அது யாரோட பணம்? கட்சி ஆரம்பிக்கும் முன்னாடியே கமல்ஹாஸனின் ரூ 30 கோடி ஊழல் அம்பலம்!! Exclusive - VanakamIndia

அது யாரோட பணம்? கட்சி ஆரம்பிக்கும் முன்னாடியே கமல்ஹாஸனின் ரூ 30 கோடி ஊழல் அம்பலம்!! Exclusiveசென்னை:
டிஜிட்டல் இந்தியாவில் ட்விட்டர் மூலம் அரசியலில் குதித்த கமல்ஹாசன், 30 நாளுக்குள் முப்பது கோடி ரூபாயை எப்படி வசூலித்தார்… அதை என்ன செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது?.

நவம்பர் 7ம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடிய கமல் ஹாசன், அதற்கு முன்னதாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதாவது, அவருடைய அரசியல் கட்சிக்கு 30 கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது என்றும் அதை ரசிகர்களிடம் வசூலிப்பேன் என்றும் கூறியிருந்தார். அந்தப் பணத்தை மக்களுக்காகவே செலவிடப் போவதால், ரசிகர்களிடம் பணம் வாங்குவதற்காக எந்தவித அவமானமும் கிடையாது என்று காரணம் வேறு சொன்னார். இதையே ரஜினிகாந்த் கூறியிருந்தால் இந்த இணைய வெத்துப் போராளிகள் எப்படியெல்லாம் பொங்கியிருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

போகட்டும்…

அதே நவம்பர் மாத மத்தியில், ரசிகர்களிடமிருந்து 30 கோடி வசூலாகிவிட்டதாக தெரிவித்த கமல் ஹாசன், மனசை மாற்றிக் கொண்டாராம். அதாவது அந்தப் பணத்தை கட்சிக்காக செலவிடப் போவதில்லை. சட்டப்படி கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதால் பணத்தை வைத்துக் கொள்வதும் சட்டப்படி குற்றமாகும் எனவே அதை ரசிகர்களிடமே திருப்பிக் கொடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

’30 கோடி வந்து விட்டதாகவும் அதை வைத்துக் கொள்வது சட்டப்படிக் குற்றம்’ என்று கமல்ஹாசன் சொல்லியிருப்பதை அடிக்கோடிட்டு குறித்துக் கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டிலே யாரு வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், நிதி வசூலிக்கலாம். இதென்னய்யா குத்தம் என்று பொதுவாக சொல்லக்கூடும். ஆனால் உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தால் இதில் ஏராளமான விவகாரங்கள் வெளிவரக்கூடும்.

முதலாவதாக ஒரு கேள்வி. கட்சி ஆரம்பிக்க 30 கோடி ரூபாய் தேவை என்று கமல்ஹாசன் எப்படிக் கணக்கு போட்டார்? கட்சி ஆரம்பிப்பதற்கு படத்தயாரிப்பு போல் பட்ஜெட் போட முடியுமா? அதை தயாரித்தது யார்? என்னென்ன செலவுகளுக்காக அந்த பட்ஜெட்?

அடுத்ததாக, கமல் ஹாசன் அறிவித்த பத்து, பதினைந்து நாட்களுக்குள் 30 கோடி வசூலாகி இருக்கிறது. இது முதலாவது கேள்வியை இன்னும் வலுவாக்குகிறது. அவர் 30 கோடி பட்ஜெட் போட்டார் என்றால், கச்சிதமாக ரூ 30 கோடி வசூலாகிவிடுமா? சரியாக 30 கோடி வந்தவுடன் ரசிகர்கள் பணம் அனுப்பவதை நிறுத்திவிடுவார்களா? அது ஏன் 31 கோடி ரூபாயாகவோ அல்லது இருபத்திஎட்டரை கோடியாகவோ வசூலாகவில்லை. ரொம்ப கரெக்டா அவரு போட்ட பட்ஜெட்க்கு ஏற்ப 30 கோடியை ரசிகர்கள் வந்து கொட்டிவிட்டார்கள் என்று சொல்வது காதில் பூ சுற்றும் வேலை அல்லவா?

