இந்த செவ்வாய்கிழமை நன்கொடை கொடுத்தால் அதே தொகையை பில்கேட்ஸ்-ம் கொடுக்கிறார்.. தமிழுக்கும்! Exclusive - VanakamIndia

இந்த செவ்வாய்கிழமை நன்கொடை கொடுத்தால் அதே தொகையை பில்கேட்ஸ்-ம் கொடுக்கிறார்.. தமிழுக்கும்! Exclusive

சியாட்டல்: அமெரிக்காவில் தேங்ஸ் கிவிங் நாளை அடுத்து ப்ளாக் ஃப்ரைடே, சைபர் மண்டே என வணிகப் பெருநாளாக அனுசரிக்கப்படுகிறது. அடுத்த நாள் செவ்வாய் கிழமை ‘ கிவிங் ட்யூஸ்டே’ என்று நன்கொடை தினமாக அழைக்கப்படுகிறது.

2012ம் ஆண்டு முதல் கிவிங் ட்யூஸ்டே அமைப்பு உருவாக்கப்பட்டு, பொதுநலன்களுக்காகவும் தேவைப்படுவோர்களுக்காகவும் நன்கொடை கொடுப்பதை ஊக்குவித்து வருகிறார்கள்.

பில்கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன், இந்த குறிப்பிட்ட நாளில் ஃபேஸ்புக் மூலம் 2 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்குகிறார்கள். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் மூலம் நன்கொடை திரட்டப்பட வேண்டும். அதற்கு இணையான தொகையை பில்கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கும்.

நவம்பர் 28, செவ்வாய்கிழமை அமெரிக்க கிழக்கு நேரம் காலை 8 மணி முதல் அமெரிக்க ஹவாய் நேரம் இரவு 11:59 வரைக்கும் கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு மட்டுமே, அதுவும் முதல் 2 மில்லியன் டாலர்கள் வரைக்கு மட்டுமே இணைத் தொகை பொருந்தும்.

எந்த ஒரு ஃபேஸ்புக் பயனாளரும், குறிப்பிட்ட அமெரிக்க 501(C) அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனத்திற்காக இந்த நிதி திரட்டலாம்.

https://www.facebook.com/fundraisers என்ற இணையப்பக்கத்தில் RaiseMoney என்ற பட்டனை க்ளிக் செய்து, பின்னர் NonProfit க்ளிக் செய்தால், விருப்பப்படும் அமைப்புகளை அங்கு தேர்ந்தெடுக்கலாம். ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி வழங்க விரும்பினால் Tamil Chair Inc என்ற பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். என்ன காரணத்திற்காக இந்த நிதி என்றும் குறிப்பிட வேண்டும்.

பதிவு செய்து முடிந்த பிறகு, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பயனாளர் பெயரில் இந்த நன்கொடை விவரம் பதிவாகி, அவருடைய நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பப்படும். நண்பர்களோ அல்லது வேறு எந்த ஃபேஸ்புக் பயனாளரோ நன்கொடை வழங்கலாம். செவ்வாய்கிழமை குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்படும் நன்கொடைக்கு பில்கேட்ஸ் ஃப்வுண்டேஷன் இணைத்தொகை வழங்கும். ஃபேஸ்புக் நிறுவனம் எந்த சார்ஜும் செய்யாது.

இந்த நன்கொடைத் திட்டத்தை, தனிநபர் தேவைக்காகவோ அல்லது நண்பர்களுக்காகவோ கூட உருவாக்கலாம். அதற்கும் இணைத்தொகை உண்டு.

அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு தமிழர்கள் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக இந்த நன்கொடை திட்டத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர். இன்னும் சிலர் தமிழ்ச் சங்கங்கள் உள்ளிட்ட பிற தமிழ் தொண்டு நிறுவனங்களுக்ககாவும் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மாடு வழங்குவதற்காகவும் சிலர் இந்த நன்கொடை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

நண்பர்கள் பதிவு செய்த நன்கொடைத் திட்டத்திற்கோ அல்லது தனியாகவோ பதிவு செய்து, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழுக்கும் , தமிழர்கள் நலனுக்கும் பில் கேட்ஸின் நன்கொடை கிடைக்க தமிழர்கள் எடுத்து வரும் முயற்சி பாராட்டத் தக்கதாகும்

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!