ரஜினிகாந்தின் இலங்கைப் பயணத்தைத் தடுக்கும் குழப்பவாதிகள்! - விடுதலைப் புலிகள் எச்சரிக்கை - VanakamIndia

ரஜினிகாந்தின் இலங்கைப் பயணத்தைத் தடுக்கும் குழப்பவாதிகள்! – விடுதலைப் புலிகள் எச்சரிக்கை

யாழ்ப்பாணம்: லைகா பவுண்டேசன் மற்றும் நடிகர் ரஐினிகாந்தின் ஈழத்து வருகை தொடர்பான விமர்சனங்களை குழப்பவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் விசேட அணியின் பெயரில் சில தினங்களுக்கு முன் வந்த ஒரு அறிக்கை:

ஞானம் பவுண்டேசன் தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகளையும் நடிகர் ரஐினிகாந்தின் தாயகத்து வருகை பற்றியும் விமர்சிப்பவர்களுக்கு இதுவொரு முற்றுப்புள்ளி.

தாயகத்தை பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரின் அக்கறையின் பிரகாரம் தாயகத்தில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு அரசுக்கு இணையான வகையில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தின் தனிப்பட்ட கவனத்தினால் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று 150 வீடுகளை கட்டிக்கொடுக்கப்படுகின்றது. இந்த வீடுகளை கட்டி முடிப்பதற்கு என்று சுமார் 22 கோடி வரையில் நிதி ஒதுக்கப்பட்டு குறித்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேலைத்திட்டம் எதுவித பிரச்சாரங்களும் இன்றி முன்னெடுக்கப்பட்டு நிறைவுக்கு வருகின்ற நிலையில் அத்திட்டம் தொடர்பில் பலரும் பல சர்ச்சைக்குரிய முறையிலும், வேதனையை ஏற்படுத்தக்கூடிய முறையிலும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறித்த வீட்டுத்திட்டம் கையளிப்பு மற்றும் அந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து நடிகர் ரஐினிகாந்த் சென்று கலந்து கொள்ளுவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் வேலைத்திட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

புலம்பெயர் நாடு சென்றாலும், தாயகத்தில் உள்ள மக்களின் நலனில் அக்கறை கொண்டு தனது தாயகப்பற்றை எதுவித பிரச்சாரங்களும் அற்ற நிலையில் வெளிப்படுத்தும் ஞானம் பவுண்டேசன் முன்மாதிரியான பல வேலைத்திட்டங்களை தாயகத்தில் முன்னெடுத்து வருகின்றது.

தாயகத்திலிருந்தும் சரி, தமிழகத்தில் இருந்தும் சரி, பலவகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு ஞானம் பவுண்டேசன் இன்று தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருள் ஆகிவிட்டது. தாயகத்தில் அரசு செய்து கொடுத்திருக்க வேண்டிய வேலைத் திட்டங்களை, இந்திய அரசோ அன்றி தாயகத்து தமிழ் மக்கள் மீது அன்பு வைத்திருப்பதாக காட்டிக்கொள்ளும் தாயகத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியுமோ அன்றி தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு கட்சியுமோ முன்னெடுக்காத நிலையில், ஞானம் பவுண்டேசன் முன்னெடுத்துள்ளது. எனவே இந்த சிறந்த பணியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம்.

ஞானம் பவுண்டேசன் மீதும் அந்த நிறுவனத்தின் தொடர்பால் நடிகர் ரஐினிகாந்த் தாயகம் செல்வது பற்றியும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் தங்களின் குற்றச்சாட்டை முன்வைக்க எதுவித முகாந்திரமும் இல்லாத நிலையில் தங்களின் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பொருத்தமற்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தாயகத்தில் எங்கள் உறவுகள் பொருத்தமற்ற வீட்டு வசதிகள் இன்றி கடுமையான இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகையில், ஞானம் பவுண்டேசன் மீது முன்வைக்கும் இம்மாதிரியாக விமர்சனங்கள் இனத்தின் மீது பற்று வைத்துள்ள ஒரு சிறந்த சமூக சேவக நிறுவனம் மீது சேறு அள்ளிப்பூசும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இன்று ஞானம் பவுண்டேசன் மீது குற்றம் கூறும் ஒவ்வொரு நபர்களும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இம்மக்களுக்கு என்று எவ்வகையான நல்ல காரியங்களை செய்துள்ளனர் என்றும், எவ்வளவு தூரம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர் என்றும் சுய ஆய்வு செய்து கொள்ளல் சிறப்பானதாக இருக்கும்.

இது தொடர்பில் தமிழகத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையவை அல்ல என்றும் நாம் எடுத்துரைக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரினால் தமிழ் மக்களுக்கு என்று எதுவித முன்னோடியான வேலைத் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத தொல் திருமாவளவன் எதன் அடிப்படையில் ஞானம் பவுண்டேசன் மீது தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார் என்றும் நாம் ஐயம் எழுப்பியுள்ளோம்.

தமிழின விடுதலை மீது பற்று வைத்துள்ளவர் என்று தமிழ் மக்களுக்கு காட்டிக் கொள்ளும் திரு தொல் திருமாவளவன், தமிழ் மக்களுக்கும் அன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் எதுவித உதவிகளும் செய்ததில்லை. மேலும் திருமாவளவன் மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத் திட்டங்களை முடக்கும் வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கைகள் விடுவதனையும், முற்றாக தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

விசேட அணி

தமிழீழ விடுதலைப் புலிகள்

In a press release the LTTE has strongly warned Tamil leaders who criticised Rajini’s Sri Lanka trip and Lyca’s Gnanam Foundation.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!