தமிழக நீர் நிலைகளைச் சீரமைக்க அமெரிக்கத் தலைநகரில் மொய்விருந்து! - VanakamIndia

தமிழக நீர் நிலைகளைச் சீரமைக்க அமெரிக்கத் தலைநகரில் மொய்விருந்து!

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் தமிழக விவசாயிகளுக்காகவும் நீர் நிலைகள் சீரமைப்பு பணிகளுக்காகவும் மொய் விருந்து நடை பெற உள்ளது.

ஜூலை 29ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை, சாண்டிலி ஃப்ரீடம் ஹைஸ்கூல் வளாகத்தில் நடைபெறுகிறது.

எம்ய்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன், வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்ணணிப் பாடகர் தேவன் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, நாடகம், நடனம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பாரம்பரிய விளையாட்டுகளும் உண்டு.

நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு தமிழக நீர் நிலைகள் சீரமைப்புப் பணிக்கும் , வறட்சியாலும் கடன் தொல்லையாலும் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு உதவிதொகையும் வழங்கப்பட உள்ளது.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி மருதூர் கீழக்கால்வாய் சீரமைப்பிற்கு ரூபாய் 27 லட்சம், அரியலூர் மாவட்டம் விளாங்குடி பகுதியில் 3 கிராமங்களில் 2000 பயனாளர்களுக்கு 16 லட்சம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கிராம நலத்திட்டங்களுக்கு 6.2 லட்சம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கிராமங்களுக்கு 14 லட்சம் , கோவை மாவட்டம் குனியமுத்தூர் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டம் செங்குளம் ஏரி சீரமைப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வெலிங்கடன் ஏரி சீரமைப்பு பற்றி ஆய்வுப்பணிகள் தொடங்கியுள்ளன.

நன்கொடைகளுக்கு அமெரிக்க வருமான வரி விலக்கு உண்டு. எம்ய்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற பெயருக்கு காசோலை, க்ரெடிட் கார்ட் , பேபால் அல்லது ரொக்கப் பணமாக செலுத்த வேண்டும்.

மேலும் தகவல்களை dcmoivirunthu.org என்ற இணையத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Washington Tamils are arranging Moi virundhu in US capitol for Tamil farmers.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!