Kamal Haasan's political entry

உலக நாயகன் அரசியல் வெறும் திண்ணைப் பேச்சா?

– வீகே சுந்தர்

விருமாண்டி விஸ்பரூபம் என்று சர்ச்சைக்குள்ளான சில படங்கள் வெளிவரும்போது, உலகநாயகன் கமலுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அழுத்தங்களும் நெருக்கடிகளும் கொடுக்கப்பட்ட சங்கதிகள்; ஆண்டவரின் ட்விட்டரை பக்கத்தைப் ஃபாலோ பண்ணாத பாமரனுக்கும் தெரியும்!

‘சண்டியர்’ என்று டைட்டில் வைத்து தேனி மாவட்டம் அருகிலுள்ள பாளையம், தேவாரம் பகுதிகளில் படப்பிடிப்பைத் தொடங்கினார் உலகநாயகன். அதெப்படி கமல் ‘சண்டியர்’ன்னு பேர் வைக்கலாம் என்று டாக்டர்.கிருஷ்ணசாமி உலகநாயகனுக்கு எதிராக நேரடியாகவே வாள் சுழற்றினார். அதன் பிறகு ‘விருமாண்டி’ என்று டைட்டில் மாற்றி சென்னை கேம்பகோலாவில் செட்டுப் போட்டு மொத்தப் படத்தையும் எடுக்க நேர்ந்தது தனிக்கதை.

இத்தனைக்கும் கமல் உச்சத்தில் இருந்த நேரம். அந்தப் பிரச்சினை தொடர்பாக, டாக்டர் கிருஷ்ணசாமியை எதிர்த்துக் குரல் கொடுத்தாரே தவிர, நேரடியாக அரசியலுக்கு வருவேன் என்று கமல் சொன்னதில்லை. அதேபோல் ‘விஸ்பரூபம்’ படம் வெளியாவதற்கும் மிகப் பெரிய தடை விழுந்தது. அதற்கு யார் காரணம் என்பது தெரிந்தும் அது பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை உலக நாயகன்.

‘விஸ்வரூபம்’ உரிய நேரத்தில் வெளியாகாவிட்டால், உலகநாயகனின் சினிமா வாழ்க்கை அஸ்த்தமித்துவிடும் என்கிற அளவுக்கு ஆகச் சிக்கலான சூழல்! ’விஸ்பரூபம்’ படத்திற்காக தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து… மிகப்பெரிய முதலீட்டை செய்திருந்தார். அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என உலகநாயகன் வாழ்நாளில் அது இருண்ட காலம்! படம் வெளியாக தடை நீடிக்குமானால் அரசியலுக்கு வருவேன் என்று அவர் சூளுரைக்கவில்லை!? மாறாக ‘இந்த நாட்டைவிட்டு வெளியேறுவேன்’ என்று சொல்லி மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்றாரே தவிர, அரசியல் பிரவேகம் குறித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை!

காரணம்-அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அபோது இருந்த அதிமுக அமைச்சர்களே ‘அம்மா’என்று சொன்னால் சிக்கல் வந்துவிடும் என்று பயந்து ‘ம்மா’ என்று சொல்லிவிட்டு இப்போது ஜெயலலிதா என்று சொல்கிறார்களே அப்படிதான் இப்போதைய உலகநாயகனும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

சரியாக ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்தபின் கமல் மெல்ல மெல்ல தன் அரசியல் குரலை எழுப்ப தொடங்கினார். அதற்கு முக்கிய காரணம் அதிமுக வில் ஏற்பட்ட குழப்படிகள் மற்றும் ஓட்டரசியலில் எந்த கட்சிக்கும் அமோக ஆதரவு இல்லாத ஒரு வெற்றிடம். தவிர,மோடி அரசின் பொருளாதார நெருக்கடி ஆகியவைதான் உலகநாயகனை ட்விட்டர் அரசியலைத் தொடங்க அடிப்படையாக அமைந்தது.

தொடர்ந்து,சகோதரி அனிதாவின் மரணம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் வீராவேசமான கருத்துக்களை தெரிவித்தார். வம்படியாக வந்து சிக்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் தெறிக்க தெறிக்க அரசியல் பேச்சுக்களை பேசினார். அரசியல் பிரவேசம் உறுதி என்பதை பூடகமாகவும் சில சமயம் நேரடியாகவும் வெளிப்படுத்தினார்.

நற்பணி மன்றத்தின் மூலம் வருடத்திற்கு ஒரு முறை ரத்ததானம் மாதிரியான ஒரு சில சமூக நிகழ்வுகளே தன் அரசியல் பிரவேசத்திற்கு போதுமானது என்று உலகநாயகன் நினைத்துவிட்டார். அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பார்ட்டிகளும் நெட்டிசன்களும் பல்வேறு கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் தெறிக்கவிட… நான் அரசியலுக்கு வருவேன் என்று ஆணித்தரமாக பேசிய உலகநாயகன் சற்று பின்வாங்கி விட்டார்.

