அமெரிக்கத் தமிழர்களுக்கு 'ஜல்லிக்கட்டு' தேங்க்ஸ் கிவிங்! - VanakamIndia

அமெரிக்கத் தமிழர்களுக்கு ‘ஜல்லிக்கட்டு’ தேங்க்ஸ் கிவிங்!

ரிச்மண்ட்(யு.எஸ்): அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை ‘Thanks Giving’ நாள் என்று கொண்டாடப் படுகிறது. முதன் முதலாக அமெரிக்காவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் பஞ்சத்தாலும் பட்டினியாலும் அவதிப்பட்ட போது, பழங்குடி அமெரிக்கர்கள் தங்கள் கைவசம் இருந்த சோளம் மற்றும் உணவுப் பொருட்களைக் கொடுத்து உதவினார்களாம். அதற்கு நன்றி தெரிவிப்பதற்க்காவே ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளை தேர்தெடுத்தார்கள் என்று கூறப்படுகிறது.

நாளடைவில் தேங்க்ஸ் கிவிங், குடும்பத்தினர் ஒன்று கூடி கொண்டாடும் ஒரு திருவிழா போல் ஆகி விட்டது. அடுத்த நாள் ப்ளாக் ஃப்ரைடே என்று வணிகப்பெருநாள் ஆகவும் மாறிவிட்டது.

இந்த ஆண்டு தேங்க்ஸ் கிவிங் நாளில், ஜல்லிக்கட்டுக்காக போராடிய அமெரிக்கத் தமிழர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி என்று, அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற கவிதா பாண்டியன் கூறியுள்ளார்.

இது குறித்து ஃபேஸ்புக் மூலம் அவர் கூறியுள்ளதாவது:

”அமெரிக்கத் தமிழர்களுக்கு வணக்கம், நவம்பர் 20ம் தேதி அமெரிக்கத் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான நாளாக நான் கருதுகிறேன். கடந்த ஆண்டு இதே தேதியில் ரிச்மண்ட் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முதலாவது விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சுமார் 70 பேர் வந்திருந்தார்கள்.

அமெரிக்காவில் இருந்தாலும், எப்படி நாம் ஆதரவு திரட்டுவது என்று பேசினோம். இந்திய அரசின் தூதரகங்களில் மனு அளிக்க முடிவு செய்தோம். அமெரிக்காவின் பிற நகரங்களிலும் ஆதரவுக் கூட்டங்கள் நடத்த ஊக்குவிப்போம், உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதி பூண்டோம்.

அடுத்து, உலகத் தமிழ் அமைப்பு மூலம் கார்த்திகேயே சிவசேனாபதியுடன் ஒரு தொலைபேசி வழி கலந்துரையாடல் நடந்தது. பல ஊர்களிலிருந்தும் பங்கேற்றனர். நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் அருகே உள்ள காளை அருகில் அடையாள ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு கூட்டங்கள் / போராட்டங்கள் ஊடகங்கள் வழியாக தமிழ்நாட்டுக்கும் சென்றது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் பெரும் எழுச்சியை உருவாக்கியது. அமெரிக்காவில் தமிழர்கள் வசிக்கும் ஊர்களில் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுக் கூட்டங்கள் / போராட்டங்கள் நடந்தது. அமெரிக்காவில் உள்ள அனைத்து இந்தியத் தூதரகங்களிலும் தமிழர்களின் மனுக்கள் குவிந்தன. இறுதியில் அரசுகள் பணிந்தன. ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழர்கள் வென்றார்கள்.

அமெரிக்க மண்ணில் ஜல்லிக்கட்டு விழிப்புணர்வுக்காக தன்னார்வத்துடன் முன்வந்து போராடிய தமிழர்களை இன்று நினைவு கூர்ந்து நன்றி தெரிவிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். நவம்பர் 23ம் தேதி, அமெரிக்காவில் Thanks Giving அனுசரிக்கப்படுகிறது. நன்றி தெரிவிப்பதற்கென்றே அடையாளம் காணப்பட்ட நாள்.

அனைத்து அமெரிக்கத் தமிழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறவேண்டும். நாட்டு மாட்டினங்கள் காக்கப்பட வேண்டும். விவசாயிகள் வளம் பெற வேண்டும். தமிழர்கள் சிறப்புற வேண்டும். தொடர்ந்து இணைந்து பயணிப்போம். இதயப்பூர்வமான நன்றிகள்”

என்று கவிதா பாண்டியன் கூறியுள்ளார்.

தேங்க்ஸ் கிவிங் நாளை ஒட்டி, ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு போராட்டம் தொடங்கப்பட்டதால் இரண்டிற்கும் இயல்பான தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!