மதுரவீரன் - விமர்சனம் - VanakamIndia

மதுரவீரன் – விமர்சனம்

சண்முக பாண்டியன் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘மதுரவீரன்’. கிராமத்து பின்னனியும் ஜல்லிக்கட்டின் பெருமையையும் கூறி வெளிவந்திருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை பார்த்து விடலாம்.

மதுரை அருகே உள்ள சிற்றூர் கிராமம். வயல் வெளி, ஜல்லிக்கட்டு காளைகள், வாடிவாசல் என வீர கிராமத்திற்கு பெயர் போன ஒரு ஊர்தான் இந்த சிற்றூர்

மலேசியாவில் இருந்து தனது சொந்த கிராமத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று தனது அம்மாவுடன் சிற்றூர் வருகிறார் சண்முகபாண்டியன். ஆனால், உண்மை என்னவென்றால் தனது அப்பா சமுத்திரக்கனியைக் கொன்றது யார் என்று தெரிந்து அவரை பழி தீர்க்கவும், தனது ஊரில் நின்று போன ஜல்லிக்கட்டை நடத்தவும் தான் அந்த ஊருக்கு வருகிறார் சண்முகபாண்டியன்.

ஊரில் வேலாராமமூர்த்தி ஒரு ஜாதி இனத்தின் வீரியமாக நிற்க மற்றொருபுறம் மைம் கோபி அவருடைய ஜாதியை தூக்கி பிடித்து நிற்க இரு ஜாதியினருக்கும் ஏற்படும் மோதலால் பல வருடங்களாக அந்த ஊரின் ஜல்லிக்கட்டினை நிறுத்தி வைக்கிறார்கள்.

நின்று போன அந்த ஜல்லிக்கட்டு நடந்ததா..? தனது அப்பா சமுத்திரக்கனியை கொன்றது யார் என்பதை சண்முகபாண்டியன் கண்டுபிடித்தாரா..? என்பதே படத்தின் மீதிக் கதை.

சண்முகபாண்டியன் படத்திற்கு சரியான ஒரு தேர்வு தான். சகாப்தம் படத்தின் மூலம் அறிமுகமானாலும் இதுவே அவரது முதல் படம் போன்ற ஒரு பூர்த்தியை நிறைவாக கொடுத்திருக்கிறார்.

காதல், சண்டை, செண்டிமெண்ட் என சில காட்சிகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

வழக்கம்போல் சமுத்திரக்கனி தனது யதார்த்த, வீரியமான நடிப்பை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

ஜாதிக்கு எதிரான குரல், விவசாயத்தை ஆதரித்து வரும் குரல் என மக்களிடையே எளிதில் சென்றடையும் படியான வசனத்தை வாரி இறைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

மாரிமுத்து, தேனப்பன், வேலா ராமமூர்த்தி, மைம் கோபி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். பால சரவணின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன.

நாயகி மீனாக்‌ஷி துள்ளல் கொஞ்சலில் ரசிக்க வைக்கிறார்.

ஜாதியை தூக்கி பிடித்து இதுவும் ஒரு ஜாதிய படம் தான் என்று எண்ண வைத்தாலும், அழகான கிராமத்து நடைமுறை, வழக்கத்தை கண்முன்னே வந்து நிறுத்தியதால் மதுர வீரனை நிச்சயம் கொண்டாடலாம்.

மதுரவீரன் – வீரன் வாகை சூடினான்!

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!