பழந்தமிழ் இலக்கியங்கள் மீது அமெரிக்கர்கள் ஆர்வம்... கோலாகலமாக நடந்த குறுந்தொகை மாநாடு! - VanakamIndia

பழந்தமிழ் இலக்கியங்கள் மீது அமெரிக்கர்கள் ஆர்வம்… கோலாகலமாக நடந்த குறுந்தொகை மாநாடு!

வாஷிங்டன்(யு.எஸ்) வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்,வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டம், மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இணைந்து ’குறுந்தொகை மாநாடு’ நடத்தினார்கள்.

பேரவைத் தலைவர் சுந்தர் குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். திருக்குறள் மாநாடு, புறநானூறு மாநாடு வரிசையில் இது மூன்றாவதாக, தமிழ் அமைப்புகள் இணைந்து வாஷிங்டனில் நடத்தும் தமிழ் மொழிக்கான மாநாடு என்று குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினர்களாக அ.கலியமூர்த்தி ஐபிஎஸ், முனைவர். மருத நாயகம், முனைவர்.முருகரத்தினம், முனைவர். மோகன், முனைவர்.நிர்மலா மோகன் ஆகியோர் பங்கேற்றனர். குறுந்தொகை ஆய்வு என்ற கருத்தில் உரையாற்றினர்.

’தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் விஞ்சி நிற்பது சங்க இலக்கிய அகப் பாடல்களா ? புறப் பாடல்களா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மதிய சிறுதானிய உணவு இடைவேளைக்குப் பிறகு குறுந்தொகைப் பாடல்களை இசை வடிவில் பாபு விநாயகம், லதா கண்ணன் வழங்கினார்கள். மகேந்திரன் பெரியசாமி, தமிழ் மணிகண்டன், பன்னீர்செல்வம் குறுந்தொகை பற்றி கவிதைகள் படைத்தனர். அகத்தியன் பெனடிக்ட் ‘குறுந்தொகையில் அலர்’ என்ற தலைபில் உரையாற்றினார்.

பத்து வயது அத்விகா சச்சிதானந்தன் ‘ அகம் என்ன ஆகாததா.. அகன்று நிற்க’ என்ற தலைப்பில் பேசினார். நாஞ்சில் பீற்றர் மற்றும் கொழந்தவேல் ராமசாமி குறுந்தொகையில் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பிரபாகரன் குறுந்தொகையில் உவமை நயம் பற்றி பேசினார். குறுந்தொகையில் காதலை எவ்வாறு சுருங்கச் சொல்லி விளங்கவைத்தார்கள் என்பதையும், அதற்குப் புலவர்கள் உவமைகளை கையாண்ட விதத்தையும் குறிப்பிட்டார்.

இலந்தை இராமசாமி, குறுந்தொகையில் தோழியின் முக்கிய பங்கு பற்றி உரையாற்றினார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான அவசியம் பற்றி டாக்டர் ஜானகிராமனும், டாக்டர் சம்பந்தனும் எடுத்துரைத்தார்கள். அதை வலியுறுத்தி மாதவியின் நடனமும் அமைந்திருந்தது.

மாலையில் சிறப்பு அழைப்பாளர் கலியமூர்த்தியின் உரை இடம்பெற்றது.
தமிழ் இலக்கியங்களில் உள்ள கருத்துக்கள், அன்றாட வாழ்க்கைக்கு எவ்வாறு துணை புரியும் என்பதை எடுத்துக் கூறினார். குறிப்பாக, பெண்களின் முக்கியத்துவம் குறித்து சங்க இலக்கியங்களில் உள்ள
தகவல்கள் எவ்வாறு இன்றைய காலச் சூழ்நிலையோடு ஒத்துப் போகிறது என்பதையும் குறிப்பிட்டார்.

குறுந்தொகை உள்ளிட்ட பாடல்களுக்கு இளைஞர்களின் நடனம் இடம்பெற்றது. கும்மி, ஒயிலாட்டம், பரதமும் களை கட்டியது. நிறைவாக குறுந்தொகையை மையக்கருத்தாகக் கொண்ட நாட்டிய நிகழ்ச்சியில் 50 பேர் பங்கேற்றனர். புஷ்பராணி வில்லியம்ஸ் ஒருங்கிணைத்திருந்தார்.

மாநாட்டு அமர்வுகளை சோம இளங்கோவன், சரவணபவன் மற்றும் அரசு செல்லையா நெறிப்படுத்தினர். மாநாட்டு மலரை, மலர் ஆசிரியர் செந்தில்முருகன் முன்னிலையில், கலியமூர்த்தி வெளியிட்டார். இரண்டு குறுந்தொகை நூல்களும் வெளியிடப்பட்டன. தமிழ்ச்சங்கத் தலைவர் இராசாராம் நன்றியுரை ஆற்றினார்.

One Day conference was conducted for ‘Kurunthokai’, a Sangam Literature of Tamil Language in Washington DC by Tamil organizations

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!