பைனான்சியர் சித்திரவதை தாங்காமல் தற்கொலை செய்த சசிகுமார் மேனேஜர்! - VanakamIndia

பைனான்சியர் சித்திரவதை தாங்காமல் தற்கொலை செய்த சசிகுமார் மேனேஜர்!

சென்னை: இயக்குநர் சசிகுமாரின் உறவினரும் மேனேஜருமான அசோக்குமார் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்குக் காரணம் கடன் மற்றும் வட்டிக் கொடுமை என்பது அவரது தற்கொலைக் கடிதம் மூலம் தெரியவந்துள்ளது.

40 வயதான அசோக்குமார் இன்று அபிராமபுரத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரையுலகில் அவரை பெரும்பாலானோருக்கு நன்கு தெரியும் என்பதால், அசோக்கின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

தனது தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை இரண்டு பக்க கடிதத்தில் விரிவாக நிதானமாக மிக அழகான கையெழுத்தில் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார் அசோக்குமார்.

அதில் கடந்த பத்து ஆண்டுகளாக கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுத்த அனைத்துப் படங்களும் சொன்ன தேதியில் நல்ல முறையில் வெளியாகியுள்ளன. ஆனால் மதுரை அன்புச் செழியனிடம் கடன் வாங்கியதுதான் நாங்கள் செய்த பெரிய பாவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த 7 ஆண்டுகளாக வாங்கிய அன்புச் செழியன் கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார் என்றும், வீட்டுப் பெண்களை, பெரியவர்களை ஆள் வைத்துத் தூக்கி வருவேன் என்றும் மிரட்டியதாகவும் தனது கடிதத்தில் அசோக் குறிப்பிட்டுள்ளார்.

“அதிகார வர்க்கம் (போலீஸ்), ஆள்வோரின் பெரும் புள்ளிகள், சினிமா ஃபெடரேஷன் தலைவர் செல்வின்ராஜ் என அனைவரும் அன்புச் செழியன் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு அவரைத் தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே,” என்று அதில் கூறியுள்ளார்.

கடிதத்தின் இறுதியில், “யாரேனும் ஜிஎன் அன்புச் செழியனுக்கு சொல்லுங்கள். அதிகாரம், அரசு எல்லாவற்றையும் அவர் சமாளிக்கலாம். தனியே இருக்கையில் என்றேனும் தனது மனசாட்சியிடம் பேசச் சொல்லுங்கள். இந்தக் கடிதத்தைக் கூட வெளியே தெரியாமல் அழிக்கும் வித்தை அவருக்குத் தெரியும். நீடூழி வாழ்ந்துவிட்டு அவர் மட்டும் இருக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை அன்புச் செழியன் பல முறை இதுபோன்ற புகார்களுக்கு உள்ளானவர். ஆரம்ப நாட்களில் நடிகைகள் சிலர் சொந்தப் படம் எடுக்க இவரிடம் கடன்வாங்கி, படம் தோற்றதால் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி மீண்டனர்.

அன்புச் செழியன் இப்போது பைனான்சியர் மட்டுமல்ல, கோபுரம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பாளராகவும் உள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!