குஜராத்... பாஜகவுக்கு பயம் காட்டிய காங்கிரஸ்! - VanakamIndia

குஜராத்… பாஜகவுக்கு பயம் காட்டிய காங்கிரஸ்!

அகமதாபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றம் பாஜகவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

கடந்த தேர்தலில் 61 இடங்களை மட்டும் பெற்றிருந்த அக்கட்சி, இந்த தேர்தலில் 77 சட்டமன்ற இடங்களைப் பெற்றுள்ளது. பாஜக 90 இடங்களுடன் மெஜாரிட்டிக்கு சற்று கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக இன்னும் 10 இடங்கள் கிடைத்திருந்தாலும் பெரும் இழுபறியை பாஜக சந்தித்திருக்கும்.

இந்தத் தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு நகர பகுதியே கைகொடுத்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி கிராம பகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

அதேபோல் சவுராஷ்டிரா பகுதியிலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

சவுராஷ்டிரா பகுதியில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. இதில் 29 இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. பா.ஜனதா 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நகரம் மற்றும் சிறு நகர பகுதிகளில் பா.ஜனதாவுக்கு அமோக ஆதரவு இருந்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 73 தொகுதிகள் நகர பகுதியில் அமைந்துள்ளன. இதில், பா.ஜனதா 55 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரசுக்கு 18 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

கிராம பகுதிகளில் மொத்தம் 109 இடங்கள் உள்ளன. அதில், 62 இடங்களில் காங்கிரசும், 43 இடங்களில் பா.ஜனதாவும் வெற்றி பெற்றுள்ளன.

பட்டேல் சமூக தலைவரான ஹர்திக் பட்டேல் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததாக இந்த சமூகத்தினரின் ஓட்டு பெருமளவு காங்கிரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஓட்டுகள் காங்கிரசுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.

ஏனென்றால் நகர பகுதிகளில் உள்ள பட்டேல் சமூகத்தினர் பா.ஜனதாவுக்கு ஓட்டு அளித்துள்ளனர். அதே நேரத்தில் கிராம பகுதி பட்டேல் சமூகத்தினர் மட்டுமே காங்கிரசுக்கு ஓட்டு அளித்திருக்கிறார்கள்.

வடக்கு குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் அதிகமாக வசிக்கிறார்கள். எனவே, காங்கிரசுக்கு இங்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சவுராஷ்டிரா பகுதியில் கிடைத்த வெற்றி போல் வடக்கு குஜராத்திலும் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்திருந்தால் குஜராத்தில் அது திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கும்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!