Farmers deprived by the system and government

பத்து ஏக்கர் சம்சாரியின் ஆண்டு வருமானத்தை ஒரே நாளில் சம்பாதிக்கும் கமிஷன் ஏஜெண்ட்.. விவசாயம் செழிக்குமா?

விசாரித்துவிட்டேன். இன்றைய வருமான நிலவரம் என்னன்னு. பிச்சைக்காரர் தட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக நூறு ரூபாய் விழுகிறது. குப்பை பொறுக்குபவரின் ( முறையாக நகராட்சிகளில் அள்ளுபவர் அல்ல) வருமானம் இருநூறு ரூபாய். ஒரு ஏக்கர் மட்டுமே வைத்து நெல் பயிரிடுபவரின் வருமானம் மூன்று மாத உழைப்புக்குப் பின்னர் ஒரு நாளைக்கு 66 ரூபாய் 66 பைசா.

அதாவது அரசு வெளியிட்டுள்ள கணக்கின்படி 28 ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டு அதிகபட்சம் மூன்று மாதத்திற்கு பின்னர் 34 ஆயிரம் பெறுவார் நெல் விவசாயம் செய்பவர். வாழை விவசாயம் செய்பவர் பத்து மாதத்தில் ஏக்கருக்கு 60 ஆயிரம் முதலீடு செய்து ஒரு லட்சம் அல்லது ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் ஈட்ட முடியும். இதெல்லாம் தண்ணி மின்சாரம் உரத்தட்டுப்பாடு எல்லாம் இல்லாமல் இருந்தால்.

கரும்பு பயிர் பண்ணுபவர் பத்து மாதத்தில் நாற்பதாயிரம் வரை லாபம் பார்க்க முடியும். எப்படி பார்த்தாலும் ஒரு ஏக்கர் வைத்திருப்பவர் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாதிக்க முடியாதாம். ஆனால் விவசாயக் கூலி நிர்ணயம் ஒரு நாளைக்கு அரசே 203 ரூபாய் வைத்துள்ளது. மானியங்கள் கொடுக்கப்படும் துறைகள் என்னென்ன அதன் லாபங்கள் என்னென்ன முதலீடுகளின் அளவு என்னென்ன என்று விசாரித்துவிட்டேன். கொய்யா போடுங்க பப்பாளி நடுங்க என்று சொல்கிறார்கள். சந்தையில் அவையும் அதிகம் விற்பனை செய்யப்பட்டால் விலை சரியும். கிட்டத்தட்ட இதே நிலைக்கு கொண்டு வந்துவிடுவார்கள். சரியா ?

ஆனால் பாருங்க. ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழைக்காயை அல்லது இலையை விற்பவர் பத்தாயிரம் ரூபாய் கமிசனாக மட்டும் பெறுகிறார். பத்து ஏக்கர் சம்சாரி செய்யும் ஒரு வருட லாபத்தை அவர் ஒரே நாளில் எளிதாக செய்ய முடியும். சந்தையைக் கட்டுப்படுத்தத் தெரியாத விவசாயக் கூட்டம் மடிவது ஒன்னும் ஆச்சரியமல்ல.

கெல்லாக்ஸ் சாப்பிடட்டும், பீசா பர்கர் சாப்பிடட்டும். நமக்கென்ன வந்தது. நமக்கான உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் இந்த சந்தையில் விவசாயிகளின் பிணம் தினம் தினம் விழும். அப்புறம் சொல்லுங்க பாரத் மாதா கி ஜே.

– இளங்கோ கல்லணை

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!