GK Vasan alliance with Rajini is not a surprise

ரஜினியுடன் ஜிகே வாசன் இணையாவிட்டால் தான் ஆச்சரியம்! பாஜகவுக்கு இங்கு என்ன வேலை?

சமீப காலமாக சில மீடியாக்கள் பாஜக ரஜினியை இயக்குகிறது, நிர்பந்தப்படுத்துகிறது, கட்டுப்படுத்துகிறது என்பன போன்ற செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. ரஜினி என்ற ஆளுமை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் அரசியல் வருகையால் பல பேர் தூக்கம் தொலைத்துள்ளனர் என்பதை நாடறியும். அதுபோல பாஜகவின் இமேஜ் மிக மோசமான நிலையில் உள்ளது. ரஜினியை பாஜகவுடன் இணைத்து செய்தி வெளியிட்டால், மக்களுக்கு ரஜினி மீது வெறுப்பு அதிகமாகும் என்ற நினைப்பில் இஷ்டம் போல் எழுதியும் பேசியும் வருகிறாரகள். அவர்கள் சார்ந்துள்ளா கட்சிகள் தான் இந்த மீடியாவை இப்படி இயக்குவது போல் தெரிகிறது.

ரஜினி பாஜக இருவரையும் ஒரே கொள்கை உடையவர்கள் என சித்தரிக்க முயலும் மீடியாக்கள் படும் பாட்டை பார்த்தால் அவர்கள் பாணி சிரிப்பு தான் வருகிறது. பாஜக ஒரு மதவாத கட்சி, முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் , இந்து மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்கள். ரஜினி இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால் என் கடவுளுக்கு மதம் இல்லை என்று 25 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வெளிப்படையாக அறிவித்தவர். சங்கத் தமிழர்கள் முருகன், கொற்றவை(அம்மன்), மாயவன் என தெய்வங்களை வழிபட்டவர்கள்.அப்போது அங்கே மதம் இல்லை. ரஜினியின் கூற்றுக்கு சங்க இலக்கியமே சான்றாக உள்ளது.

ரஜினி ஒரு தூய்மையான ஆன்மீகவாதி. எல்லா மதங்களையும் மதிப்பவர். அதை சினிமாக்களிலும் நிஜ வாழ்க்கையிலும் நிருபித்துள்ளார். வில்லனை பாகிஸ்தான் தீவிரவாதியாக காட்டாத ஹீரோ இங்கு உண்டென்றால் அது ரஜினி மட்டுமே. கோவை குண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றவர். ஜீசஸை தனது பரம குருவாக ஏற்றவர்.இவரை எப்படி பாஜகவின் ‘இந்துத்துவா என்ற ஒரே மதம்’ தத்துவதுடன் ஒப்பிடமுடியும்?

ரஜினி ஒரு சூப்பர்ஸ்டார் என எப்படி ஒரு குழந்தைக்கு கூட தெரியுமோ அப்படி தான் அவர் ஆன்மீக வாதி என்பதும் அனைவருக்கும் பரிச்சயம். அதனாலதான் கடவுளுக்கு பயந்த நேர்மையான அரசியலை “ஆன்மீக அரசியல்” என குறிப்பிட்டார். இது சாதி மதம் இல்லாதது எனவும் அழுத்தமாக சொன்னார். சில அறிவு ஜீவிகள் இதை குழப்பிக்கொண்டனர் அல்லது மற்றவர்களை குழப்பி வருகின்றனர் . இங்கு கட்சி நடத்துபவர்கள் சாமி கும்பிடாதவர்களா என்ன ?

கேமராவுக்கு முன் திராவிட அரசியலை யாரும் அழிக்க முடியாது என கூறிவிட்டு, பின்னால் தன் மனைவியை சிறப்பு பூஜைக்கு அனுப்புவார்கள். அதுவும் அவர்களின் கட்சி ஆட்சியை பிடிக்க செய்த பூஜை வேறு. இன்னொருவர் ஊரில் உள்ளவர்களின் தாலியை அறுத்து போராட்டம் செய்வார், ஆனால் தன் மனைவி வீட்டில் சுமங்கலி பூஜை நடத்துவதை வேடிக்கை பார்ப்பார். ஒருவர் ஹெலிகாப்டரில் சென்று யாகம் நடத்திய கதையெல்லாம் உண்டு. யாருக்காக இந்த திராவிட, நாத்திக நாடகம் என அவர்களுக்கும் தெரியவில்லை, யாருக்கும் தெரியவில்லை.

