அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நெப்போலியன்.. அப்படியே ஹாலிவுட்டிலும் இடம் பிடித்தார்! - VanakamIndia

அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நெப்போலியன்.. அப்படியே ஹாலிவுட்டிலும் இடம் பிடித்தார்!

சென்னை: முன்னாள் அமைச்சரும் நடிகருமான நெப்போலியன், அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது வந்து தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்தார். அட, நீங்க ஏன் இந்தியாவுக்குப் போய் சிரமமப்படுறீங்க, இங்கே ஹாலிவுட்டுகே வந்துடுங்கன்னு, அவரை அமெரிக்கத் திரையுலகம் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது

கைபா பிலிம்ஸ் என்ற நிறுவனம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” ஹாலிவுட் திரைப்படத்தில் நெப்போலியனை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். இந்தப் படத்தின் மூலம், அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராகவும் களம் இறங்கி உள்ளார்.

இத்திரைப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற ஒரு முக்கியமான வேடமேற்றிருக்கும் நெப்போலியன், இதன் மூலம் சர்வதேச அரங்கில் ஒரு நடிகராக அறிமுகமாகிறார்.

க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில், ஹாலிவுட்டிலும் பிரசித்தி பெற்ற பேய் சமாச்சாரங்களும் இருக்கிறது. எக்ஸார்சிஸ்ட் போன்ற பயங்கரமான படங்களுக்கு பெயர் போனதல்லவா ஹாலிவுட்.

எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சாம் லோகன் கலேகி இயக்குகிறார். நைன் ரூஜாக ஜெஸ்ஸி டீன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஹிப்-ஹாப் பாடகர் எமினெம்மின் இளைய சகோதரர் நாதன் மாதேர்ஸ், புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் ஸ்விப்ட்டி மக்வே படத்தில் நடித்தும் அசத்தியுள்ளார். நெப்போலியனுடன், தமிழ்ப் பின்னணி பாடகர் தேவன் ஏகாம்பரமும் அறிமுகமாகிறார்.

அமெரிக்காவின் பிரபல முன்னணி விளம்பரப்பட ஒளிப்பதிவாளர் இஸ்தவன் லேட்டங் காமிராவை கையாண்டுள்ளார். உயர்தரத்திலான ஒளிப்பதிவு சாதனங்களை படத்திற்கு பயன்படுத்தியதாகவும், ஒளிப்பதிவு பரபரப்பாகப் பேசப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

அயல்நாட்டு இராணுவப்பணியை முடித்துவிட்டு சொந்த ஊரான லேக் ஓரியன் பகுதிக்கு ஜெஸி வருகிறார். அந்தப் பகுதியில் நடைபெறும் தொடர் கொலைகள், விவரிக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகள், ஜெஸியின் காதல், விசாரணை அதிகாரியாக வரும் பின்னிக், அருங்காட்சி காப்பாளர் நெப்போலியன் ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ள ”டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” படம் மூலம் ஹாலிவுட்டிலும் வலுவான இடத்தைப் பிடிப்பார் நெப்போலியன் என எதிர்பார்க்கப் படுகிறது.

சென்னையில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். சமீபத்தில் டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற மிஷிகன் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியிலும் நெப்போலியன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!