அமெரிக்க நாடக விழாவில் மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் மருத நாயகம்... வெள்ளி ,ஞாயிறு சிறப்பு காட்சிகள்.. - VanakamIndia

அமெரிக்க நாடக விழாவில் மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் மருத நாயகம்… வெள்ளி ,ஞாயிறு சிறப்பு காட்சிகள்..

மினியாபோலிஸ்(யு,எஸ்): அமெரிக்க நாடக விழாவில், மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் மருத நாயகம் நாடகம் இடம் பெறுகிறது. மினியாபோலிஸ் நகரத்தில் ஆண்டு தோறும் ஃப்ரிஞ்ச் என்ற நாடக விழா ஒரு வாரம் நடைபெறும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி ஆரம்பமான விழா, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. நகரம் முழுவதும் மொத்தம் 17 அரங்குகளில் மதியம் ஒரு மணி முதல் நாடகங்கள் நடத்தப் படுகிறது. இந்த ஆண்டு 167 நாடகங்கள் அரங்கேறியுள்ளன.

ஒவ்வொரு நாடகத்திற்கும் 5 காட்சிகள் வீதம் மொத்தம் 835 காட்சிகளை, சுமார் 50 ஆயிரம் பேர் கண்டு களிக்கின்றனர். நகைச்சுவை, நடனம், குழந்தைகள், இலக்கியம் என பல்வேறு பிரிவுகளில் நாடகங்களை நடத்த, அமெரிக்காவின் வெவ்வேறு பகுதியிலிருந்தும் குழுவினர் வந்துள்ளனர்.

நியூயார்க் நகருக்கு அடுத்த படியாக, அதிக அளவில் நாடக அரங்கங்கள் கொண்து மினியாபோலிஸ் நகரமாகும். கலை இலக்கியங்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாடகங்களை கண்டு ரசிக்கும் ரசிகர்களும் அதிகமான உள்ளனர்.

இந்த நாடக விழாவில் பங்கு பெறுவதற்கு பல முக்கிய நிபந்தனைகள் உண்டு. குழுவினரின் படைப்பாற்றல், நாடகத்தின் மையக்கரு, உருவாக்கம், முந்தைய படைப்புகள் என பலவற்றையும் ஆராய்ந்த பிறகே வாய்ப்பு வழங்கப்படும்.

மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரண்டாவது ஆண்டாக இந்த விழாவில் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு விழாவில் சிலப்பதிகாரம் நாடகத்தை அரங்கேற்றினார்கள், இந்த ஆண்டு மருத நாயகம் நாடகம் இடம் பெற்றுள்ளது.

பறையிசை , துடும்புடன் ஆரம்பமாகும் நாடகத்தில் பாடல்கள் தமிழிலும், வசனங்கள் ஆங்கிலத்திலும் உள்ளன.50 நிமிடங்களுக்குள், தமிழர்களின் பாரம்பரிய சிலம்பாட்டம், வாள் வீச்சு ஆகியவற்றையும் இணைத்து வடிவமைத்துள்ளார்கள். வானாமாமலையின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் உருவாக்கப்பட்டு, பிரத்யேகமாக இசை அமைக்கப்பட்டுள்ளன. The Intrepid என்ற பெயரில் அரங்கேற்றப் படுகிறது.

22 பேர் பங்கேற்கும் இந்த நாடகத்தை சச்சிதானந்தன் இயக்கி உள்ளார். கடந்த வார இறுதியில் மூன்று காட்சிகள் அரங்கேற்றப் பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி என் இன்னும் இரண்டு காட்சிகள் நடைபெற உள்ளது.

இது வரை நடைபெற்ற காட்சிகளில் பார்த்து ரசித்த அமெரிக்கர்களும், நாடகத்தையும், காட்சி அமைப்பு, நடனம் மற்றும் உடை அலங்காரத்தையும் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்க நாடக விழாவில் தமிழரின் காவியமான மருத நாயகத்தை அரங்கேற்றும் அமெரிக்கத் தமிழர்களின் முயற்சி பெருமைக்குரியதாகும்.

American Tamils are staging Marudha Nayagam drama in American Drama Festival being held in Minneapolis. Minnesota Tamil Sangam is presenting this drama filled with Parai music, Silambam, Sword Fight and dances in the annual drama festival Fringe

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!