ஏக்கமும் பாசமும்... அமெரிக்காவில் ஓர் நிஜக் கதை - VanakamIndia

ஏக்கமும் பாசமும்… அமெரிக்காவில் ஓர் நிஜக் கதை

மாதவி இந்தியாவிலுருந்து வந்து இரண்டு நாள் ஆச்சு . சேதுவுடன் சரியாகப்பேசவேயில்லை . கேட்ட கேள்விகளுக்கு மட்டும் சின்ன சின்ன பதில்கள் . அவளாக சொல்லக் காத்து இருந்தான் . நாளை இரவு இவன் நண்பன் கதிர் டின்னெர்க்கு கூப்பிட்டிருக்கிறான் . மாதவி சரியென்பாளா.? தெரியவில்லை .

இரவு குழந்தை மதுக்குட்டிக்கு உணவு முடித்தாள். ’ஹேய், மாது .. கமான்யார் …நீயா ஏதோ கவலை பட்டுகிறதை விடு …ஷேர் வித் மீ , இந்தியால யார் யாரைலாம் மீட்பண்ணின சொல்லு மாது’ என சேது கேட்டதும் ‘ம்.. ‘ என நீண்ட பெருமூச்சுதான் பதிலாக வந்தது .

’இட்’ஸ் ஒகே மாது . கதிர் நாளை டின்னருக்கு கூப்பிட்டுஇருக்கான் , ஒகே சொல்லட்டுமா ’ என்றதும் ’ப்ளீஸ் சேது , நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம்னு சொல்லுங்க ’ என்று மட்டும் பதில் வந்தது .

இரவு உணவு முடிந்து குழந்தையும் தூங்கிவிட்டாள். மதுக்குட்டி விளையாடி சிதறி விட்டுச்சென்ற பொம்மைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் மாதவி..சேது தன்னையே பார்த்தபடி சோபாவில் அமர்ந்தது தெரிந்தது .

’கமான் மாது .. ரெண்டு நாளாச்சு ,.. நீ சரியா சாப்பிடலை, தூங்கலை, . நடந்தது நடந்துபோச்சு.. சொல்லு எல்லாத்தையும்’ என சேது கேட்டதும் குபுக்கென்ன அழ ஆரம்பித்தாள் மாதவி .

மூன்று வாரங்களுக்கு முன் ஒரு திங்கள் அன்று காலை குழந்தைக்கு ஸ்கூல் லஞ்ச் தயார் பண்ணிக் கொண்டிருந்தாள். அப்போது ஐஎஸ்டி கால் வந்தது பூனாவிலுருந்து . மாதவியின் அண்ணன் குடும்பம் பூனாவில் இருக்கினறனர்.அண்ணன் மகன் அருணுக்கு ஒரு பிரபல ஐடி கம்பெனியில் அன்று இன்டெர்வியு.

அருணின் மாமா குடும்பமும் பூனாவில் தான் இருக்கிறார்கள். மாமா மகன் குரு , அருணை சந்திக்க ஓரிடத்தில் காத்திருக்கிறான். அங்கு பைக்கில் வந்து சேர்ந்த அருண், குருவை தன் வண்டியில் ஏற்ற முற்படும் போதுதான் மிகப்பெரிய அந்த ஆக்சிடென்ட் நடந்தது.

தாறுமாறாக கவர்ன்மென்ட் பஸ்ஸை ஓட்டி வந்த ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட டிரைவர், எல்லார் மேலேயும் மோதியபடி வந்தவன் வண்டியில் நின்று இருந்த அருணையும் சாய்க்க……

ரத்தவெள்ளத்தில் சிக்கிய அருணை ‘ஐயோ’ என அலறியபடி குரு அள்ளி பக்கத்தில் மூடியிருந்த ஒரு ஜெராக்ஸ் கடை வாசலில் இழுத்து போட்டு விட்டு, உதவிக்கு ஆள் கூப்பிட ரோட்டுக்கு ஓடியபோது , அதே பஸ் ரிவெர்ஸில் திரும்பி வந்து குருவையும் சின்னா பின்னமாக நசுக்கிப்போட்டது.

