செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின்... ஓராண்டு கழிந்த பின்னும்....! - VanakamIndia

செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின்… ஓராண்டு கழிந்த பின்னும்….!


கருணாநிதியும், முலயாம் சிங் யாதவ் போலிருந்தால், 1996ம் ஆண்டே மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகி இருக்க வேண்டும். அப்படி ஆகியிருந்தால் ஒரு வேளை அழகிரி, கனிமொழி பிரச்சனைகள் கருணாநிதிக்கு நேர்ந்திருக்காது. திமுகவுக்கு 2ஜி ஊழல் என்ற கறை கூட படியாமல் இருந்திருக்கலாம். குடும்ப குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது என்றொரு பேச்சு இருக்கிறது.

உண்மையில் சென்னை மேயராக தன்னை நிலை நிறுத்திய போதே ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி இருக்கலாம். கருணாநிதியால் செயல் பட முடியாத நேரத்தில் மொத்தப் பொறுப்பும் செயல் தலைவர் வடிவத்தில் ஸ்டாலின் மீது வந்து விழுந்ததில் அவர் தள்ளாடி நிற்கிறார் என்பது தான் உண்மை.

மேயராக, அமைச்சராக, திட்டங்களை நிறைவேற்றும் சிறந்த நிர்வாகி என்று ஸ்டாலின் பெயர் எடுத்தார். 2016ம் ஆண்டு ‘நமக்கு நாமே’ என்று ஊர் ஊராக வேட்டி சட்டையை துறந்து பேண்ட்-ஷர்ட்டுடன் மக்களை ஸ்டாலின் சந்தித்தபோது அவர் மீது புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் எழுந்தது. திமுக செயல் தலைவராக அவர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்க வேண்டும்.

சட்டசபையிலிருந்து கிழிந்த சட்டையுடன் எப்போது வெளியே வந்தாரோ, அப்போதே அவர் மீதான எதிர்பார்ப்புகள் சரியத் தொடங்கியது. செயல் தலைவராக பொறுப்பேற்று ஆவேச அரசியல் செய்கிறார் . அதனால் இது போன்ற நிகழ்வுகள் சரிதான் என்று கூட கட்சி மட்டத்தில் சொல்லப் பட்டது.

ஆனால் அரசியல் நகர்வுகளை தன்பக்கம் இழுக்காமல், ஆளும் கட்சிக்கு இவரே தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சிக் கலைப்பால் திமுகவுக்கு ஏற்பட்ட அவப்பெயரை நினைத்து தற்போதைய ஆட்சிக்கு பால் வார்த்துக் கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை.

அரசியல் என்பது மக்களின் எண்ண ஓட்டத்தை ஒட்டியே இருக்க வேண்டும். கூவாத்தூர் அரசியல் பேரம் மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளான போது, அதிமுக ஆட்சியை கவிழ்த்திருந்தால், அடுத்த தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி ஆகி இருக்கும். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு போல், அதிமுக கலகலத்துப் போயிருக்கும் அந்த வாய்ப்பை நழுவ விட்டார்.

பிரிந்து வந்த அணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து, இவரது கட்டுப்பாட்டில் ஒரு ’பொம்மை ஆட்சி’ யை கொண்டு வந்திருந்தாலும் மக்கள் ஆதரித்து இருப்பார்கள். இரட்டை இலை சின்னமும் முடங்கி இருக்கும். தக்க சமயத்தில் தேர்தலை சந்தித்து இருக்கலாம்.

தினகரனின் ஆதரவாளர்களை பதவி நீக்கம் செய்து பெரும்பான்மை இருப்பதாக காட்டிக்கொள்ளும் எடப்பாடி அரசை இப்போது மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள். ஆளுங்கட்சியை வலுவிழக்கச் செய்தால்தானே எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியும். ஆனால் ஸ்டாலினின் செயல்பாடுகள் அதிமுக அரசுக்கு தங்களை வலுப்படுத்திக் கொள்ள அவகாசம் கொடுத்தது.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மட்டுமே சிறந்த நிர்வாகியான தலைவராக தென்பட்டார். அப்போதே இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியிருந்தால், வேறு தலைவர்கள் உருவாக அவகாசம் இருந்திருக்காது. எப்படியும் 6 மாதத்திற்குள் தேர்தல் வந்திருக்கும். ஸ்டாலின் பிரதான முதல்வர் வேட்பாளராக இருந்திருப்பார்.

ஸ்டாலினின் அரசியல் நிலைப்பாடுகள் இன்று டிடிவி தினகரனை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்கி விட்டது. ரஜினிகாந்த் அரசியலில் இறங்கி விட்டார். அடுத்த தேர்தலில் இந்த மூவருக்கும் போட்டி என்ற நிலை காணப்படுகிறது.

அரசியலுக்கு தனிக்கட்சியுடன் வருவதாலும், ஏற்கனவே உள்ள சினிமா செல்வாக்காலும் ரஜினிகாந்த் மீது புதிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு சவாலாக இருப்பது ஸ்டாலினா , டிடிவி தினகரனா என்ற நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டு விட்டார்.

கடந்த ஓராண்டில், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டு, ரஜினிகாந்துடன் மோதும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார் ஸ்டாலின். நிகழ்காலத்தையும் சரியாக கையாள வில்லை. எதிர்காலத்தை கணிக்கவும் ஸ்டாலினால் முடியவில்லை.

ரஜினிகாந்த் வருகையால் மிகவும் ஆடிப்போய் இருப்பவர் ஸ்டாலின்தான். அடுத்த தேர்தலில் தனக்கு போட்டியே இருக்காது என்று கணக்குப் போட்டு அசால்டாக இருந்து விட்டாரோ என்னவோ? இன்று அவருக்கு ரஜினிகாந்த், டிடிவி தினகரன் என இரு புதிய எதிரிகள் உருவாகி விட்டனர். இருவருக்கும் களம் அமைத்துக் கொடுத்தது, ஸ்டாலின் எடுக்கத் தவறிய அரசியல் முடிவுகளே!

ஸ்டாலினின் மங்கி வரும் செல்வாக்கும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். ‘வந்தால் ஜெயிக்க வேண்டும்’ என்று ரஜினிகாந்த் கூறியிருந்ததை கவனிக்க வேண்டும்.

மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக சிறந்த நிர்வாகி என்று பெயர் பெற்ற மு.க. ஸ்டாலின், ‘செயல் படாத செயல் தலைவர்’ என்றும் பெயர் பெற்று விட்டார். ரஜினிகாந்த் மீது வீசப்படும் திமுகவினரின் கடும் வசைச் சொற்கள் அதை உறுதி படுத்துகின்றன.

– ஸ்கார்ப்பியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!