மாணவர்களின் புனிதமான ஒரே இடம் நூலகம்! - VanakamIndia

மாணவர்களின் புனிதமான ஒரே இடம் நூலகம்!

சாதாரண மாணவனாக விளங்கிட உதவுவது கல்விக்கூடம் . சாதனை மாணவனாக விளங்கிட உதவுவது நூலகம் .எடிசனை பள்ளிப் படிப்புக்கு தகுதி இல்லை என்று ஆசிரியர் திருப்பி அனுப்பினார் .ஆனால் எடிசனை அவர் அன்னை வீட்டிலேயே நூல்களை வைத்து அறிவுப் புகட்டி அறிவியல் அறிஞர் ஆக்கினார் .

மகாகவி மன்னரை சந்தித்து விட்டு இல்லம் வரும்போது பொன்னோ , பொருளோ ,பட்டோ வாங்கி வரவில்லை . நூல்களையே வாங்கி வந்தார் .அதனால்தான் பாரதி இன்றும் கவிதைகளில் வாழ்கிறார்.அன்று அவர் நூல் வாங்காமல் பொன்னோ, பொருளோ , பட்டோ வாங்கி இருந்தால் மறந்து இருப்போம் .நாம் .மகாகவியாகி இருக்க மாட்டார் .

தந்தை பெரியார் கல்லூரி சென்று படிக்கா விட்டாலும் இராமாயணம் , மகாபாரதம் நன்கு படித்தவர் .கண்ணன் குழந்தையாக இருந்தபோது வெண்ணை திருடியபோதே கண்டித்து இருந்தால் பெரியவனாகி சேலை திருடி இருக்க மாட்டான் என்பார் . காரணம் நூல் அறிவு .

அறிஞர் அண்ணா அவர்களுக்கு கன்னிமாரா நூலகத்தில் உள்ள நூல்கள் எந்த நூல் எங்கு இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர். ஆழ்ந்து படித்தவர் .ஆங்கிலப் பேராசிரியர்கள் கூட்டத்தில் பேசியபோது A,B,C,D என்ற எழுத்துக்கள் வராமல் 100 ஆங்கிலச் சொற்கள் சொல்லுங்கள் என்றார் .பதில் சொல்ல இயலாமல் விழித்தனர் .அண்ணா அவர்கள் ஒரு மாணவனை ONE,TWO,THREE சொல்லச் சொன்னார் NINTY NINE வந்ததும் STOP என்று நிறுத்தச் சொன்னார் HUNDRED சொன்னால் D வந்துவிடும் A,B,C,D என்ற எழுத்துக்கள் வராத ஆங்கிலச் சொற்கள் இவைதான் என்றார் .எல்லோரும் வியந்தனர். காரணம் நூலக நூல் அறிவு .

மாமனிதர் அப்துல் கலாம் செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தி ஆனவர் . இந்தியாவின் கடைக்கோடியில் இராமேஸ்வரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயரக் காரணம் நூல் அறிவு அதனால்தான் குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவிற்கு இராமேஸ்வரம் நூலகரை அழைத்தார் .

சந்திரனுக்கு சந்திராயான் அனுப்பி சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று, அமெரிக்காவின் நாசாவுக்கு முன்பாகவே அறிவித்த முதல் தமிழர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கோவை அருகே உள்ள கோதவாடியில் பிறந்தவர். தமிழ் வழி படித்தவர் . நூலகத்து நூல்களை விரும்பிப் படிப்பவர் .’கையருகே நிலா’ தொடர் எழுதியவர் .’கையருகே செவ்வாய் ‘ தொடர் எழுதுபவர் .

ஈரோட்டில் பிறந்து இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்ந்து இருக்கும் நீதியரசர் சதாசிவம் நூலகத்தை நேசிப்பவர் .நூல்களை விரும்பிப் படிப்பவர்.

சிறந்த எழுத்தாளரும் , சிறந்த சிந்தனையாளரும் ,சிறந்த பேச்சாளருமான முனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப . அவர்கள் நூலை நேசிப்பவர் , சுவாசிப்பவர், 40 நூல்களின் ஆசிரியர் .

இப்படி வெற்றிபெற்ற மனிதர்கள் , சாதனையாளர்கள் அனைவருமே நூலகத்தால் உயர்ந்தவர்கள் .

புலி ஒன்று மனிதனை விரட்டியது .ஓடிச் சென்று ஒரு மரத்தில் ஏறி தப்பித்தான் .மரத்தில் இருந்த குரங்கு அவனுக்கு பழங்கள் தந்து உதவி அடைக்கலம் தந்தது .குரங்கிடம் நான் பசியோடு உள்ளேன் அந்த மனிதனை தள்ளி விடு.நான் சாப்பிட்டு விட்டு போய் விடுகிறேன் .நீ தப்பித்துக் கொள் என்றது .