மக்கள் மத்தியில் உலகநாயகனின் அரசியல் என்ட்ரி பேச்சுக்கு அத்தனை வரவேற்பு இல்லாததற்கு முக்கிய காரணம் அவர் ட்வீட்டர் பக்கத்தில் எழுதும் புரியாத அரசியல் மொழியும் பூடகமான குழப்பமான கருத்துகளும்தான் என்பது ஒரு கருத்து. அவரது ட்விட்டர் பக்கங்களை மொழிப்பெயர்க்க ‘கோனார் நோட்ஸ்’ போட்ட கம்பெனி தனி உரைநூல் போட முயசிக்கிறார்கள் என்ற நம்பகமான செய்தியும் கவனத்திற்கு வந்தது! படித்த மக்களிடைய தன்னுடைய கருத்தை புரிய வைக்கவில்லை என்றால் படிக்காத பாமர மக்களிடைய அரசியல்ரீதியாக அவர் சென்று சேரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதேபோல் தொலைக்காட்சி விவாதங்களிலும் அவருடைய பேச்சு எளிய மக்களுக்கு புரியாத மாதிரியே இருந்தது. “என்னைக்கு இவரு புரியிற மாதிரி பேசியிருக்காப்ல,” என்று கமலை கடந்துபோய்விட்டனர் பாமர மக்கள்.என்னதான் நடிகனாக உலக நாயகன் மக்கள் மனதில் இடம்பெற்றிருந்தாலும் அரசியலில் ஈடுபட கொஞ்சமாவது மக்கள் பணியை செய்திருக்க வேண்டுமல்லவா.

மக்கள் பிரச்னை அல்லது அரசியல்வாதிகளின் ஊழலையாவது எதிர்த்து குரல் கொடுத்திருக்க வேண்டும். அப்படியான எந்த அரசியல் வரலாறும் இல்லாமல், திடீர் அரசியல் பேச்சு சமூக தளத்தில் எடுபடுவதில்லை. ஆனால், தமிழக அரசியல்வாதிகள் உலகநாயகனின் அரசியல்பேச்சு குறித்து பீதியடைந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை! இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பதை ஞாபகமாக மறந்துவிட்ட அரசியல் கட்சிகள், `கமலுக்கு அரசியலில் என்ன தெரியும்.. அவர் என்ன மக்கள் பணியாற்றினார்?; என்று விமர்சிக்க தொடங்கினர்.

இன்றைய தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழலலில் உலகநாயகனால், மக்களுக்கான மாற்று அரசியலில் ஈடுபடும் சாத்தியப்பாடுகளை உருவாக்க முடியும். அதற்கேற்றார்போல சில விசயங்களைச் செய்யவும் செய்தார். சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பிரச்னை குறித்தும் அதில் தீவிரமாக செயல்படும் ஆர்வலர்களுடன் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நடிகன் என்ற பிரமாண்டமும் இருக்கிறது அதனால் அவர் அரசியல் பிரவேசம் மெல்ல மெல்ல கவனிப்புக்குள்ளாகப்படலாம். ஆனால் அதற்கு முன் மக்களிடம் தன் மீதான நம்பிக்கையை விதைக்க வேண்டியிருக்கிறது.

வெறுமனே அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வது… ஊழல் எதிர்ப்புகளை மட்டுமே செய்துகொண்டிருக்க முடியாது. மாறாக அவர் எத்தகைய அரசியல் மாற்றங்களை வைத்திருக்கிறார் என்பதும் அரசியல் திட்டங்கள் என்ன என்பதும், அவர் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய நிலையில் என்ன மாற்றம் வரும் என்பதையும் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பும் வந்த பின்பும் அத்தகைய வாக்குறுதிகளையும் நம்பிக்கையையும் அளித்தே ஆட்சியை இடம்பிடித்தார்கள் என்பது வரலாறு. அதுமட்டுமன்றி அவர்கள் திறமையான அரசியல் ஆலோசகர்களை தங்களுருகில் வைத்துக்கொண்டு அரசியல் வியூகம் அமைத்தார்கள் ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால் அத்தகைய முனைப்புகள் உலகநாயகனிடம் இருக்கிறதா?

கமலின் அரசியல் குழப்பங்களுக்கு நடுவே இதுவரை அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று குரல் மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார், இன்று அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று அறிப்பு கொடுத்துவிட்டார். சூப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசத்திற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் `சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துகள். வருக வருக` என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் உலகநாயகன்.

இனி சூப்பர் ஸ்டாரைத் தொடர்ந்து உலகநாயகன் தன் அரசியல் பிரவேசத்தை ஆணித்தரமாக அறிவிப்பாரா? அல்லது திண்ணைப்பேச்சாக அரசியலை மூட்டை கட்டிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சொல்லி இந்தக் கட்டுரையை நிறைவு செய்வது நல்லதல்ல! ஆழ்வார் பேட்டை ஆண்டவர் பாணியிலேயே சொல்வோம்- ‘புதுவருடம் கண்ண்டிப்பாய் பிறந்தே தீரும். புது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துகள்.

Is Kamal Haasan’s political entry happening this month? VK Sundar’s analysis.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!