உழைப்பெல்லாம் வீணாப் போச்சே... ட்ராவில் முடிந்த இறுதி போட்டி: தொடரை கைப்பற்றியது இந்தியா! - VanakamIndia

உழைப்பெல்லாம் வீணாப் போச்சே… ட்ராவில் முடிந்த இறுதி போட்டி: தொடரை கைப்பற்றியது இந்தியா!

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் இறுதி போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 536 ரன்களும், இலங்கை 373 ரன்களும் எடுத்தன. 163 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 410 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4–வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 31 ரன்களுடன் பரிதவித்தது.

கடைசி நாள் ஆட்டமான நேற்று தனஞ்ஜெயா டி சில்வாவும், மேத்யூசும் தொடர்ந்து விளையாடினர். சிறிது நேரத்தில் மேத்யூஸ் (1 ரன், 20 பந்து) ஜடேஜாவின் சுழற்பந்தில், ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார். அப்போது இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.

தனங்ஜெயா அதிரடியாக சதம் விளாசினார், தினேஷ் சண்டிமாலும் நிலைத்து நின்று விக்கெட் சரிவிலிருந்து இலங்கையை காப்பாற்றினர்.

அபாரமாக ஆடிய தனஞ்ஜெயா டி சில்வா தனது 3–வது சதத்தை நிறைவு செய்தார். இலங்கை அணியை சிக்கலில் இருந்து மீட்டெடுத்த தனஞ்ஜெயா டி சில்வா தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். வலி அதிகமாக இருந்ததால் வேறு வழியின்றி 119 ரன்களுடன் (219 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ‘ரிட்டயர்ஹர்ட்’ ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து விக்கெட் கீப்பர் நிரோ‌ஷன் டிக்வெல்லா வந்தார். இவரும், ரோ‌ஷன் சில்வாவும் தடுமாற்றமின்றி விளையாட இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்து போனது. இலங்கை அணி 2–வது இன்னிங்சில் 103 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. ரோ‌ஷன் சில்வா 74 ரன்களுடனும் (154 பந்து, 11 பவுண்டரி), டிக்வெல்லா 44 ரன்களுடனும் (72 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 1–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. நாக்பூரில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இரட்டை செஞ்சுரி அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார். அத்துடன் இந்த தொடரில் அதிகபட்சமாக மொத்தம் 610 ரன்கள் குவித்த அவரே தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்து இந்தியா–இலங்கை இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 10–ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!