யானை பேர ஆட்சி... பொறுப்பை தட்டிக் கழிக்கிறாரா ஆளுநர்? - VanakamIndia

யானை பேர ஆட்சி… பொறுப்பை தட்டிக் கழிக்கிறாரா ஆளுநர்?

இன்று ஆளுநரைச் சந்தித்த திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அளித்த பேட்டியில் “சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடிக்கு உத்தரவிட ஆளுநர் விரும்பவில்லை!” என்று கூறினார்கள்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அளித்த பேட்டியிலும் அவ்வாறே கூறினார்.

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மனுக் கொடுத்ததாலேயே நம்பிக்கைத் தீர்மானத்துக்கு உத்தரவிட வேண்டிய சட்டக் கட்டாயம் தனக்கு இல்லை என்று ஆளுநர் கருதலாம்.

ஆனால் அவர் நிர்வாகத்தின் தலைவர். ஆட்சி அந்தரத்தில் தொங்கும்போது அதிகாரிகள் மந்தமாகி விடுகிறார்கள். மக்கள் பணிகள் ஸ்தம்பித்து விடுகின்றன.இந்த நிச்சயமற்ற தன்மையைப் போக்க வேண்டிய கடமை ஆளுநருக்கு நிச்சயம்உண்டு.

அருணாச்சலபிரதேச வழக்கு ஒன்றில் நீதியரசர் தீப்க் மிஸ்ரா தலமையிலான உச்சநீதிமன்ற அமர்வு ஆளுநரின் கடமைகளைத் தெளிவாக வரையறை செய்துள்ளது. ஒரு மாநிலக் கவர்னர் சட்டமன்ற மனச்சாட்சியின் காவலர் அல்ல என்றும் குதிரை பேரத்தை ஊக்குவிக்காத வகையில் அவரது செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்றும் அது இடித்துக் கூடியுள்ளது.

ஆனால் இங்கு நடப்பதோ யானை பேரம்? இத்தகைய நிலையில் ’செய்வதற்கு ஒன்றும் இல்லை!’ என்று ஆளுநர் கையறு நிலையில் காட்சியளித்தால்அது மத்திய பா.ஜ. அரசின் சதியாகவே பார்க்கப்படும். அரசியலில் நிலையற்ற நிலை இருக்கும்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு. அதை அவர் தட்டிக் கழிப்பது தவறு.

மேலும் சட்டமன்றப் பெரும்பான்மை என்பது அவர் யுக்தானுசாரப்படி தீர்மானிக்கும் விஷயம் அல்ல. அது அரசியல் அமைப்புச்சட்டக் கடமை.

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு ஆளுநரும் கடமைப்பட்டவர். அது சட்டமன்றப் பெரும்பான்மையிலிருந்து தான் முகிழ்க்கிறது.

– ஷ்யாம் , மூத்த பத்திரிக்கையாளர்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!