நெருப்பில் வீழந்த மலர்கள்... நீட் யாருக்கான நுழைவுத் தேர்வு ‍? - VanakamIndia

நெருப்பில் வீழந்த மலர்கள்… நீட் யாருக்கான நுழைவுத் தேர்வு ‍?

இரண்டு மாதங்களுக்கு முன்பு அண்ணன் சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் மூலமாக அரியலூரில் இருந்து வெளி உலகிற்கு தெரியவந்தவர் அனிதா.

கடந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்ணும், மருத்துவ படிப்பிற்காக தமிழக அரசின் வரையறைப்படி 196.75 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும் மத்திய, மாநில அரசின் நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவ கனவு பலிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட சிவ சங்கர் அண்ணன் இம்மாணவியின் உயர்கல்விக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையினை நண்பர்களிடையே வைத்திருந்தார். நிச்சயம் அவரை மருத்துவர் ஆக்குவோம் அண்ணா என்று சொல்லி வந்த நிலையில் அனிதாவின் மரணச் செய்தி இன்று வந்தடைந்துள்ளது.

இந்தச் செய்தி பொய்யாய் இருக்க வேண்டும் என்று மனம் ஆற்றாமையால் தவிக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்களை மருத்துவராகி காக்க வேண்டியவள், இன்று நம் அலட்சியத்தால் பலியாகி நிற்கிறாள்.
இப்படி எத்தனை அனிதாக்கள், தங்கள் மருத்துவர் கனவு நிறைவேறுமா என்று கடந்த சில மாதங்களாக நடைபிணமாய் தமிழகத்தை சுற்றி வருகிறார்கள் என்று உங்கள் மனக் கதவை திறந்து பாருங்கள்.

’நீட் நுழைவுத் தேர்வு யாருக்கானது’ என்று தொடர்ந்து எனது முகநூல் பக்கத்தில் எழுதி வந்தேன். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போல எல்லோருமே மெளனம் காத்தனர். இதோ எதிர்பார்த்த அந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது.

வறுமையிலும் கல்வியில் வெற்றி பெற்ற மாணவர்களைத் துரத்தி துரத்தி வேட்டையாடிய எல்லா கல்வியாளர்களுக்கும் அனிதா தன் உயிரையே பதிலாய் தந்து விட்டு போய் இருக்கிறாள். ஏழை மாணவர்களுக்கு படிப்பெதற்கு என்ற வார்த்தைகள் மலையேறிப் போய், ஏழை மாணவர்கள் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்ற கோசத்தையும் நீட் நுழைவுத் தேர்வுகள் சமூகத்தின் முன் வைத்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவில் மண்ணை அள்ளி மட்டும் போடவில்லை. வறுமையான சூழலிலும் கிராமப்புறத்தில் இருந்து முதல் தலைமுறையாக போராடி அதிக மதிப்பெண்கள் பெற்ற அனிதா போன்ற மாணவக் கண்மணிகளின் உயிரையும் எடுக்கத் துவங்கி விட்டது.

லட்சக் கணக்கில் செலவு செய்து பயிலும் வாய்ப்பை மேட்டுக் குடிகளின் பிள்ளைகளுக்கு வழங்கி விட்டு, ஊருக்கு உபதேசம் செய்கிற எல்லோர் கைகளிலும் அனிதாவின் மரணத்திற்கான கொலைப் பழி விழட்டும்.
உங்களின் கள்ள மெளனம்தான் எல்லா அட்டூழியத்திற்குமான திறவு கோல் என்பதை இனியாவது உணருங்கள்.

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவிற்கு ஒரு அனிதாவின் உயிரை விலையாய் தந்தது போதும், உடனடியாக நீட் நுழைவுத்தேர்வினை தமிழகத்தில் விலக்க கோரி மத்திய அரசிற்கு தமிழக மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் அழுத்தம் தர வேண்டும்.

எம்மை துயரத்தில் ஆழ்த்திச் சென்ற சகோதரி அனிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். நம் குழந்தைகளின் உயிரை பறிக்கும் இந்த நுழைவுத் தேர்வுகள் அவசியம்தானா? இனியாவது உங்கள் மெளனத்தை கலையுங்கள்

– முனைவர். பிச்சைமுத்து சுதாகர்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!