ஓடும் அமெரிக்க நதியில் ஒரு ஜல்லிக்கட்டு ! - VanakamIndia

ஓடும் அமெரிக்க நதியில் ஒரு ஜல்லிக்கட்டு !

சான் அண்டோனியோவில் அனைத்து இந்தியர்களும் ஒருங்கிணைந்து நடத்தியதுதான் “சிட்டி தீபாவளி”. இந்த வருடம் தீபாவளி 9 ஆவது ஆண்டு விழா !ஒவ்வொரு வருடமும் டெக்சாஸின் பல பகுதிகளிலிருந்து இந்திய அமைப்புகள் விழாவில் கலந்து கொள்வர்.

சான் அண்டோனியோவின் ‘லா விலிட்டா’ நதியில் படகு பரேட் தான் விழாவின் சிறப்பு அம்சமாகும் .ஒவ்வொரு அமைப்பும் ஒரு அலங்கரிக்கப்பட்ட படகில் வரிசையாக குடியரசு தின பரேட் போல் வருவார்கள். தொடர்ந்து நதிக்கரையில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்

இந்த ஆண்டு, மாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணிவரை விழா நடைபெற்றது. தற்காலிக உணவு ஸ்டால்கள்,வித விதமான நகை, உடை ஸ்டால்கள் என களைகட்டியது!

மதியமிருந்தே பார்வையாளர்கள் நூற்றுக்கணக்கில் கூட ஆரம்பிக்க, ஒரு மாத கடின உழைப்பில்,நம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும்,மிகவும் முயன்று வெளிக்காட்டிய அந்த ‘படகு ஊர்வலம்’தொடங்கியது !

வண்ணங்களில் இத்தனை வண்ணங்களா ?என வியக்குமளவுக்கு,படகுகளின் அலங்காரமும்,அதன் மேலே ஆனந்தத்தாண்டவமாடியபடி வந்த ஆண்களும்,பெண்களும் நம்மை மிகவும் வியப்பிலார்த்தினர் ! அதை பார்த்த நம் மக்களோடு, அமெரிக்கர்களும் ரசித்து,கத்தி உற்சாகப்படுத்தினர்.

ஒவ்வொரு படகாக,கர்நாடகா, கேரளா. ஆந்திர பிரதேசம் , மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ,குஜராத் என ஆரவாரத்துடன் அணிவகுக்தனர். பாரதியே கூறிய,”யாமறிந்த மொழிகளிலே,தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”என தமிழ் கேட்க, தவமிருக்கையில்,,”ஆளப் போறான் தமிழன் “என தேன் வந்து பாய்ந்தது காதினிலே.

தாவணி போட்ட அந்தப் பெண், அடுத்து வருவது ‘தமிழ் நாடு’ என அறிவிக்கவே, அந்த மரம் செடி கொடிகளின் மறைவிலிருந்து, நமது சங்ககால பாரம்பரிய, ஆடவர் வீரம் பிரதிபலிக்கும் ‘ஜல்லிக்கட்டை ‘ முன்னிலைப்படுத்தி, அட,,டாடா,,வாடிவாசல் திறந்துவிட்டது போல,அடக்கமுடியாத முரட்டுக்காளையுடன்,நம் தமிழ் சங்க வீரர்கள் மற்றும் வீர தமிழச்சிகளும்,ஆடிப்பாடிக்கொண்டு வந்தார்கள்..

வெற்றிக்களிப்புடன் அந்த படகில்,நம்ம சூப்பர் ஸ்டாரின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்,ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ என அட்டகாசமாகப் பயணித்தது..கண் கொள்ளா காட்சிதான் !! அசல் முரட்டுக் காளையாகவே உலா வந்த குமார் வீரப்பன் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும் !

படகு ஊர்வலம் முடிந்து,அனைத்து மாநில கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. பார்வையாளர்களுக்கு விருந்தளித்த, அனைத்து இந்தியர்களுக்கும் மனதாரப் பாராட்டுக்கள்! பிரேம் குமாரின் சிறந்த நடனப் பயிற்சியின் மூலம், நம் தமிழ் மக்கள்,கடந்தகால,நிகழ்கால மற்றும் எதிர்கால சிந்தனைகளை,நடனத்தில் வெளிக்காட்டினர். விசில்களும் கைத்தட்டல்களும் காதைப் பிளந்தன.

கண்கள்,செவிகளோடு வயிற்றுக்கும் விதவிதமான உணவுகளோடு,ஏதோ, மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு போய் வந்தாற்போல ஒரு உற்சாகத்தை அளித்தது !

-ஷீலா ரமணன்.டெக்சாஸ்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!