ஜென் கதை .. மாணவர்கள் கல்வி - VanakamIndia

ஜென் கதை .. மாணவர்கள் கல்வி

ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார். அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே. எனவே நிதானமாகவும் அதே சமயம் சீடர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் குருவின் இந்த ‘வேகம்’ மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே இருக்கிறாரே’ என்று குற்றம் சாட்டினான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக் காண்பித்து ‘அதைத் தூக்கி வெளியே கொண்டு போய் வை’ என்றார்.

விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன், அதன் கனம் தாங்காமல் தடுமாறி விழுந்தான். எழுந்து கையைத் தட்டிக் கொண்டு, ‘தூக்க முடியவில்லை குருவே. மிகவும் கனமாக உள்ளது’ என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

‘சரி, அந்தக் கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டு போய் வை’ என்றார் ஞானி. அட, நான்கைந்து முறை எடுத்து வைத்ததில், விறகுகள் விரைவில் இடம்பெயர்ந்தன!

‘கண்ணா, உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன் மூளைக்குள் திணித்தால் நீ திணறி விழுந்துவிடுவாய். கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக் கொண்டாயானால் அது நிரந்தரமாக உன் மனதில் தங்கிவிடும்.. நீ கற்ற கல்வி தரமாகவும் இருக்கும்’ என்று விளக்கினார் ஞானி.

மாணவனுக்கு மிக நல்ல பாடமாக அது அமைந்தது!

தொடர்ந்து ஞானி இப்படிச் சொன்னார். நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள். ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்.

ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோல் மேல் போட்டு கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது. எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர். ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.

எப்படி?

‘இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை, என்றான்.

பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும். அத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும். ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல.

எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும். இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல. படித்த பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார்.

– தமிழில் எஸ்-ஷங்கர்

நன்றி.என்வழி.காம்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!