ஆதலினால் காதல் செய்வீர்... - VanakamIndia

ஆதலினால் காதல் செய்வீர்…

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தில் நடந்த ஒரு நாள் காலை அலுவலகத்தில் இருந்தபோது கைபேசி அழைப்பு அண்ணா உடனடியாக கலக்டர் ஆபிஸ் வரமுடியுமா? என்ன விஷயம் ? உடனே வாங்க நாம் மாற்றி நட்ட மரத்தின் அருகே நிற்கிறேன் என்று கூறிவிட்டு இரைச்சலின் காரணமாக அழைப்பு துண்டிக்கப்பட்டது. எந்த சக்தி என்னை இயக்கியது என்று இன்று வரை புரியவில்லை அடுத்த 10 வது நிமிடத்தில் மரத்தின் அருகே நான். அங்கு சென்றடைவதற்குள் ஓராயிரம் நினைவுகள் அலைமோதியது, கடும் சிரமத்தில் பலரின் இடைவிடாத முயற்சியில் மிகுந்த பொருட்செலவில் எடுத்து வந்து நட்ட 150 வருட மரம், என்ன நிகழ்ந்ததோ என மனதில் தவிப்பு.

என்ன நடந்தது என கேட்டேன் மரத்தை சுற்றிய சாக்குகளை இன்று அப்புறப்படுத்த வந்தோம், பிரித்து பார்த்தபோது ஆங்காங்கே துளிர்கள் என அதனை காட்டினார்கள், பார்த்த நொடி சொல்லென உணர்வுகள் இதயத்தை அடைத்தது, மேலும் இரண்டு மரங்களின் மேல் சுற்றப்பட்டிருந்த சாக்குகளையும் பிரிக்க பிரிக்க துளிர்கள் தென்படத்துவங்கிய காட்சி விழிகளில் நீரை துளிர்க்கச்செய்தது.

மகன்கள் இருவரையும் பெற்ற நாளில் பிரசவ அறையின் முன் மருத்துவர் குழந்தையுடன் வந்து செய்தியை பகிரும்போது ஏற்பட்ட உணர்வுகளுக்கு ஒப்பான உணர்வுகளை அனுபவித்தேன். நாம் வாழ கொடுத்த இந்த சமூகத்திற்கு எதாவது திருப்பி செலுத்தவேண்டும் என்ற அடிப்படையில் செய்ய துவங்கிய இயற்கையை மீட்கும் கடமையை காதலாக உணர்ந்த அந்த தருணம் என்றென்றும் நினைவில்.

தொழிலுக்கு வந்த பிறகு ஏற்பட்ட பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுக்கு பின்னால் சில வருடங்களாகத்தான் ஸ்திரமான ஒரு நிலையை எட்டுவதற்குரிய சூழலை நோக்கி பயணிக்கும்போது இந்த சேவை பல்வேறு வகையில் இடையூறாக உள்ளதே என்ற மனப்போராட்டத்திற்கு ஆட்பட்டதுண்டு.

சென்னை வெள்ளம், புயல், பரவிவரும் பல்வேறு நோய்கள் என பல சம்பவங்கள் சரியான பாதையில்தான் பயணிக்கிறோம் என என்னை நம்ப வைத்தது. பொருளாதாரத்தில் சற்று பின்தங்கினாலும் பரவாயில்லை. ஏனெனில் சேர்த்து வைக்கும் பொருளை அனுபவிக்க வேண்டிய இயற்கை சூழல், சந்ததிகளுக்கு இல்லையெனில் என்ன பொருள் சேர்த்து என்ன பயன் என்ற எண்ணம் மேலும் வேகமாக இயங்கச்செய்கிறது.

பெற்றவர்களையும், பிள்ளைகளையும், மனைவியையும் நேசிப்பதை தாண்டி இயற்கையையும் நேசிப்போம் அதுவும் இன்றைய சூழலில் மிக அதிக அளவில் நேசிக்கவேண்டிய நிலையில் உள்ளது இயற்கை. ஆதலினால் நட்புக்களே உறுதியெடுங்கள் இன்றைய தினத்தில் இயற்கையை நேசிப்போம் என. லட்சக்கணக்கான மரங்களை நடுவதும், மரப்பெயர்ச்சி செய்வதும், நீர்நிலைகளை தூர்வாருவதும் தனியொருவராக முடியுமா என யோசிக்க வேண்டாம்.

இயன்ற அளவு ஒரு மரமோ இரண்டு மரமோ நடுங்கள், அல்லது ஒரு கிண்ணத்தில் தண்ணீரை பறவைகள் வந்து அருந்துமிடம் பார்த்து வையுங்கள், தண்ணீர் பயன்பாட்டில் சிக்கனத்தை கடைபிடியுங்கள், குழந்தைகளுக்கு இயற்கையை பற்றிய பல்வேறு செய்திகளையும் அவற்றை காக்கவேண்டிய அவசியத்தை எடுத்துரையுங்கள்.இப்படி எதாவது ஒரு வழியில் இயற்கையை நேசிப்போம்

நேசிப்போம் இயற்கையை வாழ்நாள் முழுவதும் வாழ்தலை இனிதாக்குவது இயற்கையோடு ஒன்றிய வாழ்வு மட்டுமே

ஆதலினால் காதல் செய்வீர்

– குமார் துரைசுவாமி

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!