நீட் தேர்வுக்கு எதிராக அமெரிக்கத் தலைநகரில் ’கல்வி உரிமை’ மாநாடு - VanakamIndia

நீட் தேர்வுக்கு எதிராக அமெரிக்கத் தலைநகரில் ’கல்வி உரிமை’ மாநாடு

வாஷிங்டன்: தமிழ் நாட்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ‘கல்வி உரிமை’ மாநாடு நடைபெறுகிறது. உலகத் தமிழ் அமைப்பு சார்பில், சனிக்கிழமை டிசம்பர் 16ம் தேதி, Aldie யில் உள்ள Mercer Middle School வளாகத்தில் காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்தியாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் அறிஞர்கள் பங்கேற்கிறார்கள்

இந்தியாவில் வாழும் தேசிய இனங்களின் கல்வி உரிமைகள் குறித்த கருத்தரங்கு, தலைவர்களின் ஆய்வுரை, குழு விவாதம் ஆகியவை இடம் பெறுகிறது.

இந்தியாவிலிருந்து, ஒய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர், முனைவர் ஏ.கே.இராசன், மேற்கு வங்காளத்தைச் சார்ந்த, இந்திய புள்ளியியல் துறை பேராசிரியர் முனைவர் கார்கா சேட்டர்ஜி, தமிழ் தேசிய இயக்கம் தோழர் தியாகு , பஞ்சாபைச் சார்ந்த எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் தரம் சிங் கொராயா, உத்தர பிரதேசத்தைச் சார்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் குடி உரிமை பரப்புரையாளருமான அஜித் சாகி ஆகியோர் வருகை தர உள்ளார்கள்.

கலிஃபோர்னியா சம உரிமை ஆய்வகத்தின், ஆய்வு இயக்குனர், முனைவர் மாரி ஸ்விக் மைத்ரேயி, மேரிலாந்து பல்கலைக் கழக ஆய்வறிஞர் , முனைவர் முகமது உசைன், ஒக்லஹோமா, புற்றுநோய் மருத்துவர், டாக்டர்.தி. பிரகதீஸ்வர் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழ் மொழியை காப்பது, தமிழர்கள் இழந்த, இழந்து கொண்டிருக்கும் உரிமைகள், தமிழர்களின் நலன் சார்ந்த கொள்கைகள், இந்திய குடியுரிமைச் சட்டத்தை மீறும் மத்திய அரசின் செயல்பாடுகள் போன்றவைகள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை உலகத் தமிழ் அமைப்பு செய்து வருகிறார்கள். அனுமதி இலவசம். உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கத் தமிழர்கள் பெருவாரியாக கலந்து கொள்ள வருமாறு உலகத் தமிழ் அமைப்பு தலைவர் டாக்டர் வி.ஜி.தேவ் அழைப்பு விடுத்துள்ளார்

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!