எம்ஜிஆர், ரஜினி, இலவசம் இல்லாமல் எத்தனை தேர்தல்களில் திமுக வென்றது? - VanakamIndia

எம்ஜிஆர், ரஜினி, இலவசம் இல்லாமல் எத்தனை தேர்தல்களில் திமுக வென்றது?

ரஜினி அரசியலில் ரசிகனின் பங்கு என்ன? அனுபவத் தொடர் – பகுதி 4

டிசம்பர் 31ம் தேதி தலைவர் ரஜினியின் பேச்சைக் கேட்டு சாதாரண நிலைக்கு திரும்ப பல நாட்கள் தேவைப்பட்டது. புத்தாண்டு பரிசாக ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கைக்கான அறிவிப்பையும் வெளியிட என்னைப் போன்ற ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனோம் என்பது தான் உண்மை.

ஆனாலும் 95ம் ஆண்டு இருந்த மனநிலையுடன் ஒப்பிட்டால், இப்போது மிகவும் நிதானத்துடன் இருப்பதாகவே உணர்கிறேன். 95-96ல் உணர்ச்சிப் பெருக்கு அதிகம் இருந்ததே தவிர, அரசியல் எதார்த்தங்களை அறிந்திருக்க வில்லை. அரசியலில் எப்படி வெற்றி சாத்தியமாகிறது என்பதை தெரிந்திருக்க வில்லை. அரசியல் சூட்சமம் என்பது யாரோ ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று நம்பியிருந்த நாட்கள் அவை..

நான் முன்னமே சொன்னது போல் 91ம் ஆண்டு ஜெயலலிதாவின் வெற்றியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை தான். அவருக்கு தலைவர் ரஜினி நேரில் சென்று வாழ்த்தியதும், அவருடைய முதல் ஆண்டு ஆட்சியில் ஜெயலலிதாவின் துணிச்சலை பாராட்டியதும், தலைவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற முடிவுக்கு என்னை வர வைத்தது.

அண்ணாமலை படத்திற்கு முன்னால் திருச்சி ரசிகர்கள் நேற்று இன்று நாளை என்று எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினி படங்களை போஸ்டரில் ஒட்டிய போது நடந்தது தான் ஜெயலலிதா ஆட்சியின் முதல் கோணல். தலைவர் அரசியலுக்கு வரும் சூழல் எதுவுமே இல்லை. ஆனால் என்னைப் போல் சில ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவார் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் இருந்தோம். அப்படிப்பட்டவர்களில் சிலர் வெளியிட்டது தான் அந்த போஸ்டர்.

அதை அப்படியே விட்டு இருந்தால், யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். ஜெயலலிதாவுக்கு நல்லது செய்வதாக நினைத்து போஸ்டர் ஒட்டிய ரசிகர்களை தாக்கினார்கள். அது தலைவர் ரஜினிக்கு பெரும் வருத்தத்தையும், கோபத்தையும் கிளறியது உண்மை. ஆனாலும் ரசிகர்களை பணயம் வைக்க வேண்டாம் அமைதி காத்தார். தன்னுடைய எதிர்ப்பை அண்ணாமலை படத்தின் மூலம் தெரிவித்தார்.

அண்ணாமலை மாபெரும் வெற்றி, தலைவர் மீதான அரசியல் ஆர்வத்தை ரசிகர்களுக்கு மேலும் கூட்டியது. ஆனாலும் அவர் விலகியே இருந்தார். தொடர்ந்து ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் தமிழகம் முழுவதும் செய்து வந்த அடாவடிகள் அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. தலைவர் ரஜினிக்கும் தான். தலைவரை போயஸ் தோட்டம் வீட்டுக்கு சந்திக்க வந்த ரசிகர்களும் அந்த அடாவடிக்குள்ளானர்கள். பாதுகாப்பு என்ற போர்வையில் ரசிகர்கள் போயஸ் தோட்டம் வருவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் அரங்கேறியது. தன்னால் ரசிகர்கள் சிரமத்திற்கு உள்ளாக வேண்டாம் என்று தான் தினம் தோறும் நடத்தி வந்த ரசிகர் சந்திப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார் தலைவர்.

இந்த பரபரப்புகள் அரசியலை உற்று நோக்கும் ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. முந்தய தேர்தல்கள் வரலாற்றைப் பற்றி மூத்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய வாரப் பத்திரிக்கைகளில் அரசியல் செய்திகளை தேடிப்படித்தேன்.

ஒரு உண்மை புலப்பட்டது. 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியைப் பிடிக்க 1967ம் ஆண்டு வரை கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. அதாவது காமராஜர் தானாக முன்வந்து முதல்வர் பதவியிலிருந்து விலகிய1963ம் ஆண்டுக்குப் பிறகு தான் திமுகக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும், இளைஞர்களுக்கு வழி விடுகிறேன் என்று காமராஜர் காரணம் கூறியிருந்தார். பக்தவச்சலம் முதல்வராக இருந்து 1967ல் தேர்தலை சந்தித்துள்ளார்.

முதல்வர் போட்டியில் காமராஜர் இல்லை. எம்.ஏ படித்த பட்டதாரி, பக்தவச்சலத்தையும் விட இளையவர் அண்ணாதுரை எதிரணியில் முதல்வர் வேட்பாளர். ஒரு வகையில் காமராஜரின் ‘இளையவர்களுக்கு வழி விடுகிறேன்’ தவறாக புரிந்து கொள்ளப் பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. அன்றைய நிலையில் திமுக முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதுவும் குறிப்பிடத் தக்கது.

எல்லாவற்றையும் விட மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுகவில் பிரச்சார பீரங்கியாக இருந்தார். எம்ஜிஆர் விலகிய பிறகு திமுக ஆட்சியைப் பிடிக்க, அவரது மறைவு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 1987ம் ஆண்டு, இரண்டாக பிளவு பட்ட அதிமுக, காங்கிரஸ், திமுக என 4 முனைப் போட்டியில் திமுக வென்றது.

அடுத்து 1996ல் தலைவர் ரஜினியின் ஆதரவுடன் திமுக – தமாகா கூட்டணி வென்றது. 2006ல் முதன் முதலாக இந்திய வரலாற்றில் இலவசங்களை வாரி இறைத்து திமுக வென்றது.

இதன் பின்னணி என்ன? ஏன் திமுக மற்ற தேர்தல்களில் வெல்ல முடியவில்லை?. காங்கிரஸ் ஏன் தமிழகத்தில் முற்றிலும் சரிந்தது.? ஆராயத் தொடங்கினேன். அரசியல் புலப்படத் தொடங்கியது. அதில் நம் தலைவரின்
அரசியல் வெற்றி ரகசியமும் அடங்கி இருக்கிறது. விவரங்களை விரிவாக பேசுவோம்..

அனுபவம் தொடரும்…

– முருகேசன்

Author: admin
Tags

Comments (1)

  1. ராஜிவ்காந்தி says:

    மிக்க மகிழ்ச்சி.நான் வசிப்பது கிராமம் தான் எங்கு பார்த்தாலும் ரஜினி பேச்சாகவே இருக்கின்றது.அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!