முதல் முறையாக அமெரிக்கத் தலைநகரில் இளையராஜாவின் இன்னிசை மழை! - VanakamIndia

முதல் முறையாக அமெரிக்கத் தலைநகரில் இளையராஜாவின் இன்னிசை மழை!

ilayaraja news

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைவநகரில் முதல் முறையாக இளையராஜாவின் இசைக் கச்சேரி நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வர்ஜீனியா மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக வருகிறார்.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளவர், பத்மபூஷண், மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா.

முதல்முதலாக அமெரிக்காவில், 2013-ல் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் இசைஞானி இளையராஜா. அதன்பிறகு இப்போதுதான் இசை நிகழ்ச்சிகளை நடத்த மீண்டும் அமெரிக்காவுக்கு வருகை தருகிறார்.

ஆனால் அமெரிக்கத் தலைநகரமான வாஷிங்டனில் அவர் கச்சேரி நடத்துவது இதுவே முதல் முறை. வரும் செப்டம்பர் 25ம் தேதி, இளையராஜா அவர்களின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி அங்குள்ள ஜார்ஜ் மேஸன் பல்கலைக் கழகத்தில் உள்ள ஈகிள் பாங்க் (பேட்ரியாட் சென்டர்) அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியினை ஜிஜி கிரியேஷன்ஸ் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தினர், அரங்க நிர்மாணம் முதல் அனைத்து ஏற்பாடுகளை மிக மும்முரமாகச் செய்து வருகின்றனர், என்று அந்நிறுவனத்தின் சார்பில் முரளி பதி கூறினார். வாஷிங்டன், வர்ஜீனியா மற்றும் மேரிலாந்து மாநிலங்களில் வசிக்கும் இளையராஜாவின் இசைப் பிரியர்களுக்கு இது ஒரு மாபெரும் இசை விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், உலகில் யாரும் செய்திராத அவரது இச்சாதனையைக் கெளரவப்படுத்தும் விதமாகமாகவும் இந்நிகழ்ச்சி அமையவிருக்கிறது. வர்ஜினியா மாநில கவர்னர், அமெரிக்க செனட்டர்கள், நகர மேயர் மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட மாவட்ட, நகரப் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தர இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் அவர்கள் இசைஞானி இளையராஜாவை கெளரவப்படுத்துவார்கள் என்றும் முரளி கூறினார்.

இளையராஜாவுடன் பிரபல பின்னணிப் பாடகர்கள், மனோ, சித்ரா, சாதனா சர்கம், கார்த்திக் மற்றும் பலரும், தவிர, ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைக் குழுவினரும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அவரது இசை நிகழ்ச்சிகள், அமெரிக்காவின் மேலும் நான்கு நகரங்களிலும் – சான் பிரான்சிஸ்கோ, டல்லாஸ், அட்லாண்டா, நியூ ஜெர்ஸி – நடைபெற உள்ளது.

– வாஷிங்டனிலிருந்து கோபிநாத்

Maestro Ilaiyaraaja’s music concert will be held at Washington DC for the first time.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!