அதற்கு குரங்கு என்னை நம்பி வந்துள்ளான் .தள்ள மாட்டேன் என்றது . குரங்கு தூங்கியதும் மனிதனிடம் புலி குரங்கை தள்ளி விடு என்றது. உடன் மனிதன் சிறிதும் யோசிக்காமல் குரங்கை தள்ளி விட்டான்.குரங்கு மரத்திற்கு மரம் தாவும் பழக்கம் இருப்பதால் தள்ளி விட்டதும் மற்றொரு மரம் தாவி பிழைத்தது . குரங்கை நன்றியின்றி தள்ளி விட்ட மனிதன் நூலகம் செல்லும் பழக்கம் இல்லாதவன் .அதனால்தான் நன்றி மறந்தான் .

புறாக்கள் குடும்பமாக கோவில் கோபுரத்தில் வாழ்ந்தன. குடமுழுக்கு வருவதை ஒட்டி வண்ணம் தீட்டினர் .புறாக்கள் தேவாலத்திற்கு இடம் பெயர்ந்தன .அங்கு வாழ்ந்தன .பின் அங்கும் இயேசு பிறந்த தினம் வருவதை முன்னிட்டு வண்ணம் தீட்டினர் .புறாக்கள் மசுதிக்கு இடம் பெயர்ந்தன .அங்கு வாழ்ந்தன .

மனிதர்கள் மதச் சண்டை ,கடவுள் சண்டை ,சாதிச் சண்டை போடுவதைப் பார்த்து குட்டிப்புறாக்கள் தாய்ப்புறாவிடம் கேட்டன. அம்மா மனிதர்கள் ஏன் ? இப்படி அடித்துக் கொள்கிறார்கள் .தாய்ப்புறா சொன்னது அதனால்தான் மனிதர்கள் கீழ் வாழ்கிறார்கள் .நாம் மதச்சண்டை, சாதிச் சண்டை போடுவதில்லை அதனால் உயரத்தில் வாழ்கிறோம் .

சீப்பு வியாபாரி தன் மூன்று மகன்களில் யாரிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்பதை தீர்மானிக்க . மூன்று மகன்களை அழைத்து புத்த மடத்தில் சீப்பு விற்று வாருங்கள் .என்றார். புத்த மடத்தில் உள்ள மொட்டை தலைகளிடம் என்னால் சீப்பு விற்க முடியாது என்று முதல் மகன் போக மறுத்து விட்டான். இரண்டாம் மகன் புத்த மடம் சென்று புத்த பிச்சுகளிடம் சீப்பு தலை வார மட்டுமல்ல அரித்தால் சொரியவும் உதவும் என்று எடுத்துச் சொல்லி 50 சீப்புகள் விற்று வந்தான் .

மூன்றாம் மகன் தலைமை புத்த பிச்சுவை சந்தித்து புத்தரின் போதனையான ‘ ஆசையே அழிவுக்குக் காரணம் ‘ என்பதை சீப்பில் பதித்துத் தருகிறேன் . வரும் பக்தர்களுக்கு வழங்குங்கள். அவர்கள் சீவும் போது தினமும் புத்தர் போதனையைப் படித்து விடுவார்கள் .கடைப்பிடிக்க முயலுவார்கள் என்றான் .5000 சீப்பு கொண்டு வரச் சொன்னார் . சீப்பு வியாபாரி தன் மூன்றாம் மகனிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.மூன்றாம் மகன் நூலகம் செல்லும் வழக்கம் உள்ளவன் .

நேர்மறை சிந்தனைகள் வளர்ப்பது நூலகம் .பண்பாடு ஒழுக்கம் வளர்ப்பது நூலகம் .மனிதனை மனிதனாக வாழ வைப்பது நூலகம் .இன்று பெரும்பாலான பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளையே எடுத்து விட்டனர் .அதனால்தான் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் .ஊடகங்களும் மாணவர்கள் மனதில் அளவிற்கு அதிகமான வன்முறை நஞ்சை விதைத்து வருகின்றன .

பள்ளி மாணவர்கள் குடிப்பதற்காக பள்ளியில் இருந்த மரப் பலகைகளை திருடி விற்ற அவலமும் நடந்தது. பள்ளி மாணவன் ஆசிரியைக் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்தது.பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரை கொலை செய்த கொடூரம் நிகழ்ந்தது .

மாணவர்களின் அறிவுத் திறனை கல்விக்கூடங்கள் வளர்க்க வில்லை என்பதையே இவைகள் உணர்த்துகின்றன .

நூலகம் என்பது கடல் !
கல்விக்கூடம் என்பது சிறு ஆறு !
இந்துக்கள் இராமேஷ்வரம் புனித இடம் என்பார்கள் !
இஸ்லாமியர் நாகூர் தர்கா புனித இடம் என்பார்கள் !
கிறித்தவர்கள் வேளாங்கண்ணி புனித இடம் என்பார்கள் !
எல்லோருக்கும் புனிதமான ஒரே இடம் நூலகம் என்பேன் .

– கவிஞர் இரா .இரவி

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!