மிஷிகனில் ஒரு ’மெர்சல்’ கொண்டாட்டம்... நெப்போலியன் ’ஹேப்பி’ அண்ணாச்சி! - VanakamIndia

மிஷிகனில் ஒரு ’மெர்சல்’ கொண்டாட்டம்… நெப்போலியன் ’ஹேப்பி’ அண்ணாச்சி!

மிஷிகன் தமிழ் சங்கத்தின் “மெர்சல்” தீபாவளி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. முக்கிய விருந்தினராக நடிகர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

குத்து விளக்கேற்றி, பரத நாட்டியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பெரியோர் சிறியோர் என அனைவரும் ஆடல், பாடல், நாடகம், பேச்சு என பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். தீபாவளியை ஒட்டி கண்ணதாசன் நினைவு நாள் அமைந்ததால் அவரின் சில பாடல்களை ஒரு குழுவினர் பாடினார்கள். காலம் கடந்து நிற்கும் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இன்றும் இத்தனை வரவேற்பா என்று வியக்கவைத்தது!.

நிகழ்ச்சியின் இடையே தமிழ் சங்கம் நடத்திய கொலு போட்டி, எறிபந்து போட்டி, கொத்தமங்கலம் சுப்பு கதை போட்டி இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தது நமது சங்கம். கூடுதல் சுவையாக பரிசு சீட்டுக்கள் விற்கப்பட்டு குலுக்கல் முறையில் 20 பேருக்கு சேலைகள் பரிசாக வழங்கப்பட்டன.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற பாரதியின் சொற்படி, தமிழ் நாடு அறக்கட்டளை சார்பாக ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், ஏழை பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் காசோலைகள் வழங்கப்பட்டது. ஈகையும், தமிழ் பண்டிகையின் ஒரு அங்கமே என்பதை நினைவு கூறுவதாக இருந்தது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, சங்கத்தின் முந்தய பொறுப்பாளர்கள் நினைவு கூறப்பட்டு, அவர்களின் சேவையை பாராட்டியும் நன்றி கூர்ந்தும் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த வருடம் புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களை, அனைவர்க்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள். தன்னலம் கருதாது, தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், சேவை என்பதையே உணர்வாக கொண்டு பணி புரியும் நல்ல உள்ளங்கள் அனைவரையும் ஒருங்கே மேடையில் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கடைசியாக அமைந்த “ரெட்ரோ ரொமான்ஸ்” என்ற பெரியோர்களின் நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்தது. எம்ஜிஆர் – சரோஜா தேவி; சிவாஜி – ஜெயலலிதா, ஜெமினி – சாவித்திரி, எஸ்எஸ் ராஜேந்திரன் – விஜயகுமாரி, கமல் – ஜெயப்பிரதா, ரஜினி – ராதா, சத்யராஜ் – ராதிகா, கார்த்திக் – ஜிஜி என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே அரங்கேற்றினார்கள். அவர்கள் ஆடிய நடனம் மிகவும் நன்றாகவும் கலகலப்பாகவும் இருந்தது. நெப்போலியனும் இந்த நடனத்தை மிகவும் ரசித்து பாராட்டினார்.

நெப்போலியன் தன்னுடைய முதல் பட அனுபவத்தையும் அவருக்கு பாரதிராஜா பெயர் வைத்த சம்பவங்களையும் மிகுந்த நகைச்சுவையோடு சொன்னார். “நெப்போலியன் என்ற பெயர் தமிழ் பெயராக இல்லையே?” என்று நண்பர்கள் சொன்னதும் அதற்கு பதிலுரையாக “நான் ஆங்கிலத்திலும் ஒரு நாள் நடிப்பேன் “ என்று சொன்னதும் அது இப்போது மெய்யானதும் என்று கூறிய போது அரங்கம் அதிர்ந்தது.

நெப்போலியின் பேச்சை கேட்ட பார்வையாளர்கள் “The Power of Positive Thinking” என்ன என்பதை உணர்ந்து இருப்பார்கள் என்பது நிச்சயம். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் “கிழக்கு சிவக்கையிலே” பாடலை முழுவதுமாக பாடினார். நெப்போலியன் நகைச்சுவை உணர்வையும் அனைவரும் கண்டு வியந்தார்கள்

“Devils Night” திரைப்பட குழுவினரும் சிறப்பு சேர்த்தார்கள். இறுதியில் ஆண்கள், பெண்கள் மட்டும் குழந்தைகளும் திரைப்பட பாடல்களுக்கு DJ நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

முன்னதாக சங்க நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிக்காக இரண்டு மாதங்கள் உழைத்தார்கள் என்று தெரிந்தபோது மிகவும் நெகிழ்வாக இருந்தது. அனைத்து நிகழ்ச்சிகளும் தரமாகவும், ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும் என்று, இந்த வருடம் தேர்வு (Audition) நடத்தப்பட்டு திருத்தங்களும் பரிந்துரைகளும் வழங்கப்பட்டன. நிர்வாகிகளின் உழைப்பும் தியாகமும் நல்லதொரு பயனை அளித்தன என்றே சொல்லவேண்டும். ஒருங்கிணைத்தது மட்டும் அல்லாமல் சங்க நிர்வாகிகள் சிலர் நிகழ்ச்சியில் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை; தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை. மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்” என்ற வாலியின் வரிகளை உண்மையாக்கும் விதமாக, நல்ல மனம் படைத்த சில உபயதாரர்களின் உதவியால் விழா பண்டிகையை போல அமைத்தது. அனைத்து உபயத்தாரர்களையும் சங்க நிர்வாகிகள் நன்றி பாராட்டியது மிக பொருத்தமாகவே தோன்றியது.

இந்திய ஆடைகள், நகைகள், அலங்கார பொருட்கள், புத்தகங்கள், சிற்றுண்டிகள் இடம்பெற்ற கடைவீதியும் விழாவுக்கு மெருகேற்றியது .
வருகை தந்தவர்களுக்கு நினைவாக ’தீபாவளி புகைப்படம்’, புகைப்பட நிபுணரால் எடுக்கப்பட்டு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது..

ஆண்களும் பெண்களும் இந்திய உடை அணிந்து வந்தது நாம் எதோ நமது ஊரிலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் வளர்ந்து வரும் தமிழ் சங்கம், இம்முறை அரங்கில் அடங்கா கூட்டத்தை கண்டது. இருப்பினும் சங்க நிர்வாகிகள் மிக சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

ஆறு மணி நேரம் சென்றதே தெரியாமல் அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்து விட்டார்கள்.வீட்டுக்கு போகும் போது இனிப்பு தாம்பூலம் தரப்பட்டது. இனிப்போடும் சிரிப்போடும் அனைவரும் வீடு திரும்பினார்கள்.

“செவிக்குண வில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்” என்றார் வள்ளுவர். ஆனால் தமிழ் சங்கமோ வயிற்றுக்கும், செவிக்கும், கண்களுக்கும் அருமையான விருந்து படைத்தது.

– இராம்குமார் இராமலிங்கம்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!