New initiative for Women Welfare in America

பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டம்… டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு!

டல்லாஸ்: மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஆலோசனைக் குழு அமைக்கப் போவதாக, சங்கத் தலைவர் கோமதி பெரிய திருவடி அறிவித்தார்.

பொங்கல் விழாவில் பேசிய கோமதி, 2018 ஆம் ஆண்டில், பெண்கள் முன்னேற்றத்தை கருப்பொருளாகவும், நோக்கமாகவும் கொண்டு தமிழ்ச் சங்கம் செயல்படும் என தெரிவித்தார். அதற்காக மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள் , உளவியல் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப் பட உள்ளது. குடும்ப வன்முறைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றங்களை, இந்தக் குழுவில் தெரிவித்து பெண்கள் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும் சுயதொழில் தொடங்க முன்வரும் பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் ,சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை இயன்ற அளவிற்கு தவிர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வருடத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நல்ல நோக்கத்தோடு நடைபெறும் திட்டங்களுக்கு சங்கத்தின் சார்பாக உதவி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அதை நிறைவேற்றும் வகையில் தன்னார்வலர் ஜவஹர், அவருடைய கிராம பள்ளிக்கூடத்திற்கு கட்டிட வசதி செய்து கொடுக்கும் திட்டத்திற்கு ஆயிரத்து நூறு டாலர்கள் வழங்கப் பட்டது.

பொங்கல் விழாவில், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னாள் தலைவர்கள் , அவர்களுடைய சேவை பாராட்டி நினைவுப்பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப் பட்டனர். 2016 -2017 ஆண்டு நிர்வாகக்குழுவினரும் கௌரவிக்கப்பட்டனர்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை (FETNA ) தலைவர் செந்தாமரை பிரபாகர் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்தார். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் 31 வது ஆண்டு தமிழ் விழா டல்லாஸில் ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை நடைபெற உள்ளது. அந்த விழாவிற்கு அனைவரையும் நேரில் அழைப்பதற்காக வந்திருந்ததாக தெரிவித்தார். டெக்சாஸ் தனது தாய் வீடு மாதிரி என குறிப்பிட்ட செந்தாமரை, பேரவை மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்திட அனைவரின் அன்பும் , ஆதரவும், பங்களிப்பும் தேவை என வேண்டுகோள் விடுத்தார்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை தமிழ் விழா ஒருங்கிணைப்பாளரும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவருமான கால்டுவெல் வேள்நம்பியும் விழாவில் பங்கேற்றார். அவர் கூறுகையில் , பேரவை மாநாட்டை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ் பள்ளிகளுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார் . ‘மழலை ,மரபு ,மகளிர்’ என்ற கருவை மையமாக வைத்து நடக்கவிருக்கும் பேரவை தமிழ் விழாவுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார.

நிர்வாகக்குழு உறுப்பினர் அருண் குமார் சங்க உறுப்பினர்களின் வசதிக்காகவும் ,வாராந்திர கூடுகை மற்றும் உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும் பல்வேறு நகரங்களில் சங்கத்தின் துணைக் கிளைகள் உருவாக்குவதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.சட்ட ஆலோசனைகள் ,வேலை வாய்ப்பு ஆலோசனைகள் மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவல் பரிமாற்றங்கள் போன்றவை உறுப்பினர்களை சென்று சேருவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

அந்நிய மண்ணில் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், அயல்நாட்டில் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளின் ஆலோசனைகளுக்காகவும், சுய தொழில் தொடங்க ஊக்கமளிக்கவும், சிறப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்படுவது வரவேற்கத் தக்கதாகும்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!