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும் என்று நம்பலாம்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!