சமூக வலைத்தளத்தில் வரலாறு படிக்காதீர்கள்.. கார்த்திகேய சிவசேனாபதி எச்சரிக்கை..! - VanakamIndia

சமூக வலைத்தளத்தில் வரலாறு படிக்காதீர்கள்.. கார்த்திகேய சிவசேனாபதி எச்சரிக்கை..!

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கார்த்திகேய சிவசேனாபதி சமூக வலைத்தளத்தில் வரலாறு படிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமிழகத்தின் முக்கிய பிரச்சனை நீர் ஆதாரம் என்றும் உலகத் தமிழர்களின் பங்களிப்புடன் அதை தீர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

2012ம் ஆண்டு 12 பேர் மெரினாவில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு போராட்டம், மிகப்பெரிய அளவில் மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவோடு வெற்றி பெற்றதற்கு வெளிநாடு வாழ் தமிழர்களின் பங்களிப்பும் முக்கியமானது.

ஒவ்வொரு சிறு நகரங்களிலிருந்தும் கூட நூற்றுக்கணக்கானவர்கள் குழந்தைகளுடன் கொட்டும் பனியிலும் மழையிலும் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து, இந்திய தூதரகங்களில் வலியுறுத்தியது போராட்டத்திற்கு பெரும் வலு சேர்த்தது.தமிழக நலன்களுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள், இத்தகைய ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சனை நீர் ஆதாரம் ஆகும். ஏதோ மழையே பெய்யவில்லை என்பது போலவும் அதனால் தான் பிரச்சனை என்றும் மக்கள் முன் ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள். கணக்குப் பார்த்தால் சராசரியாக தமிழகத்தில் பெய்யும் மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.

நீரை நாம் உபயோகப்படுத்தும் முறை மாறிவிட்டது. நிலத்தடி நீர் மீண்டும் நிரம்புவதற்கான வழிகள் இல்லை. இறைச்சி, கார்மெண்ட்ஸ் உள்ளிட பல துறைகளின் வளர்ச்சி, நீர்ப்பயன்பாட்டை அந்த துறைகள் பக்கம் திருப்பி விட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாமல் மிகப்பெரிய அளவில் தண்ணீரை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். மணல் கொள்ளையால் வறண்ட நதிகள் ஆகி விட்டன. கேரளாவில் ஒரு பக்கெட் மணல் எடுத்தால் கூட ஊர் மக்களே ஒன்று திரண்டு தட்டிக் கேட்கிறார்கள்.

தமிழகமோ, தென்னிந்தியா மட்டுமல்லாமல் மாலத்தீவுக்குக்கும் மணலை ஏற்றுமதி செய்கிறது. இந்த இயற்கை வளத்தை கொள்ளை அடிக்க நமக்கோ அரசுக்கோ உரிமை இல்லை. இனியும் இந்த கொள்ளை நீடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

உள்ளாட்சியில் தான் ஊழல் முதலில் ஆரம்பிக்கிறது. இங்கே இருக்கும் ஒவ்வொரும் உங்கள் ஊர் உள்ளாட்சி அமைப்பில் மாற்றம் ஏற்படுத்த முடியும். சரியான நபர்களை தேர்ந்தெடுத்து ஊர் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த நீங்கள் உதவி செய்ய முடியும்.

அமெரிக்கத் தமிழர்களின் SaveTamilNaduFarmer போன்ற குழுக்கள் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறார்கள். கடன் தொல்லையால் உயிரிழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இயற்கை விவசாய பயிற்சி கொடுத்து வருகிறோம். உலகத் தமிழர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம். உங்களின் பங்களிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

தற்போது உலகம் முழுவதும் தமிழர்களிடம் மொழி மற்றும் இன உணர்வு மேலோங்கி இருப்பதை காண முடிகிறது. அதே சமயத்தில் தவறான வரலாறு சமுக வலைத் தளங்களின் மூலம் பரப்பப்படுகிறது. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ தமிழர்கள் உறுதுணையாகி விடுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பல அமைப்புகள், குழுக்கள் உள்நோக்கத்துடன் தகவல்களை திரித்து வெளியிடுகிறார்கள். அவற்றின் உண்மைத் தன்மை தெரியாமல், உடனடியாக உலகம் முழுவதும் பரப்பப் பட்டுவிடுகிறது..

எந்த ஒரு தகவலையும் அடுத்தவர்களுக்கு ஃபார்வட் செய்யும் முன்னால், சற்று ஆராய்ச்சி செய்து அதன் உண்மைத் தன்மையை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சமூகத் தளத்தில் வரும் தகவல்களைக் கொண்டு தமிழ், தமிழர் வரலாறு படிக்க முயற்சிக்காதீர்கள். ஆர்வம் இருந்தால் நூலகங்களில் வரலாற்றைத் தேடுங்கள். உணமைக்குப் புறம்பான தகவலகள் சமூகவலைத் தளங்களில் பரவுவதற்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள் என்று கார்த்திகேய சிவசேனாபதி வேண்டுகோள் விடுத்தார்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் செய்திருந்தார்கள். உடன் SaveTamilNaduFarmer மற்றும் ஹார்வர்ட் தமிழ் இருக்கை டெக்சாஸ் கிளை தன்னார்வலர்களும் பங்கேற்றிருந்தார்கள்.அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். வெற்றிச்செல்வன் நன்றியுரை கூறினார். கோமதி தொகுத்து வழங்கினார்.

Karthikeya Sivasenapathy warns against learning history from Social Media. He thanked world Tamils for the extraordinary support for Jallikattu which helped the movement’s success. He has reiterated the need of the water conservation in Tamil Nadu. Corruption to be eradicated from panchayat level and world Tamils can help in selecting right people for local bodies.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!