சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்; ஆதரவும் எதிர்ப்பும்! - VanakamIndia

சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்; ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழகத்தில் சுமார் 6 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்தவர் செல்வி ஜெயலலிதா. 2016 ஆம் ஆண்டு உடல்நிலைக்குறைவால் மரணமடைந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபை அரங்கில் வைக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற சட்டசபை சபாநாயகர் தனபால் அனுமதி அளித்தார்.

இன்று காலை ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்தனர் அதிமுக உறுப்பினர்கள். இதனால் இன்று சட்டசபை முழுவதும் மலர்களால் அலங்கரீக்கப்பட்டு கோலாகலமாக காட்சியளித்தது.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் வரவேற்று பேசினார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

சுமார் 7 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட உருவப்படமாக அது அமைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு எப்படி சட்டசபையில் உருவப்படம் அமைக்கலாம் என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்
அறிவுரைக்கிணங்க திமுக உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் யாரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், அதிமுக எம்பிக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு ஆகியோர் வந்திருந்தனர். தமுமுன் அன்சாரி பங்கேற்கவில்லை.

சட்டசபையில் முதல்-அமைச்சரின் இருக்கைக்கு பின்புறம் முதல் மற்றும் 2-வது பிளாக் இடையில் உள்ள தூணில் ஜெயலலிதா படம் பொருத்தப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு எதிரே வைக்கப்பட்டு உள்ளது.

இந்த உருவப் படத்தை கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார். பச்சைநிற சேலையில் நிற்பது போல படம் உள்ளது. அதில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை அரங்கில் ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காயிதே மில்லத், அம்பேத்கர், முத்து ராமலிங்கதேவர், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய 10 தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் தற்போது 11-வதாக ஜெயலலிதாவின் படமும் வைக்கப்பட்டுள்ளது. முதல் பெண் தலைவராக அவரது படம் இடம்பெற்றுள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!