ஹார்வர்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறுகிறது... அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஸ்டன் வருகை! - VanakamIndia

ஹார்வர்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறுகிறது… அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஸ்டன் வருகை!

சான் ஃப்ரான்சிஸ்கோ: உலகத் தமிழர்களின் பெரும் கனவான ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிறைவேறுகிறது. தமிழ் வளர்ச்சி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இறுதிக் கட்ட நிதி வழங்க பாஸ்டன் வருகிறார். சென்னையில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்தப் பயணம் குறித்து அமெரிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் அபு கானிடம் தொலைபேசியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அபுகான் நம்மிடம் தெரிவித்த விவரம் வருமாறு.

அமைசர் மாஃபா பாண்டியராஜன் அமெரிக்க மேற்கு நேரம் 4 மணி அளவில் தொலைபேசியில் அழைத்து மிகவும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்.

“ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிதி முழுவதும் திரட்டப்பட்டு விட்டது. அந்த தொகையை வழங்குவதற்காக பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் பாஸ்டன் புறப்படுகிறேன்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள அழைத்தேன். இரு தினங்கள் மட்டுமே பாஸ்டனில் தங்குவதால், இப்போது சான் ஃப்ரான்சிஸ்கோ வர இயலவில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் அமெரிக்கா வர வாய்ப்பு உள்ளது. அப்போது அங்கு வருகிறேன்” என்று அமைச்சர் கூறினார்.

அமைச்சரின் இந்த தகவல் என்னை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 2015ம் ஆண்டு இதே வளைகுடாப் பகுதியில், ஃபெட்னா விழாவில் ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றி முதன் முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அதிமுக அரசுக்கு, அமெரிக்க அதிமுக சார்பில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் மாபெரும் பாராட்டு விழா நடத்த உள்ளோம். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உட்பட அமைச்சர் பெருமக்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

– இவ்வாறு அமெரிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் அபுகான் தெரிவித்தார்.

உலகத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பொங்கல் பரிசாக ‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ கனவு நனவாகி உள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!