'வெளிநாடு வாழ் தமிழர்கள் அங்கிருந்தபடியே தமிழருக்கு உதவுங்கள்... வாய்ப்பை பயன்படுத்துங்கள்!' - VanakamIndia

‘வெளிநாடு வாழ் தமிழர்கள் அங்கிருந்தபடியே தமிழருக்கு உதவுங்கள்… வாய்ப்பை பயன்படுத்துங்கள்!’

ஆஸ்டின் (யு.எஸ்): ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி டெக்சாஸ் தலைநகரான ஆஸ்டின் மாநகரத்தில் நடைபெற்றது. ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், சான் அண்டோனியோ தமிழ்ச் சங்கம், ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி , மத்திய டெக்சாஸ் தமிழ் கழகம், , ஹார்வர்ட் தமிழ் இருக்கை டெக்சாஸ் கிளை, SaveTamilNaduFarmer இணைந்து நடத்திய இந்த விழாவில் இரு நகரங்களிலிருந்தும் தமிழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் கலகலப்பூட்டின. நடனம், நாடகம், கரோக்கி பாடல்கள் என களைகட்டியது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிறுவனர் டாக்டர் விஜய் ஜானகிராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ் மொழியை பேணிக்காப்பதற்கும், தமிழ் மொழியின் வரலாற்றை ஆய்வு செய்து அதன் தொன்மையை நிலைநாட்டுவதற்கும் ஹார்வர்ட் தமிழ் இருக்கை உறுதுணையாக இருக்கும் என்றார்.

ஒரிசா பாலு தமிழர்கள் ஆமையின் கடல்வழித் தடத்தைக் கொண்டு, உலகெங்கும் சென்று வணிகம் செய்தும், குடியேறியும் வந்த வரலாற்றை எடுத்துரைத்தார். அதற்கு சான்றாக உலகெங்கும் இன்றளவிலும் இருக்கும் தமிழ்ப் பெயர்கள் கொண்ட நகரங்களைப் பட்டியலிட்டார். ஆமைகள் பிரசவத்திற்கு பிறந்த இடத்திற்கு வருவதை குறிப்பிட்ட பாலு, தமிழ்ப் பெண்களும் பிறந்த வீட்டிற்கு பிரசவத்திற்கு செல்லும் வழக்கத்தை சுட்டிக் காட்டினார். தமிழர்கள் வாழ்வில் ஆமை முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.

கார்த்திகேய சிவசேனாபதி பேசுகையில், ’தமிழகம் எதிர்கொண்டுள்ள இன்னல்களை பட்டியலிட்டார். அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்கள், தமிழக நலன்களுக்காக பல வகையிலும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார்கள். அது நெகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளார்கள். சிலர் இயற்கை விவசாயத்தை ஏற்கனவே தொடங்கியும் விட்டார்கள்.

வெளிநாட்டுத் தமிழர்கள் விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனாலும் மொத்த சேமிப்பையும் விவசாயத்தில் போட்டு விட வேண்டாம். மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே விவசாயத்தில் முதலீடு செய்யுங்கள். இன்னும் சிலர், தமிழகம் திரும்பி வந்து முழு நேர விவசாயம் செய்ய விருப்பம் தெரிவிக்கிறார்கள்.

அவரவர் சொந்த விருப்பம் என்றாலும், என்னைப் பொருத்தவரையில் வெளிநாடுகளில் வசித்துக் கொண்டே தமிழக நலனுக்காக உதவியாக இருங்கள் என்று தான் கேட்டுக் கொள்வேன். உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி வெளிநாடுகளிலும் தமிழர்கள் செழிப்புடன் வாழ்ந்து தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் உலகமெங்கும் பரவச் செய்யுங்கள்’ என்று கூறினார்.

கவிதா பாண்டியன் தமிழக கிராமப்புறங்களில் விவசாயிகள், மாணவர்கள், மற்றும் பள்ளிக் கட்டமைப்புகளுக்காக SaveTamilNaduFarmer மற்றும் OurVillageOurResponsibility அமைப்புகளின் சேவைகளை விவரித்தார்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் டெக்சாஸ் ஒருங்கிணைப்பாளர் வெற்றிச் செல்வன், டெக்சாஸில் தமிழர்களின் ஆதரவையும் , அடுத்தடுத்த தொடர் முயற்சிகளையும் எடுத்துரைத்தார்.

ஆஸ்டின், யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ் பேராசிரியர் டாக்டர். ராதாகிருஷ்ணன் சங்கரன், ஹார்வர்ட் தமிழ் இருக்கை மற்ற பல்கலைக் கழங்களில் தமிழ் இருக்கை அமைய பெரும் ஊக்க சக்தியாக விளங்கும் என்றார்.

இது ஆஸ்டினில் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான அறிமுக விழா தான் என்றும், அடுத்து இன்னொரு பிரம்மாண்டமான நிதியளிப்பு விழா நடத்த உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், சான் அண்டோனியோ தமிழ்ச் சங்கம் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி, மத்திய டெக்சாஸ் தமிழ் கழகம்,, ஹார்வர்ட் தமிழ் இருக்கை SaveTamilNaduFarmer தன்னார்வலர்கள் இணைந்து செய்திருந்தார்கள். மணி அனைவரையும் வரவேற்றார். இன்பாவும் பவித்ராவும் தொகுத்து வழங்கினார்கள். அசோக் நன்றியுரை ஆற்றினார்.

Austin Tamil Sangam, San Antonio Tamil Sangam, Austin Tamil School and San Antonio Tamil School came together, conducting a fund raising awareness event for Harvard Tamil Chair. Dr. Vijay Janakiraman, Orissa Balu, Karthikeya Sivasenapathy, Dr. Radhakrishnan Sankaran, Kavitha Pandian and Vertiselvan spoke on the occasion.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!