Mexico Travel Series Part 1

மெக்சிகோ நல்ல மெக்சிகோ.. சூப்பர் சுற்றுலா- பகுதி 1.

‘போவோமா கலிபோர்னியா’ என நான் கூப்பிட்ட உடனே நீங்களும் 5 வாரங்கள் என்னுடன் பயணித்தீர்கள் ! அந்த ஆர்வத்தில், இப்போது உங்களையெல்லாம் ‘மெக்சிகோ’அழைத்துப் போகலாம் என முடிவு செய்துள்ளேன். அடுத்த சில வாரங்கள் நாம் மெக்சிகோ சென்று அங்கே என்னதான் இருக்குன்னு பாத்துட்டு வரலாம்,சரியா?

திருமணமான ஐந்து வருடங்களில் இரண்டு நாடுகள் சென்று வந்தாயிற்று, சுற்றுலா அல்ல, இருந்து வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறோம். இப்போது மூன்றாவது நாடா? என குடும்பத்தினர் ‘என்னது, மூன்றாவது உலகப் போரா?’ என்பது போல கேட்டார்கள். வெளிநாடு சென்று பார்ப்பது,சில வருடங்கள் தங்கிவிட்டு வருவது நல்ல விஷயம் தானே.

புது மொழி,பண்பாடு,கலாச்சாரம்,பழக்கவழக்கம் என நம்மையும் புதுப்பித்துக் கொள்ள அருமையான வாய்ப்பு தானே. கணவரின் ஆஃபீஸோ குடும்பத்திற்கே டிக்கெட் கொடுத்து, அங்கே வாழ சகல வசதிகளும் செய்து கொடுத்து அனுப்பும் போது, ஷாப்பிங் போக சாக்கு வேணுமா? எத்தனை நாளைக்கு கரும்பு தின்ன கூலி வேணுமான்னு கேட்கறது?. அதுதான் இந்த பஞ்ச் . நல்லா இல்லையா?,சரி விடுங்க.

ஏன் பயந்தார்கள் குடும்பத்தினர் என்றால், போக பிளான் பண்ணின ஊர் ‘மெக்சிகோ’. அதுவரை வரைபடத்தில் மட்டுமே பார்த்து வந்த வட அமெரிக்காவில் அழகு கொஞ்சும் நாடு. இயற்கைவளம், அருவிகள், காடுகள், மலைகள் என. ஆனால் மனிதர்களை பற்றி தெரியாதே, அதனால் தான் பயந்தார்கள். ஆனால் என் கணவருக்கு இது ஒரு மிகப் பெரிய சந்தர்ப்பம். முதன்முதலாக ‘லைம் லைட்’ என்பார்களே, அதுமாதிரி மெக்சிகோ ப்ராஜெக்ட் முதன்முதலாக ஆரம்பிக்கப் போகிறது, அதிலும் இவர் தான் முதல் இந்தியராக போய் ஆரம்பிக்கப் போகிறார் என்பதால் அதனை உடனின்று தோள் கொடுக்க நாங்கள் முடிவு செய்தோம்.

மெக்சிகோ, வட அமெரிக்காவின் கீழ் பகுதியில், அமெரிக்காவின் தெற்கே
உள்ளது. தலைநகர் ‘மெக்சிகோ சிட்டி ‘. அங்கு தான் சென்றோம். ஆம்ஸ்டெர்டாமிலிருந்து நேராக மெக்ஸிகோ ஃப்ளைட். அமெரிக்கா வழியேதான் பறக்கிறது.

அந்த ஃப்ளைட்டில் நாங்கள் மட்டுமே இந்தியர்கள். முழுவதும் ஸ்பானிஷ் மக்கள். பல விமானங்களில் பயணம் செய்திருந்தாலும்,இந்த விமானத்தில் பறந்த போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் படபடக்க ஒரு பயம் . பயமா,எக்ஸைட்மெண்டா ,ஏதோ ஒன்று. நீண்ட பயணம். பின்னால் நண்பர்களாகிப் போன ஸ்பானிஷ் மக்கள்,அன்று மிகுந்த அச்சத்தை அளித்தனர். அவர்களது ஹேர்ஸ்டைல்,உடைகள் மற்றும் வெளித்தோற்றத்தினால்.

இரவு 8 மணியளவில் தரை இறங்கினோம். ஏர்போர்ட்டில் அட்டையுடன் வெள்ளை சீருடையில் டிரைவர் அழைக்க வந்திருந்தார். நன்றாக ஆங்கிலம் பேசினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேர கார் பயணம். எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூட்ஸில் இறக்கி விட்டுச் சென்றார். ஒரு வாரம் முன்பே எங்கள் வருகை தெரியுமாதலால், ரிஸ்ப்ஷனில் நல்ல வரவேற்பு இருந்தது. மூன்றாம் மாடியில் அறை என்ற பெயரில் வீடு கொடுத்திருந்தார்கள். இரண்டு பெட்ரூம்கள், இரண்டு பாத்ரூம்கள், இரண்டு டீவி, சோஃபா கம் பெட், மினி ஹால் அண்ட் கிச்சன் என பெட்டி போன்ற ஒரு அழகான வீடு. ஏற்பாடு செய்தவர்களுக்கு மிகவும் நன்றி கூறிவிட்டு,இரண்டு நாள் பயணமாதலால் அடித்துப் போட்டது போல உறங்கி எழுந்தோம்.

