சீமானின் ரஜினி எதிர்ப்புக்கு பின்னால் இருப்பது அதிமுகவா? பாஜகவா? - VanakamIndia

சீமானின் ரஜினி எதிர்ப்புக்கு பின்னால் இருப்பது அதிமுகவா? பாஜகவா?

சென்னை: அன்புமணி ராமதாஸ், வேல்முருகனை விட சீமான், ரஜினி அரசியலுக்கு வரவே கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். ஐயா ரஜினி என்று மிகவும் மரியாதையாக அழைப்பது போல் இருந்தாலும், அவருடைய குரலுக்கு பின்னால் வேறு அரசியல் இருப்பதாகத் தெரிகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதை ’வரவேற்கிறேன்’ என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லிவிட்டு அவர் வேலையில் பிசியாகி விட்டார் மு.க.ஸ்டாலின். அடுத்து ரஜினி அவரைப் பாராட்டிப் பேசியதற்கும். ‘மகிழ்ச்சி’ என்று கூறிவிட்டு அடுத்த வேலைக்குச் சென்று விட்டார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர், விஜயதாரணி, நக்மா என அனைவருமே அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் என்று கூறியதோடு, காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொல். திருமாவளவனும் ரஜினியின் அரசியலை வரவேற்றுள்ளார். அன்புமணி ராமதாஸின் நிலைப்பாடு ஊரறிந்தது.

தமிழ்நாட்டை ஆளும் அதிமுக சார்பில் பெரிதாக யாரும் சொல்லவில்லை. ஆனால், ரஜினி கட்சி ஆரம்பித்தால் பெரும் சேதம் அதிமுகவுக்குத்தான் இருக்கும். ஜெயலலிதாவுக்குப் பிறகு சரியான தலைமை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கட்சி தற்போது சின்னத்தையும் இழந்து நிற்கிறது.

இந்நிலையில் ரஜினியின் புதிய கட்சியால் அதிமுவின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய ஓட்டை விழும் என்பது நிச்சயம். அடுத்த தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போய்விடக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம்.

ஆனால் அதிமுக பெரிய அளவில் ரஜினியை எதிர்க்காமல் மவுனம் காத்து வருவது கேள்விகளை எழுப்பியுள்ளது. அதே சமயத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு நடராஜனை (சசிகலா) சீமான் பல தடவை சந்தித்துப் பேசியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.

மிகப் பெரிய தொகை சீமான் தரப்புக்கு கை மாறியுள்ளதாகச் சொல்கிறார்கள். இனி வெளிநாட்டுத் தமிழர்களின் பணம் தேவையில்லை என்னும் அளவுக்கு பணத்தால் குளிப்பாட்டப் பட்டுள்ளார்களாம்.

அதிமுக சார்பில் தான் சீமான், தீவிர ரஜினி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. வெளிநாட்டுப் பண விவகாரத்தால் மத்தியில் ஆளும் பாஜகவின் தூண்டிலிலும் சீமான் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கும் ரஜினியின் தனி ஆவர்த்தனத்தில் உடன்பாடு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சீமானின் குரல் மற்ற கட்சிகளுக்காகத்தான் என்பதுதான் சென்னை அரசியல் வட்டாரப் பேச்சாக இருக்கிறது.

– வணக்கம்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!