நிமிடத்தில் ஊரெல்லாம் செய்தி பரவ, போலீஸ் வண்டிகளும் , ஆம்புலன்ஸகளும் பறந்தன . ஒரே கத்தல்கள்,கதறல்கள்.

முன் பின் தெரியாதவர்கள் ஒருவருக்கொருவர் உதவிட அருணின் பாண்ட் பாக்கெட்டிலிருந்த பர்சிலிருந்து போன் நம்பர் பார்த்து மாதவியின் அண்ணனுக்கு தெரிவிக்க,குடும்பம் துடித்துப்போனது. அருண் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டான். ஆபரேஷன் நடந்து முடிந்தது. மகனைப் பார்த்த குடும்பத்தினர் மயங்கி சரிந்தனர். அருணின் இடுப்புக்கு கீழ் வெறுமை..

இது இப்படியென்றால் அண்ணியின் சகோதரன் மகன் குரு எங்கே? அவர்கள் குடும்பம் கேட்ட செய்தியும் பார்த்ததும், கூழாய் போன குருவின் உடலைத் தான்.

இத்தனையும் தான் அன்று மாதவி ஐஎஸ்டி யில் கேட்டது. கிடைத்த ஃப்ளைட்டில், மாதவி மட்டும் இந்தியா சென்று, இரண்டு வாரங்கள் கழித்து இப்போதான் திரும்பினாள் .

அருணுக்கு இனிமே தான் வாழ்க்கை . நல்ல வேலை , நல்ல சம்பளம் , அருண் அவ்ளோ சந்தோஷமா இருந்தானாம். இப்போ எல்லாம் போய் மத்தவங்க உதவியோட அந்தப்பையன் வாழப் போறதை பாக்க சகிக்கலை சேது.. அண்ணனும் அண்ணியும் நடைபிணமாகி விட்டனர்.

இங்கே இப்படின்னா, அண்ணியின் வீட்டில் நடந்ததோ மகாக் கொடுமை. குரு அருமையான பிள்ளை, கைநிறைய சம்பளம் , இந்த வருஷம் கல்யாணம் நடக்க ஏற்பாடாகியிருந்தது .

மாதவி தொடர்ந்தாள் ”அண்ணன் சொல்லிச்சொல்லி அழுகிறார் , அருணுக்காவது காலோடு போச்சு,இவனை வாழ்த்த வந்த அந்தக் குழந்தை இல்லாமலேயே போச்சே ” என.

சேதுக்கு மனம் கலங்கி அழுகை வந்தது . குருவால் தான் இன்று அருண் உயிரோடு இருக்கிறான் . மாதவி கண்களை துடைத்தபடி , “நாம எப்படி வாழறோம் சேது ,எவ்வளவு ஈகோ . இங்கு இருப்போரிடம் சந்தோஷம்னா கூட அவங்க மூடு பார்த்துதான் நம்ப விஷயத்தையே ஷேர் பண்ண முடியறது . போன் பண்ணாம ஒரு அவசரம்னாகூட பிறர் வீட்டுக்கு எட்டிப்பாக்க முடியறதில்லை.

நாம பண்ணின பதார்த்தங்களை கொடுக்கணும்னாகூட வரலாமான்னு கேட்டா, அவங்க வீட்டில கணவனோ , மனைவியோ கொஞ்சம் யோசிக்கிறார்களோ எனப் படுகிறது , இல்லையா சேது ?

அங்கே போனப்ப என் அண்ணி முகத்தை பாக்கவே வெட்கமா இருந்தது சேது .உங்களுக்கு நினைவு இருக்கா…? அவங்க அக்கா ஹஸ்பெண்ட் , ஆபீஸ் விஷயமா நியூ யார்க் வரப்போறார் , நியூ ஜெர்சியில் நம்ப வீட்டில தங்கிக் கொள்ளலாமான்னு கேட்டப்போ, எப்படி தயங்கினோம் நாம.