மெக்சிகோ செல்கிறோம் என்றதும் குடும்பத்தில் ஏன் பயம் என்றால்,கேள்விப்பட்ட விஷயங்கள் தான். அங்கே ட்ரக்ஸ்-போதை மருந்து மிக சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் , மிகவும் சுதந்திரமான கலாச்சாரம், உடைகளாகட்டும், ஆண்-பெண் உறவுகளாகட்டும், அப்புறம் போதைக்கு அடிமையானவர்கள் பணத்திற்காக செய்யும் வழிப்பறிகள், கொள்ளைகள், அதனால் நடக்கும் கொலைகள் என டீவியில் பார்ப்பதும்,செய்தித்தாளில் படிப்பதும் ஒரு பீதியை உண்டுபண்ணி இருந்தது. அப்படிப்பட்ட தெரியாத ஒரு நாட்டிற்கு உடன் யாரும் இல்லாமல் நாங்கள் செல்வது பயத்தை உண்டுபண்ணியது நியாயம் தானே!

நாங்கள் சமாதானம் சொல்லி விட்டு சென்றோம். ஆர்வக்கோளாறுன்னு சொல்வாங்கள்ல, அது கொஞ்சம் அதிகம் தான் எங்களுக்கு. வடிவேலு ஸ்டைலில் “கொஞ்சம் ஓவரா தான் போறோமோ, போவோம், என்ன பண்ணிருவாங்க”. அப்புறம் “ரிஸ்க் எடுக்கறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி” இப்படி வடிவேலு பேசின எந்த தெனாவெட்டு டயலாக்ஸையும் பொருத்திக் கொள்ளலாம்.

மறுநாள் எழுந்ததும் முதலில் கிழக்கா மேற்கா என சூரியனைப் பார்த்து அறிந்தோம். ஆஹா, நம்ப ஊர் சூரியன் என நட்பு தோன்றியது. அவர் ஒருவர் தான் மெக்சிகோவில் நாம் தினம் பார்க்கப்போகும் நண்பர். முதல் மூன்று நாட்களுக்கு என் கணவருக்கு ஆபீஸ் பளு ஏதும் இல்லை. ஆபீஸ் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டால் போதும். அப்போது தலைமையில் இருந்தவர் ஒரு சைனீஸ். அந்த இரு வருடங்களில் மிக சுமூகமான நண்பராகிப் போனார். அமெரிக்கர்களும்,ஸ்பானிஷ் மக்களும் ஆபீஸ் முழுதும் பரவலாகி இருந்தனர். இந்தியாவிலிருந்து சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. சில மாதங்கள் கழித்தே ஐந்து,ஆறு பேர் வந்து சேர்ந்தார்கள்.

எங்களது முதல் கடமை, வெளியே சென்று இருக்கும் ஏரியா எப்படி உள்ளது என பார்க்க வேண்டும். சூட்ஸை இனி வீடு என்றே சொல்லுகிறேன். இரண்டு படுக்கை அறை கொண்ட அபார்ட்மெண்ட் தானே. வரவேற்பறையில், அன்று டுயூட்டியில் இருந்த பெண்ணிற்கு ஆங்கிலம் தெரியாது. நாளை வரப்போறவருக்குத் தான் தெரியுமாம். அதனால் நாங்களாக தெருக்களில் நடக்க ஆரம்பித்தோம், ‘இண்டிபெண்டென்சியா’ அதாவது மெக்சிகோ சிட்டியின் மிக முக்கிய லேண்ட்மார்க் அது. அமெரிக்க நியூ யார்க் சிட்டியின் ‘அமெரிக்க சுதந்திர தேவி’ சிலை மாதிரி.

எங்கள் மிக அருகில்! வரிசையாக பார்க்குகள், வண்ணவண்ண மலர்த்தோட்டங்கள் , சுற்றிலும் ‘ரிங் ரோடு’ போல சிமெண்ட் பாதை, அங்கே வாகனங்கள் அனுமதி இல்லை. அதனை சுற்றியுள்ள அடுத்த சர்கிலில், ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கு ஒரு முறை செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சைக்கிள், ரோலர் ஸ்கேட்டில் போவோர், நடந்து செல்வோர் என பொது மக்களுக்கு ஒதுக்குகிறார்கள். மிகவும் அழகான ஒழுங்கு வரிசை. ஆச்சரியமான மக்கள் உத்துழைப்பு. சூப்பர் இடம் தான் என எங்கள் முகத்தில் அப்போதுதான் சிரிப்பே வந்தது !

ஊரோடு எப்படி ஒன்றிப்போனோம் என்று வரும் வாரங்களில் பார்க்கலாம்.

-ஷீலா ரமணன்,டெக்சாஸ்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!