இவர்கள்தான் இப்படி என்றால் இவர்களை சப்போர்ட் செய்யும் மீடியாக்கள் பல அதிமேதாவிதனமான வேலைகளை செய்துவருகிறது. வாசகர்களை ஆறு அறிவுடைய ஜீவனாக இவர்கள் நினைப்பதே இல்லை.லீவு போட மாணவர்கள் சொல்லும் கதை போல இருக்கிறது இவர்கள் சொல்லும் கதை. “ஆட்சியை கலைக்க கவர்னரை நிர்பந்திக்கிறார் ரஜினி” என செய்தி வெளியிட்டது ஒரு ஊடகம். எவ்வுளவு அபத்தமான கற்பனை? ரஜினி எப்படி கவர்னரை நிர்பந்திக்க முடியும் ? சராசரி அறிவு உள்ளவர்களுக்கு கூட நகைச்சுவையான பதிவு அது. இன்னொரு மீடியா, “ஜி .கே வாசனை ரஜினியுடன் இணைய சொல்லி பாஜக நிர்பந்தம்” என எழுதுகிறது, விட்டால் சோனியா காந்தியை ரஜினியுடன் இணையச் சொல்லி நிர்பந்தம் என எழுதுவார்கள் போல.

வாசன் யார்? பரம்பரையாக காங்கிரஸை சேர்ந்தவர். மேலும் ரஜினி-மூப்பனார் உறவு பற்றி இங்கு யாருக்குமே தெரியாதா என்ன? அப்படியே வாசன் இணைந்தாலும் அல்லது ஆதரவு தெரிவித்தாலும் அதற்கு காரணம் அவருடைய தந்தை ஜி.கே மூப்பனாருக்கும் ரஜினிக்கும் உள்ள உறவு தான். பாஜகவுக்கும் அதற்கும் சம்மந்தம் கிடையாது என்பது தமிழ்நாட்டில் வசித்து வரும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

இப்படி அர்த்தமே இல்லாத, முட்டாள்தனமான, பிஜேபி வெறுப்பை ரஜினியிடம் திருப்பி விடும் நோக்கத்துடன் மட்டும் சில மீடியாக்கள் செயல்படுகின்றன. முதலில், ரஜினியை யாரும் கட்டுப்படுத்தவோ, நிர்பந்தப்படுத்தவோ முடியாது.இந்தியாவில் மோடி, சோனியா உட்பட அணைத்து கட்சி தலைவர்களிடமும் ரஜினிக்கு பழக்கம் உண்டு. மோடியே நேரில் வந்து ஆதரவு கேட்டபோது கூட, மீடியா முன்பு, இது நட்பு ரீதியான சந்திப்புதான் என தைரியமாக சொன்னவர்.

காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவை டெல்லி போய் சந்தித்துள்ளார். கருணாநிதியை வீடு தேடிச் சென்று பார்த்து வருகிறார். ஜெயலலிதாவை வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். மூப்பனார் வீட்டுக்கு எத்தனை தடவை சென்றார் என்று கணக்கெல்லாம் எடுக்க முடியாது. ஆனால் எந்த ஒரு பாஜக தலைவர் வீட்டுக்காவது சென்று சந்தித்துள்ளாரா?. அத்வானியும் மோடியும் தான் ரஜினி வீடு தேடி வந்தனர். மீடியாக்கள் வசதியாக மறந்து விட்டு கட்டுக்கதைகளை அரங்கேற்றி ரஜினியை வீழ்த்த முயற்சிக்கின்றனர்.

ரஜினியின் நடவடிக்கைகளோ, ஒரு தேர்ந்த, படித்த அரசியல்வாதியின் செயல்களை மிஞ்சும் வரையில் இருக்கிறது . ஒவ்வொரு ஊரிலும் இதுவரை நடத்த பட்ட கேம்ப்களில் நல்ல கூட்டம் சேர்கிறது.பெண்கள் ஆதரவு பற்றி சொல்லவே தேவையில்லை, அபரிதமான ஆதரவு என்பதே உண்மை. தமிழ்நாட்டில் அதிக பெண் தொண்டர்கள் உடைய கட்சியாக கூட வர வாய்ப்பிருக்கிறது. மேலும் இது கிராமங்கள் வரை செல்லும்போது மொத்தம் எவ்வுளவு பேர் இணைவார்கள் என்பதே அரசியல்வாதிகளின் நெஞ்சில் அடைப்பை ஏற்படுத்திவருகிறது.

அரசியல்வாதிகளும் மீடியாக்களும் ரஜினி மீது என்ன முத்திரை குத்த நினைத்தாலும், ரஜினிக்காக மக்கள் குத்த போகும் முத்திரை தமிழக அரசியலை மாற்றப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

-சுப்ரமணி

Author: admin
Tags

Comments (2)

  1. வசந்தன் says:

    அருமை,உண்மை.

  2. Vasanthi raji says:

    The impression with what I first undertook the trust were explained on proper occasion in the discharge of trust…..which will only say that with good intentions contributed towards
    organizations and administration best to goverment of which a very fallible judgement was capable.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!