தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பறையிசை... அடுத்த தலைமுறை அமெரிக்கத் தமிழர்கள் அசத்தல்! EXCLUSIVE - VanakamIndia

தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பறையிசை… அடுத்த தலைமுறை அமெரிக்கத் தமிழர்கள் அசத்தல்! EXCLUSIVE

அடுத்த தலைமுறை அமெரிக்கத் தமிழர்களின் பறை இசை

செயிண்ட் லூயிஸ் தேவாலயத்தில் அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் பறை இசைத்து நடனமாடிய காட்சி. உலகில் முதல் முறையாக ஆலயத்தின் வழிபாட்டு இடத்தில் பறை இசைத்து நடனமாடியது இதுவே ஆகும்.

செயிண்ட் லூயிஸ்: அமெரிக்காவில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே தேவாலயத்தில் பறை இசைத்து நடனமாடி புதிய வரலாறு படைத்துள்ளார்கள் அடுத்த தலைமுறை அமெரிக்கத் தமிழர்கள்.

Y2K என்று அழைக்கப்பட்ட 2000ம் ஆண்டு காலக்கட்டம் தொடங்கி, அமெரிக்காவுக்கு பெருவாரியான தமிழ் இளைஞர்கள் கணிணித்துறை வேலைகளுக்காக அமெரிக்கா வந்தார்கள். அவர்களுக்கு திருமணமாகி, அமெரிக்க மண்ணிலேயே குழந்தைகள் பிறந்து பதின்ம வயதுகளில் உள்ளார்கள்.

இந்தக் குழந்தைகள் தமிழ்ப் பள்ளி, தமிழிசை என தமிழ்க் கலாச்சாரத்தின் காவலர்களாக உருவெடுத்து வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. செயிண்ட் லூயிஸ் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கால வழிபாடுகளில் இசைக்கப்படும் ‘Christmas Carol’ என்ற பிரத்தியேக இசைக் கொண்டாட்டத்தில் முதன் முறையாக பறையிசையும் நடனமும் ஆடி அசத்தியுள்ளார்கள், இந்த அடுத்த தலைமுறை அமெரிக்கத் தமிழர்கள்.

எட்டாவது வகுப்பு படிக்கும் 13 வயது ஆதி மற்றும் கனிஷ்க், ஏழாவது படிக்கும் 12 வயது நிலவன், ஆறாவது படிக்கும் 11 வயது ரியா மற்றும் ரிதன்யா ஆகிய ஐந்து குழந்தைகள், முதன் முதலாக ஒரு வழிபாட்டுத் தலத்தில் பறை இசைத்து அதற்கேற்ற நடனம் ஆடி உலக சாதனை புரிந்துள்ளார்கள்.

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தாலும், தொன்மையான தமிழின் இசையை உலக அரங்கில், மிகவும் முக்கியமான கிறிஸ்தவ தேவாலய வழிபாட்டு மேடையில் (Altar) அரங்கேற்றி, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மிகப்பெரிய முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சி செயிண்ட் லூயிஸ் மாநகரத்திலுள்ள , ஓ ஃபாலன் நகர Dardenne Presbyterianதேவாலயத்தில் டிசம்பர் 3, ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது. ஆலயத்தில் அமர்ந்திருந்த அனைத்து அமெரிக்கர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி பாராட்டுப் பெற்றனர். ஆலயம் முழுவதும் கரவொலியால் அதிர்ந்தது. ஐந்து குழந்தைகளில் நிலவன், சிறுவயது முதலே இந்த தேவாலயத்திற்கு வருபவர் என்பதால், பெரும்பாலானோருக்கு அறிமுகமானவர். நிகழ்ச்சி முடிந்தது அனைத்து குழந்தைகளிடமும் அமெரிக்கர்கள் நேரடியாக வந்து பாராட்டிச் சென்றார்கள்.

ஐந்து குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்து தயார் செய்தவர் செந்தில்நாயகி ஆவார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சுந்தரி,யோபு தானியேல் தம்பதியினர் செய்திருந்தனர். அவர்களிடம் , எப்படி இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அமைந்தது என்று கேட்டோம்.

“பெரும்பாலும் அமெரிக்கர்களே நிரம்பிய இந்த ஆலயத்தில், பேராயர் Larry Maley அனைத்து இன மக்களையும் பெரும் அன்போடு நடத்துபவர். பல் மொழி கலைகளையும் ஆதரிப்பவர். அவரிடம் இந்த ஆண்டு Christmas Carol -ல் சிறார்கள் பறையிசைத்து நடனமாட விரும்புகிறார்கள். அனுமதி வேண்டும் என்று கேட்டோம். ஒரு நொடி கூட தாமதிக்காமல், “அப்படியா, நிச்சயம் செய்யலாம், நம் குழந்தைகள் திறமையை ஆராதிக்க வேண்டும் என்றார். மேலும், இது தமிழின் தொன்மையான இசை என்றதும் உற்சாகமாகி விட்டார்”

ஆலய இசை ஒருங்கிணைப்பாளர் Stephanie Liesman ம் பெரும் மகிழ்ச்சியுடன் முக்கியமான வழிபாட்டு நேரத்தில் அரங்கேற்ற வைத்தார். பறையிசையைப் பற்றி அமெரிக்கர்களுக்கு அருமையான விளக்கத்துடன் அறிமுகம் செய்தும் வைத்தார். வழிபாட்டுத் தலங்களில் பறையிசைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்புடன் கூடிய அங்கீகாரமாக கருதுகிறோம்” என்று சுந்தரி,யோபு தானியேல் தம்பதியினர் கூறினார்கள்.

இந்த சிறப்பு வழிபாட்டில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டு பறையிசையை அனுபவித்து பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2014ம் ஆண்டு, மிகவும் தொன்மையான இந்த தேவாலயத்தின் 195 வது ஆண்டு விழா மேடையில், அமெரிக்கப் பறை அணியின் பறையிசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

“இந்த மண்ணில் நிலைத்து வளரும் கலை என்பதை பறை நிகழ்த்திய அடுத்த தலைமுறை அமெரிக்க பறை அணி சிட்டுகள் நிரூபித்தனர். அமெரிக்காவில் அடுத்த தலைமுறை தமிழர்கள், பறையை தன் கையிலெடுத்திருப்பது பறையிசை என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கும் என்பதை உறுதி செய்கிறது” என்று அமெரிக்க பறையிசை அணியின் ஒருங்கிணைப்பாளர் பொற்செழியன் தெரிவித்தார்

இந்த தேவாலய நிகழ்ச்சி, தமிழகத்தில் வழிபாட்டில் பறை இல்லை என்ற குறையையும் போக்கி, புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.

– வணக்கம் இந்தியா EXCLUSIVE

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!