மரணத்தின் வடிவில் வந்த விடுதலை... சென்று வாருங்கள் ஞாநி! - VanakamIndia

மரணத்தின் வடிவில் வந்த விடுதலை… சென்று வாருங்கள் ஞாநி!

ஞாநி அவர்களது மறைவு மனதை கனமாக்குகிறது. 1997இல் நான் கிருத்துவக் கல்லூரியில் மாணவனாக இருந்த போது அவர் பழைய மாணவராக வந்திருந்தார். பத்திரிகைத்துறை பற்றிய தன்னுடைய பார்வையை வைத்தார். எங்கள் கல்லூரியின் கபெடேரியாவில் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் அப்போது மாறன் போன்றோர் தான் தமிழ் தொழில் வளர்ச்சியில் பங்கு பெற முடியும் என்றார். ஆனால் அதை அவர் எழுதினாரா என்று தெரியவில்லை. அவர் அவ்வப்போது சார்பு நிலைகள் எடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாத நேர்மை ஒன்றை தக்க வைத்திருந்தார்.

அவரைப்பற்றி நான் தவறுதலாக புரிந்து கொண்ட ஒரு விசயத்துக்காக என்னிடம் வாதம் செய்தார். என்னுடைய கருத்தை மாற்றி நான் பதிவிட்டேன். தொடர்ச்சியாக தன்னை பாரதி வழி நேர்மையாளனாக முன்வைத்தார். இடது தலித் அமைப்புகளில் அவரை சந்தேகக் கண்ணுடனேயே அனுமதித்தார்கள். ஆனால் எங்கும் அவர் தன்னை முழுமையாக ஒப்புக் கொண்டவரில்லை. காஷ்மீர் பிரச்சனை பற்றிய அவரது பார்வை பத்திரிக்கையாளனாக அவருக்கு முக்கியமான இடம் ஒன்றைத் தரும். சுய சாதி மறுப்பில் தெளிவாக இருந்தார். ஜெயலலிதாவை மூர்க்கமாகவே எதிர்த்தார்.

அவர் தன்னை பிரபலமாக முன்வைக்க மாட்டார். தன்னுடைய கருத்தை எளிதாக மாற்றிக் கொள்ளத் தயங்காதவர். உதாரணத்திற்கு ஜல்லிக்கட்டை எதிர்த்ததில் அவர் தான் முன்னோடி. நானும் அவரும் எதிரெதிராக அமர்ந்து சண்டையிடுகிறோம். இடைவேளையில் அவர் என்னிடம் புரிந்து கொள்ள மேலும் தகவல்களை அறிய ஆர்வம் காட்டுகிறார். தன்னுடைய கருத்தின் தடுமாற்றத்தை வெளிப்படையாக முன்வைக்கிறார்.

பின்னர் செம்புலம் கால்நடை பாதுகாப்பில் அவரும் வருகிறார் என்று கேள்விப்பட்டேன். நான் பிரபலங்கள அனைவரையும் நட்புப் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவது வழக்கம். சென்னை கிருத்துவக் கல்லூரியின் பண்பாட்டில் முதன்மையானது கருத்துச் சுதந்திரம். என்னிடம் அவர் அதற்காகவே பலமுறை உள்பெட்டியில் வந்து பேசியிருக்கிரார். கடைசியாக அவர் அனுப்பிய உள்பெட்டி செய்தியில், “நமது கிருத்துவக் கல்லூரியின் ஜென்டில்மேன் கலாச்சாரத்தை பேணும் விதமாக நீங்கள் எனக்கெதிராக எழுதியதற்கு மறுப்பு வெளியிடுங்கள்,” என்றார்.

சுத்தமான நிலைப்பாடு என்று ஒன்றில்லை. அவர் உரையாடலைக் கடுமையாக வைக்க மாட்டார். கருத்து மோதல்களை மீறி ஒரே உறவுப்பாலம் தான். நேர்மைக்கு ஒரு மரியாதை இருக்கிறது. அதை ஞாநி அவர்களுக்கு கொடுப்பதில் யாருக்கும் தயக்கம் இருக்க முடியாது. இந்துத்துவர்களால் வெறுக்கப்பட்டதால் அவரே அனைவரின் பிரியத்துக்கும் உள்ளானவர். இப்படிப்பட்டவர்கள் அன்பை நிராகரிக்கிறார்கள் என்கிற எண்ணம் எனக்கு உண்டு.

“ஆனால் உங்கள் மேல் எனக்கும் பிரியமும் மதிப்பும் உண்டு,” என்று ஒவ்வொரு செய்தியிலும் சொல்லியிருக்கிறார். விடுதலை எந்த வடிவில் வந்தாலும் எடுத்துக் கொள்பவர். மரணத்தின் வடிவில் வந்துள்ளது. சென்று வாருங்கள் ஞாநி.

– இளங்கோ கல்லணை

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!