சரி… கமல்ஹாசன் ஹைடெக் பார்ட்டி. கம்ப்யூட்டரெல்லாம் வச்சுருப்பாரு இல்லே. அப்போ ஏதாவது வெப்சைட் மூலமா வசூலிச்சாங்களா? அல்லது ஆழ்வார்பேட்டையில் மெகா சைஸ் உண்டியல் வச்சு ரொக்கமா வசூலிச்சாங்களா? எப்படி இந்த தொகை வசூலாச்சுன்னு எந்த விவரமும் இல்லாமல் 30 கோடி வந்துடுச்சுன்னு சொல்றாரே. அதிலே சந்தேகமே வரலயா? கேஷா வந்துச்சா, பேங்கிலே நேரடியா டெப்பாசிட் ஆச்சா? இதெல்லாம் வருமான வரித்துறைக்கு தெரியுமா? முக்கியமா, ஆ ஊன்னா லைவ், பிரேக்கிங்னு டென்ஷனாக்கும் மீடியாவுக்கு, கமல் ஹாஸன் என்றதும் கண் மூடிப் போய் விட்டதா?

பணத்தை திருப்பித் தருகிறேன்னு சொல்லி 15 நாளுக்கு மேல் ஆகிடுச்சு. பணம் திரும்பிப் போயிடுச்சா? எந்த வங்கி மூலமா பட்டுவாடா ஆச்சு அல்லது கேஷா திருப்பிக் கொடுத்தார்ன்னா வவுச்சர்லே கையெழுத்து வாங்கியிருக்காங்களா? 30 கோடி ரூபாய் பரிவர்த்தனை என்பது சாதாரண விஷயம் அல்லவே.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவருடைய தோழி சசிகலாவுக்கும் கிடைச்ச தண்டனைக்கு காரணமான தொகை ரூ 60 கோடி ரூபாய். அதிலே பாதித் தொகையை கமல்ஹாசன் 30 நாட்களுக்குள் வசூல் செய்து திருப்பிக் கொடுத்துட்டார்னா, யார் யார்கிட்டே வசூல் செய்தார், யாருக்கெல்லாம் திருப்பிக் கொடுத்தார் என்ற விவரத்தை பப்ளிக்கா வெளியிடட்டுமே.

ஊழல்வாதிகளை தண்டிக்கத் துடிக்கும் கமல் ஹாசன், 30 கோடி ரூபாய் வசூல் மற்றும் திருப்பிக் கொடுத்த விவரத்தை முதலில் வெளிப்படையாக சொல்லட்டும்.

கமல் ஹாசனின் 30 கோடி ரூபாய் என்பது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது சுமத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட 60 கோடி ரூபாயில் பாதித் தொகை.. தனி நபர் கணக்குப் பார்த்தால் அவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு தலா 15 கோடி கணக்குத்தான் வருகிறது. இங்கே கமல் ஹாசனின் 30 கோடி ரூபாய் தனி நபர் கணக்காக இரட்டிப்பு தொகை.

பணத்தை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று சொல்லித்தானே, திருப்பித் தருகிறேன் என்கிறார். அரசியல் கட்சிகள் நன்கொடைகளை வெளிப்படையாக காட்டவேண்டும் என்பதுவும் சட்டம்தான்!. யாரிடமிருந்து 30 கோடி வந்தது, எப்படி வந்தது, எப்படி திருப்பி வழங்கப்பட்டது என்பதை வெளிப்படையாக அவருடைய ‘ஆப்’ மூலமாகவே ‘விசிலடித்து அறிவிக்கட்டும்.

தமிழுக்காக அமெரிக்காவுக்கு பணம் அனுப்புகிறார். கோவில் கொள்ளையர்களை தாக்குவேன் என்கிறார். அறப்போர் இயக்கத்தின் ஊழல் ஒழிப்பை பாராட்டுகிறார். அதுக்கெல்லாம் முன்னாடி, ஒழுங்கா 30 கோடிக்கு கணக்கு காட்டட்டும். அப்புறம் கமல் ஹாசன் ஊழல் ஒழிப்பைப் பத்தி பேசலாம்!

ஊழலை ஒழிக்க தகவல் அறிவோர் சட்டம் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் அறப்போர் இயக்கம் கமல் ஹாசனின் 30 கோடி ரூபாய் உண்மையையும் வெளியே கொண்டு வரட்டும்!

இல்லாவிட்டால் கமலுக்கு பெயர் மிஸ்டர் 30 கோடி என்றே நிலைத்துவிடும்!

– ‘ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Comments (1)

  1. S ganesan says:

    Can I join like a freelance
    __________

    Welcome

    Contact: vanakkamindia@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!