அப்போ உண்மையா கனடா போற ப்ளான் இருந்தது மதுவுக்கும் லீவு இருந்ததுனால ..ஆனா நினைச்சா கேன்சல் பண்ணிருக்கலாம் , போட்ட ப்ளான் கெட்டுபோயுடுமோனு ஊரிலேயே இல்லைன்னு சொல்லிட்டோம்.

அப்பறம் போனமுறை நாம இந்தியா போனப்போ, உங்க அத்தை பொண்ணு எத்தன முறை அவ வீட்டுக்கு நம்பளை அழைச்சா..? அவ வீட்டுக்கு போற வழி கொஞ்சம் நல்லா இருக்காதுன்னு நாம போகலை.

இதுமாதிரி நாம உறவுகாரங்களிடேயே ஏற்ற தாழ்வு பார்த்து, அவங்க வீட்டுக்குலாம் போணுமானும், யூ எஸ்ல இருந்து ஏதும் கேட்டுடுவாங்களோன்னு பலரையும் அவாய்டு பண்றோம். பட் அங்கே எப்படி தெரியுமா சேது?

என் சித்தி கும்பகோணம் பக்கத்தில இருக்க ..அருணுக்கு இப்படி ஆனது தெரிஞ்சதும் ரயில்பிடுச்சு வந்து , இன்னும் ரெண்டு மாசம் அண்ணிக்கு உதவியா இருக்கப்போறா.அண்ணியோட அக்கா தினமும் சமைச்சு கொடுத்ததும் , மாரல் சப்போர்ட்டும் தராங்க .

நான் பத்து வருஷமா மீட் பண்ணாத அத்தை, மாமா பொண்ணுங்க , சித்தி பிள்ளைங்க எல்லோரும் மனசார உதவி செய்யறதை பாக்கறப்போ .. நம்மளை போல வாழற பலரது வாழ்க்கை ரொம்பத் தப்புன்னு தோணுது சேது.

சேதுவுக்கு அங்கே உட்காரவே முடியவில்லை..இத்தனை நாட்களில் தெரியாமல் செய்த செயல்கள் பல மனதில் குத்த ஆரம்பித்தது . இவனுக்கும் இதேபோல நல்ல அனுபவங்கள் நடந்திருக்கிறது. அவன் அம்மா இறந்தபோது பெயர்கூட தெரியாத உறவுகள், அம்மாவின் பத்தாம் நாள், பதிமூன்றாம் நாள் காரியங்களை இழுத்துப்போட்டு செய்துவிட்டு சொல்லாமல் விடைபெற்றனர் .

இவனைப் போன்ற ஆட்களை இம்மாதிரி காரியங்களுக்கு கூப்பிட்டால் , லீவு போடத் தயக்கம் .செலவை யார் ஏற்றுக்கொள்வது என்ற தயக்கம், என கணக்குப் பார்க்கும் மனதை யாரோ பிராண்டுவது போல வலித்தது .

பால்கனி பக்கம் போனான். அந்தக் குளிரிலும் உடல் வேர்த்தது . மாதவி அருகில் வந்து , “பணம் காசை விட உறவும் அன்பும் ரொம்ப பெரிசு சேது. நம்ப சொந்தக்காரங்கள்ல பலர் வெளிநாட்டு சுகம் அனுபவிச்சதில்லை. நம்மகிட்ட ஏதும் எதிர்பாக்கவும் இல்லை. சமயத்துக்கு உதவ வரவும் தயங்குவதில்லை..பார்ர்த்தீங்களா. நம் மக்கள் மேன்மக்கள் தானே” என்றவளை உண்மைதான் என ஏற்று அணைத்துக் கொண்டான் சேது.

– ஷீலா ரமணன் , சான் அன்டோனியோ , டெக்சாஸ்

குறிப்பு : இந்தக் கதை அமெரிக்கத் தமிழர்கள் இருவருடைய வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!