கனடாவில் ஜனவரி இனி தமிழ் மரபு மாதம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது! - VanakamIndia

கனடாவில் ஜனவரி இனி தமிழ் மரபு மாதம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது!

ஓட்டாவா(கனடா): 2017ம் ஆண்டு முதல் கனடாவில் ஜனவரி மாதம் ’தமிழ் மரபுத் திங்கள்’ என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதற்கான மசோதா பாராளுமன்றத்துல் அக்டோபர் 5ம் தேதி அனைத்துக் கட்சியினரின் ஏகோபித்த ஆதரவு மூலம் நிறைவேறியது.

ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தனி நபர் மசோதாவாக இதை முன்மொழிந்தார். மே 20ம் தேதி மற்றும் செப்டம்பர் 29 ம் தேதிகளில் விவாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

அனைத்துக் கட்சியினர் ஆதரவு

அனைத்துக் கட்சியையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் கனேடியர்கள் நாட்டு வளர்ச்சிக்காக கனடா முழுவதும் ஆற்றிவரும் பங்களிப்பை சுட்டிகாட்டினர்.


அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்கள் என அறிவிப்பதன் மூலம், கனேடிய சமூகத்திற்கு தமிழ்-கனேடியர்கள் ஆற்றியுள்ள பங்களிப்புக்களையும், தமிழ் மொழியினதும் பண்பாட்டினதும் செழுமையையும், தமிழ் மரபுபற்றிய அறிவையும் புரிந்துணர்வையும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊட்டவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கவேண்டும் என்பது இந்த அவையின் கருத்தாகும்,” என எம்-24 முன்மொழிவு தெரிவிக்கிறது

ஸ்காபரோ-தென்மேற்று தொகுதியின் லிபரல் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரின் பாராளுமன்ற செயலருமான பில் பிளாயர் உரையாற்றுகையில் மிசிசாகா, டேர்கம், ஒட்டாவா, டொரன்டோ, மார்க்கம், ஏஜக்ஸ், பிக்கரிங் உள்ளிட்ட நகரசபைகளும், ஒன்டாரியோ மாநிலமும், டொரன்டோ கல்விச்சபையும் ஏற்கனவே ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

“இது எமது பொருளாதாரத்திற்கும், ஏனைய துறைகளிற்கும் தமிழ் சமூகம் தொடர்ந்தும் ஆற்றிவருகின்ற அளப்பரிய பங்களிப்புக்களிற்கு தெளிவான சான்று,” என அவர் கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மசோதாவின் முக்கியத்துவத்தை ஆதரித்து வரவேற்றனர்.

’தமிழர்களின் உயிர்ப்பான பண்பாட்டையும், மரபுகளையும், நீண்ட வரலாற்றையும் சக கனேடியர்களுக்கு வெளிக்காட்டவும், அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்த மசோதா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்” என மார்க்கம்-யூனியன்வில் தொகுதிக்கான கன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் பாப் சொரோயா தெரிவித்தார்.

இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவிப்பது ’கனடா பல்வகைமையால் பலம் பெறுகிறது’ என்பதை ஏற்றுக்கொள்வதை நோக்கி முன்வைக்கப்படும் இன்னொரு அடி என வான்கூவர்-கிழக்கு தொகுதியின் என்.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜெனி குவான் முன்மொழிவை ஆதரித்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

தமிழில் பேசிய ஹரி ஆனந்தசங்கரி

பாரளுமன்ற உரையின் போது ஹரி ஆனந்த சங்கரி தமிழிலும் பேசினார் (வீடியோவில் 4:15 நிமிடத்தில் காணலாம்). அவரது உரையில் தமிழ்மொழி இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஆட்சி மொழியாகவும், இலங்கையில் தேசிய மொழியாகவும், தமிழ் நாட்டு அரசின் ஆட்சி மொழியாகவும் உலகமெங்கும் அறிந்த மொழியாக விளங்குகிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கனியன் பூங்குன்றனாரின் உலகப்புகழ்பெற்ற முழக்கத்தையும் கூறி விவரித்தார்.

மசோதா வெற்றிக்கு பிறகு ’தமிழ்-கனேடியர்கள் நாடு தழுவிய வகையில் சமூகத்திற்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புக்களையும், தமிழ் மொழி, தமிழ்மரபு மற்றும் பண்பாட்டின் செழுமை அங்கீகரிக்கும் வரலாற்று மைல்கல் இது’ என ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.

The Canadian Parliament has passed a bill and announced that January is the month of Tamil Tradition.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!