‘மெர்சல்’ தமிழ்சினிமாவின் தவறான முன்னுதாரணம்!? - VanakamIndia

‘மெர்சல்’ தமிழ்சினிமாவின் தவறான முன்னுதாரணம்!?


“ஆத்தா…ஆலமரம் சாஞ்சு பாத்திருக்கேன்…அரண்மனை அழுது பார்த்ததே இல்ல தாயி,”ன்னு அறுவடைநாள் படத்தில் ஒரு டயலாக் வரும். இந்த டயலாக், அப்படியே தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கும் பொருந்தும்!

பொதுவாக தேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு படத்தை வெளியிடுகிறது என்றாலே கொடுக்கிற காசு வீண்போகாது என்று பி அண்ட் ஸி தியேட்டரில் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கும் தெரியும். நாற்பதாண்டு காலம் கட்டிவைத்த அந்த நம்பிக்கையை மெர்சலாகியத்தில் பெரும் பங்கு இளையதளபதி விஜய்க்கும் இயக்குநர் அட்லிக்கும் உண்டு.

விஜய்க்கு நாற்பது கோடி, அட்லிக்கு பதிமூணு கோடி, புதுசா புராஜெக்ட் டிஸைனர் என்று ஒரு கேட்டகிரி போட்டு அவருக்கு சில கோடிகள்! தேனாண்டாள் பிலிம்ஸ், விஜய் இருவரும் சேர்ந்து படம் பண்ண எதுக்கு டிஸைனர்?! அதுக்கப்புறம் ஹீரோயின்கள் சம்பளம் இன்னபிற என்று கணக்குப் பார்த்தால் ஆர்ட்டிஸ்ட் டெக்னிஷியன் சம்பளம் மட்டுமே கிட்டத்தட்ட எழுபது கோடி வரை!அதன் பிறகு தயாரிப்பு செலவு என தயாரிப்பாளரின் பணத்தை தண்ணியாக இறைத்திருக்கிறார் இயக்குநர் அட்லி!

விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் படத்திற்கு இதெல்லாம் நியாமான செலவுதானே என்று நீங்கள் கேட்கலாம். ஐம்பது படங்களைக் கடந்த விஜய்க்கு எது நியாமான செலவு என்பது கூடவா தெரியாது?

ஒரு ஒரு உதாரணம் மட்டும்- படத்தில் விஜய் தொடர்பான ஒரு கார் சேஸிங் ஸீன், வெளிநாட்டிற்குப் போய் அந்தக் காட்சிக்காக மட்டும் நான்கு கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார் இயக்குநர். அதில் ஒரு ப்ரேம் கூட படத்தில் இடம் பெறவில்லை! இதுபோல் படம் முழுக்க அட்லி செய்த அடாவடிகள் அநேகம்!

ஒரு வழியாக படம் முடிந்து வியாபாரம் பேசும்போது செலவு செய்த பணத்திற்கான விலை கிடைக்கவில்லை. சென்சார் பஞ்சாயத்துக்கள் ஒரு பக்கம். சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டிய சூழல். பத்து கோடி செட்டில் பண்ணினால்தால் ரிலீஸ் என்ற நிலை. அப்பா ராம நாராயணன் உழைப்பில் உருவான நிறுவனத்திற்கு கெட்ட பெயர் வர, தாமே காரணமாகிவிடக் கூடாது என்று நினைத்த முரளி ஒரு வீட்டை ஐந்து கோடிக்கு அடமானம் வைக்கிறார். அப்படியும் ஐந்து கோடி தேவை என்ற நிலையில் இளையதளபதி தனது சம்பளத்திலிருந்து ஐந்து கோடியைத் திருப்பிக் கொடுக்கிறார். ஒரு வழியாக படம் திரைக்கு வருகிறது.

எதிர்பார்த்தபடி படம் இல்லை என்று டாக் வந்ததும், அதன் பிறகு பிஜேபி ஆட்கள், ஜிஎஸ்டி பஞ்சாயத்தை இழுத்ததும் தமிழ்கூறும் நல்லுலகம் மெர்சலாகி… அப்படி என்னதான் இருக்குன்னு பார்ப்பமே என்று கிளம்பி தியேட்டருக்கு வந்ததால் மட்டுமே தயாரிப்பாளர் முரளி மூச்சுவிட முடிந்தது!

இதன்மூலம் இளைய தளபதி விஜயும், இயக்குநர் அட்லியும் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? தயாரிப்பாளர் முரளியையும் சேர்த்துக்கொள்ளலாம் தப்பில்லை. ‘காம்பினேஷன்’ என்ற ஒற்றை வார்த்தையை நம்பி ஒரு போதும் படம் பண்ணக்கூடாது என்பதுதானே!

அதை இவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு செய்தி; அவ்வளவுதான். அட்லி அடுத்த டிவிடி.. ஸாரி கதை தேடும் பரபரப்பில் இருப்பார். இயக்குநர் முருகதாஸ் ‘காம்பினேஷன்’ல அடுத்த படத்திற்கு தயாராகிட்டார் இளைய தளபதி.

இப்போது இந்தைக்கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படியுங்கள்.

– வீகே சுந்தர்

Year end 2017 analysis on the year’s biggest hit Mersal movie.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!